என் வாழ்க்கை பாடம்

1.K2K - 00002

என் வாழ்க்கை பாடம்

என் வாழ்க்கை ஒரு சுவரசியானமான பயணம் என்று தான் சொல்ல வேண்டும் ஏன்னென்றால் என் வாழ்க்கையிலும் கேலி கிண்டல், தடங்கல், ஏமாற்றம், மனக்கஷ்டம், ஏக்கம் பிரிவு, என நடந்துகொண்டே இருக்கிறது, இது இல்லாமல் எப்படி வாழ்க்கையின் சுவாரசியத்தை அறிய முடியும். நானும் பல கனவுகளோடு காத்திருக்கிறேன். எனக்கு பிடிச்சமாதிரி வாழனும்னு நினைப்பேன்  அதனால் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து வருகிறேன்.

அன்று நான் பள்ளி படிக்கின்ற காலத்தில் எனக்கு கணக்கு பாடம் என்றாலே பிடிக்காது "யார்டா இந்த கணக்கு பாடம் கண்டு பிடிச்சது என கடுப்பாக இருக்கும்" கணக்கு மிஸ் வந்துட்டாலே "அவங்க எடுத்துக்காட்டு கணக்கு சொல்லி கொடுத்துவிட்டு பயிற்சி வினாவை" வீட்டுப்பாடமாக கொடுத்திடுவார். தலையெழுத்தேனு டியூஷன் போறதுனால டியூஷன் மிஸ் அந்த வினாவுக்கு சரியான விடையை கண்டு பிடித்து கொடுத்ததும் அதை அப்படியே ( அடிச்சான் காப்பி) போல பார்த்து எழுதி வீட்டுப்பாடத்தை முடித்து கொடுத்துடுவேன். பள்ளி வாழ்க்கை முடிந்ததும் கணக்கு பாடம் மட்டும் இருக்கவே கூடாது என வேண்டி மகளிர் கல்லூரியில் சேர்ந்தேன் முதல் வருஷம் கணக்கு பாடமே இல்லை தப்பிச்சோம்னு நினைத்தேன் இரண்டாவது வருஷம் போகையில் கணக்கு பாடம் புது ஆசிரியர் வேறயா என நொந்துக்கொண்டேன். முதல் முறையாக பார்க்கும் பொழுது மாணவிகள் அனைவரும் "கடுமையான ஆசிரியர்" என நினைத்தோம். முதல் பருவத் தேர்வு வந்தது கணக்கு பாடத்தை யாரும் சரியாக பண்ணவில்லை. அதில் நான் மட்டும் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தேன்.இதனால் என்மேல் ஒரு நம்பிக்கையை வைத்திருந்தார். மற்ற மாணவிகளிடம் குறைவான மதிப்பெண் பெற்றதற்கு காரணம் என்ன கேட்டு விட்டு எங்களுடன் சில விஷயங்களை மனம் விட்டு, அன்பாக பேசினார் நாங்கள் அதனை புரிந்துக்கொண்டு கவனிக்க ஆரம்பித்தோம் சொல்லி கொடுத்ததை ஆர்வமாக கவனிக்க தொடங்கினோம் வீட்டுப்பாடமாக இரண்டு கணக்குகளை கொடுப்பார். காலையில் சீக்கிரம் வந்து தோழிகளிடம் வாங்கி காப்பி அடித்துவிட்டு முடித்துவிடுவோம். அப்படி இருக்கையில் கணக்கு ஆசிரியர் "வீட்டுப்பாடம் கொடுத்தேனே முடிச்சிட்டீங்களா" என கேட்பாரே தவிர சோதனை செய்யமாட்டார். அந்த எண்ணத்திலே அன்றைக்கு ஒரு நாள் நான் யார்கிட்டயும் நோட்ஸ் கேட்கவில்லை,கணக்கு ஆசிரியர் உள்ளே வந்ததுமே "கொடுத்த வீட்டுப்படத்தை முடிச்சிட்டீங்களா? " என்று கேட்டு கொண்டே சோதனை செய்ய ஆரம்பிச்சிட்டார். முடிக்காதவர்களை எழுந்திரிக்க சொன்னார். ஒரு நபரை தவிர மொத்த வகுப்பும் எழுந்தது அதில் நானும் ஒன்று என்னை பார்த்து "நீயும் முடிக்க வில்லையா?" என கேள்வியை எழுப்பினார்.நான் அதற்கு உடம்பு சரியில்லை என்ற பொய்யை சொல்லி சமாளித்தேன் தனியாக கூப்பிட்டு பேசினார் உடம்பு சரி இல்லாத காரணத்தால் தான் "இரண்டாவது பருவ தேர்வு சரியாக எழுத வில்லையா?" என கேட்டார் .உண்மையில் எனக்கு கணக்கு பாடமே  பிடிக்காது.ஆனாலும் என்மேல் ஆசிரியர் நம்பிக்கை வைத்திருந்த காரணத்தால் அவர்களின் நம்பிகையை வீணாக்காமல் பிறகு கணக்கு பாடத்தை கொஞ்சம்  ஆர்வத்தோடு படித்து சந்தேகமும் கேட்டு கற்றுக்கொண்டு தேர்ச்சி பெற்றேன்.    

நெறி: யாரையும் "ஏளனமாக பார்ப்பதும் பேசுவதும் தவறு"அவர்களுக்குள்ளும் "திறமையும், நல்லெண்ணங்களும் அடங்கி இருக்கும்" என ஒரு போதும் மறவாதீர்கள்..!!!

- லக்ஷ்மி பிரியா

 

 

2.K2K-00004

என் வாழ்க்கை பாடம்:

பள்ளி நாட்களை தவிர ஒரு மனிதன் கல்விப் பாடம் பயிலவும், வாழ்க்கை பாடம் பயிலவும் சிறந்த இடம் உலகில் உண்டா என்று உங்களிடம் கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? என்னிடம் அப்படி யாராவது கேட்டால் ஒரு நொடி கூட வீண் செய்யாமல் ஆமாம் என்று சொல்வேன். ஒரு மனிதனின் ஒழுக்கம், அவன் பண்புகள், அடுத்தவரிடம் பழகும் விதம், பெரியோர்களுக்கு எவ்வாறு மரியாதை அளிப்பது என்று வாழ்வின் பல விடயங்களை நமக்கு பாடம் எடுப்பது பள்ளி நாட்களே. அப்படி நாம் பள்ளி நாட்களில் பயிலும் பல வாழ்க்கை பாடங்கள் பசுமரத்தாணி போல என்றும் மறையாமல் நம்மில் நிலைத்து நின்று விடுகின்றன.

அப்படி எனது நட்பை பற்றிய எனது புரிதலின் மாற்றம் செய்த ஒரு நிகழ்வை இங்கே உங்களிடம் பகிர்கின்றேன். 90களில் பள்ளி நாட்கள் என்பது சொர்க நாட்கள், அதை நினைக்கும் போதே நமது எண்ணங்களில் பலருக்கும் பல நினைவுகள் வந்து ஆக்கிரமித்து கொள்கின்றன. அப்படியொரு வசந்தமான நாட்கள் அவை. ஆனால் அந்த நாட்களில் நாம் பள்ளி செல்லும்போது பலரும் வேண்டா வெறுப்பாகவும், விடுமுறை நாட்களை எதிர்நோக்கியே சென்றோம் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. நட்பை பற்றிய என்னுடைய புரிதலை மாற்றிப்போட்ட நிகழ்வு அது. பள்ளி நாட்களில் நிறைய நண்பர்கள் வைத்திருப்பதும், அவர்களின் தலைவனாக விளங்குவதும் மிகவும் பெருமையாக மாணவர்களால் கருதப்படும் ஒரு நிகழ்வு. எப்போதும் நம்மை சூழ்ந்து அவர்கள் இருப்பார்கள், எங்கு சென்றாலும் நம்முடனே அவர்கள் வருவார்கள்.

நான் ஆறாவது படிக்கும்போது அப்படித்தான் என் வகுப்பிலும் நண்பர்கள் என்னை சூழ்ந்தே இருப்பார்கள். நான் என்ன சொல்கின்றேனோ அதையே செய்வார்கள். எனக்கு அது ஒரு வித கர்வத்தையும், பெருமையையும் தந்தது. நாட்கள் செல்ல செல்ல அவர்களை நான் அடிமைகளாக பாவிக்க ஆரம்பித்தேன். அவர்கள் யாருடன் பேச வேண்டும், பேச கூடாது என்பதையும் நானே முடிவு செய்யும் நிலைக்கு வந்தேன். அதுவே என் பண்பாகவும் மாறிப்போனது. அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளி மீண்டும் தொடங்கியது. புதிதாக ஒரு மாணவன் எங்கள் வகுப்பில் சேர்ந்தான், நானும் ஆரம்பத்தில் எப்போதும் போல பழக ஆரம்பித்தேன். எனோ சிறிது நாட்களில் எனக்கு அவனை பிடிக்காமல் போனது. நான் என்னுடைய மற்ற நண்பர்களுடனும் கண்டிப்பாக சொல்லிவிட்டேன் அவனுடன் பேச கூடாது என்று. அவர்களும் எங்கே நான் அவர்களுடன் பேசாமல் போய்விடுவேனோ என்று பயந்து அவனுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்கள்.

பின்பு சில நாட்கள் கழித்து நான் ஒரு திருமணத்தில் பங்கேற்க ஊருக்கு செல்ல நேரந்தது, ஒரு வார காலம் பள்ளிக்கு விடுப்பு எடுத்து சென்றேன். எனது விடுப்பு முடிந்து பள்ளிக்கு வந்தபோது அங்கு எல்லாமே மொத்தமாக மாறியிருந்தது வகுப்பறையில் நான் நுழைந்ததும் யாரும் என்னுடன் பேசவில்லை என்னுடன் அமர்ந்திருந்தவர்களின் இடங்களும் மாறி வேறு இடத்தில் அமர்ந்திருந்தனர், நான் குழம்பிப் போனேன். பின்பு உணவு இடைவேளையில் நான் என் நண்பர்களுடன் சென்று பேச முயன்றேன் அதற்கும் அவர்கள் பதில் ஏதும் சொல்லாமல் விலகி சென்றார்கள். நான் யாருடன் பேச கூடாது என்று முன்னால் சொல்லியிருந்தேனோ அவனுடன் அவர்கள் மிகவும் நெருக்கம் ஆகியிருந்தார்கள். அது எனக்கு இன்னமும் கோவத்தை அதிகமாக்கியது. முதல் இரண்டு நாட்கள் கோவத்துடனும், வைராக்கியத்துடனும் சென்றன. பின்பு எனக்கு பள்ளிக்கு போகவே பிடிக்கவில்லை, சென்றால் அவர்களை பார்க்க நேருமே என்று வெறுப்புடனே சென்றேன். ஒரு இரண்டு வாரம் கழித்து நான் வேறு வழியில்லாமல் அவர்களிடம் மன்னிப்பு கேட்டேன், எனது தவறை நான் உணர்ந்திருந்தேன். அனைவரும் என் தவறை மன்னித்து மீண்டும் என்னுடன் பேச ஆரம்பித்தார்கள்.

பின்பு அனைவருடனும் நட்புடனும், அன்புடனும் என் பள்ளி நாட்கள் மிக விரைவாக நல்ல நினைவுகளாக நிகர்ந்தன.

"நம்முடன் நெருக்கமாக இருக்கின்றார்கள் என்ற ஒரே காரணத்தால் நம் சொந்த விருப்பு, வெறுப்புகளை அடுத்தவர் மீது திணிக்க எண்ணினால் அவர் நம்முடன் கொண்டிருக்கும் அன்பானதும் இல்லாமல் போகும் நிலைவரும்". "நம் கருத்துக்களையும், விருப்பங்களையும் அடுத்தவர் மீது திணிக்காமல் நம்முடன் வைப்போம்" "சுற்றமும் நட்பும் அன்புடன் நிலைத்திருக்கட்டும்".

விருப்பு வெறுப்பு என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் என்பதை உணர்ந்து நடப்போம்..

இவண்

கடைக்கோடி தமிழன்

மணிகண்டன் கணேசன்

கும்பகோணம் (குடந்தை)

 

 

3.K2K – 00008

துரோகம் - வாழ்க்கைப் பாடம்!!!

அப்போது அவனுக்கு வயது பதினேழு. மேல்நிலைப் பள்ளி படிப்பை முடித்து, ஒரு தனியார் சிறு நிறுவனத்தில் வேலைக் கற்றுக் கொள்வதற்காக சம்பளமின்றி வேலைச் செய்யத்           தொடங்கினான். 

பணம் சம்பாதிப்பதைவிட வேலை கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகம். பணம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம், ஆனால் இந்த 

உலகத்தில் புகழை சம்பாதிப்பது தான் கடினம் என்பது அவன் எண்ணம். ஒரு நாள், அவன் சாலையோரத்தில் 

நின்று தேனீர் அருந்திக்கொண்டிருத்த போது தான், எதிரிலிருந்த கட்டிடத்தின் இரண்டாவது மாடியில், ஒரு டியூசன் சென்டர் தென்பட்டது. “பேசாமல் அதில் பகுதி நேரகணக்குப் பதிவியல் ஆசிரியராய் சேர்ந்தால் என்ன?” என்ற எண்ணம் தோன்றியது. 

உடனே, அங்கு சென்று, தான் கணக்குப்

பதிவியல் பாடம் எடுப்பதாகவும், அதில் 

தனக்கு பரிட்சயம்இருக்கிறதென்றும், சம்பளம் என்று  எதுவும் வேண்டாம் என்றும் சொல்லிவிட்டு அதில் சேர்ந்தான். 

அதுவரை அந்த டியூசன் சென்டர் பார்ப்பதற்கு மிகவும் பழமையாய், எந்தவொரு உட்கட்டமைப்பும் இல்லாமல்இருந்தது. அவன் அங்கு சேர்ந்தது முதல், தன் திறமைகளையெல்லாம் செய்து

 காட்டி, அந்த டியூசன் சென்டருக்கு புதிதாய் ஓர் பெயரிட்டு, 

 வரவு செலவு கணக்குகளை சரிப்பார்த்து, அன்றாடம் மாணவர்களுக்கு ஒரு தத்துவத்தை தகவல் பலகையில்

விளக்கி, வரும் பெற்றோரிடம் அன்பாக பேசி அந்த சென்டரின் பெயரைவெகு வேகமாக உயர்த்தினான். 

அவன் தொலைதூர கல்வியில் இரண்டாம் ஆண்டு இளநிலை வணிகம் பயின்றுக் கொண்டிருந்தபோது, முதுநிலை படித்துக் கொண்டிருந்த ஒரு மாணவிக்கு, கணக்குப்பதிவியல் பாடத்தை சொல்லிக் கொடுத்து, 

அந்தமாணவி அந்த பாடத்தில் நூற்றுக்கு எண்பது மதிப்பெண்கள் பெற்றார், அது மட்டுமில்லாமல், அவன் சொல்லிக் கொடுத்த முதல் பேட்சிலிருந்த பன்னிரண்டாம் வகுப்பைச் சேர்ந்த

 நான்கு மாணவர்களில், இருமாணவர்கள் கணக்குப்பதிவியல் பாடத்தில் இருநூறுக்கு இருநூறு மதிப்பெண் பெற்றனர். இதனால் அவனின் மதிப்பு அங்கு உயர்ந்தது. 

கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் அந்த நிறுவனத்தில் பணிப்புரிந்து எந்த சம்பளமும் பெறாமல், தன்தனித்திறமைகளையும் வளர்த்துக்கொண்டு, நல்ல புகழை சம்பாதித்து வந்தான். அனைத்து பேட்ச்சிலும் குறைந்தது இரண்டு முதல் ஐந்து 

மாணவர்கள் சென்டம் எடுத்து இவனின் புகழை உச்சிக்கு கொண்டுசென்றனர். 

புதிதாக சேர்க்கப்பட்ட ஒரு வகுப்பிற்கு அவனை பொறுப்பாளராக நியமித்தனர். அதன் வரவு செலவு அனைத்தையும் அவனையே பார்த்துக்கொள்ள செய்தனர். வரும் கட்டண வரவுகளை உடனுக்குடன், அங்கிருந்த 

இரண்டு உரிமையாளர்களில் ஒருவரிடம் கொடுத்துக் கொண்டே வந்தான். 

மற்றொரு உரிமையாளருக்கு இந்த விசயம் தெரியாமல், அவன் மீது வீண்பழி சுமத்தி, பணத்தை கையாடல்செய்துவிட்டான்

 என்றுக் கூறி, அவன் மீது சந்தேக 

பார்வையை வீசினர். எதிலும்

 நேர்மையுடனும், புகழைமட்டுமே 

விரும்பும் அவன் மீது இப்படியொரு

 பழியை சுமத்தினால் அவன் உள்ளம் 

எப்படி இருந்திருக்கும்.

அந்த பணத்தை வாங்கிய உரிமையாளர் கூட, அவன் பணத்தை தன்னிடம் 

கொடுத்துவிட்டான் என்பதை மற்றொரு உரிமையாளருக்கு தெரியப்

 படுத்தாமல் போனதுதான் வேதனையான விசயம். அவனும் எல்லாகணக்குகளையும் ஒழுங்காக சமர்பித்து, அதற்கு தகுந்த ஆவணங்களையும் கொடுத்தும், அவர் அவன் மீதுகுற்றம் சுமத்தியவண்ணமே இருந்தார். 

இதற்கிடையில் அவன் பணத்தை 

அவ்வப்போது கொடுத்து வந்த அந்த உரிமையாளரும், தன்னிடம் அவன் எந்தவொரு பணத்தையும் கொடுக்கவில்லை என சொல்லிவிட்டார். ஆனால், அவன், தான் பணத்தை கொடுத்ததற்கான ஆதாரத்தை முன்வைத்தான், அந்த உரிமையாளரின் வங்கி கணக்கில்செலுத்திய ரசீதுகள் 

மூலமாக. 

இதன் மூலம் அவன் கற்றுக் கொண்ட பாடம் என்னவெனில், வெறும்

புகழைமட்டும் எதிர்பார்த்து வேலைசெய்தால், அங்கு துரோகம்

 தலைத் தூக்கும். 

அந்த உரிமையாளரின் துரோக செயல்களால், அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறி, சுயமாய் ஒரு கல்விநிலையம் தொடங்கி, அதை மேம்படுத்தி இன்று வாழ்வில் 

குறைவில்லாத பணமும், ஓரளவு புகழும்அடைந்திருக்கிறான். அவன் பெயர்

 செழியன்.

ஒருவன் தன் வாழ்க்கையில் மெல்ல

 அடியெடுத்து வைக்கும்போது, அவன் 

மீது துரோகம் என்ற அம்பு செலுத்தப்பட்டு விட்டால், நிச்சயம் அவன் வெற்றி அடைந்துவிடுவான். அதற்கு

 இந்த செழியனே உதாரணம். 

துரோகத்தை, பழிவாங்கும் எண்ணமாய் மாற்றிக் கொள்வதைவிட, வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான அடிப்படையாய் மாற்றிக் கொண்டால், 

அனைவரின் வாழ்வும் வெற்றிக்கான 

இலக்கை நோக்கி பயணிக்கும். 

 

அன்பரசு மகாதேவன்

() அகத்தியன். 

பொழிச்சலூர், 

சென்னை 

 

 

4.K2K - 00013

 என் வாழ்க்கை பாடம்

"கற்றது கையளவு, கல்லாதது உலகளவு" என்ற ஒளவையாரின் வாக்கிற்கேற்ப நம்முடைய வாழ்நாள் முடியும் வரை "வாழ்க்கை" என்ற "பள்ளிக்கூடம்" பல பாடங்களை கற்றுத் தந்துக் கொண்டேயிருக்கின்றது. என்னை பொறுத்தவரை, இப்பாடங்களைஅனைத்துமே "சுகமான சுமைகள் தான்"!!!

எனக்கும் என் மூத்த சகோதர சகோதிரிகளுக்கும் இருபத்தைந்து ஆண்டுகள் இடைவெளியில் பெற்றோர்க்கு பிறந்தவள் ஆகையால் அவர்களுக்கு தங்கையாக இல்லாமல் "செல்லப் பிள்ளையாக" வளர்க்கப்பட்டேன். ஆரம்பத்திலிருந்தே அவ்வாறு வளர்ந்ததால் என்னவோ, எனக்கு "அக்கா - தங்கை அண்ணா" போன்ற உறவுமுறைகளை உணராதவளாக இருந்தேன். இதுவே பிற்காலத்தில், நான் திருமணமாகி இரு பிள்ளைகளைப் பெற்றபோது (பெண் ஆண் முறையே) அவர்களை வளர்ப்பதில் ரொம்பவே கஷ்டப்பட்டுருக்கிறேன்.

"தன்னமில்லா அன்பு" எல்லோரையும் வாழவைக்கும் பண்பாகும். அனால் என் வாழ்க்கையில் சில எதிர்மறையான விளைவுகளைத் தோற்றுவித்தன.எனக்கு திருமணம் முடிந்த பொது என் பெற்றோர்க்கு வயதாகி விட்டதால் நானும் என் கணவரும் அவர்களை தனியாக விட மனமின்றி அவர்களுடனே நாங்கள் வசிக்க ஆரம்பித்தோம். ஆரம்பத்தில் என் உடன்பிறப்புகளும் இதை பெரிதாக எண்ணவில்லை, எல்லாவற்றையும் என் பெற்றோரே பார்த்துக்கொண்டதால் குடும்பப்பொறுப்புகளை பற்றி கவலைக்கொள்ளவில்லை. என் மூத்தபெண் பிறந்தவுடன் அவள் என் பெற்றோரின் "செல்லப்பேத்தியாகிவிட்டாள்!" விடுமுறை நாட்களில் மற்ற பேரன், பேத்திகள் (உடன்பிறப்புகளின் பிள்ளைகள்) வீட்டிற்கு வரும்போது லேசான மாணவருத்தங்கள் ஏற்பட்டன.

ஒரு கட்டத்தில் பெரும் சண்டையாக உருவெடுத்த போது நாங்கள் வெளியே வந்துவிட்டோம் அப்பொழுது என் மகனுக்கு வெறும் மூன்றுமாதம் தான் ஆகியிருந்தது முதன்முறையாக எங்களுக்கு எப்படி வாழ்க்கை நடத்தப்போகிறோம் என்று மலைப்பாக இருந்தது. ஒரு "காபிப் போட கூட தெரியாத எனக்கும் "பொருளாதாரத்தை பற்றி இதுவரை திட்டமிடாமல் வாழ்ந்த என் கணவருக்கும் வாழ்க்கை "இதுவரை "தேசிய நெடுந்சாலையில்" சிக்கல் இல்லாமல் ஓடிச்சென்று கொண்டுருந்த நிலைமாறி ,மேடு ,பள்ளங்கள் மற்றும் u -turn களுடன் கூடிய கடினப்பாதையாக மாறின. இருந்தாலும் நம்பிக்கையுடன், பல முறை நொந்து நூடுல்ஸ் ஆனாலும்  வாழ்க்கையில் ஜெயித்து வந்தோம் இதில் வேதனை தந்த விஷயம் என்னவென்றால், எங்கள் குழந்தைகளுடன் செலவழிக்காமல் போனது தான் ஆனால் ஒரு விதத்தில் இன்று அவர்களால் எதையும் சந்தித்து வெற்றிக்கொள்ளவும் சுதந்திரமாகவும் இருக்கக் கற்றுத் தந்துருக்கின்றது.

இன்று என் கணவர் உயிரோடு இல்லை என் இரு பிள்ளைகளும் திருமணமாகி சென்றுவிட்டார்கள் சில வேளைகளில் நான் என் பிள்ளைகளின் வீடுகளுக்குச் சென்ற பொது அவர்கள் தங்கள்       

குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டும் அவர்களுடைய எதிர்கால வாழக்கைக்கு திட்டமிட்டு செயல்படுவதைப் பார்க்கும்போது உள்ளுற சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருந்தாலும் என் மனதின் ஓர் சிறிது விலகி வாழ்ந்திருந்தோமானால் எங்களுக்கும் பொறுமையும்?! மற்றும் நாங்கள் ஒரு "நல்ல பெற்றோராக இல்லையோ? என்ற எண்ணம் எழுகின்றது. ஒரு வேளை நானும் என் உடன்பிறப்புக்களைப் போல் என் பெற்றோரை விட்டு சிறிது விலகி வாழ்த்திருந்தோமானால் எங்களுக்கும் இந்த மாதிரியான வாழ்க்கை அமைந்திருக்குமோ?!!

எதுவாக இருப்பினும் நம்மை வளர்த்து நல்ல நிலைக்கு கொண்டு வந்த நம் பெற்றோரை இறுதிவரை அன்புடன் கவனித்துக் கொண்டோம் என்ற எண்ணம் எனக்கு மனநிலை அளிக்கின்றது "கீதையில் கிருஷ்ணன் சொன்னதை போல் "கடமையாகி செய் பலனை பற்றி கவலைக்கொள்ளாதே" என்ற தத்துவத்தை நம் உணர்ந்துக் கொண்டால் எதற்காகவும் அஞ்சவேண்டியதில்லை.

--ரமா கோவிந்தராஜன் (க்ராப்ஸ்) 

 

 

5.K2K00038

என் வாழ்க்கைப் பாடம்!

நான் பாட்டி வீட்டில் சித்திகளுடன் மாமாவுடன் சின்னவள் என்ற பாசத்துடன் வளர்ந்தேன், படிக்கத்தான் அனுப்பினார்கள்…. பாஸ் செய்து விடு என்ற கண்டிப்புடன். ஒரு மனிதன் குறிக்கோளுடன் லட்சியத்துடன் வாழத் தொடங்குவது எப்போது?!அதிலும் நடுத்தரக் குடும்பத்தில் உள்ள பெண் பிள்ளைகள்?!

நான் பத்தாவது படிக்கும் போது பேச்சு கட்டுரை ஒப்புவித்தல் என்று போட்டிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன், சின்னச சின்னதான லட்சியங்கள்.

கல்லூரி படிக்க போவேன் என அடம்பிடித்து சேர்ந்தேன், சரி அதுவும் கூட லட்சியம் தான், முதுகலையும் படித்தேன் வழக்கம் போல போட்டிகளில் பங்கேற்றேன் நல்ல முன்னேற்றம் தான்.

ஆனால் படிப்பு முடியக் காத்திருந்து அடுத்த நாளே திருமணம் வைத்தார்களேஅது என்னை பாதிக்கவில்லையே ஏன்?! இவ்வளவு தானா இந்தப் பெண்ணுக்கான லட்சியமும் குறிக்கோளும்?!

திருமண வாழ்வில் இருபது வருடங்கள் கணவன் பிள்ளைகள் குடும்பம் என்றே கழிந்தது, எனக்காக என்ன செய்தேன்?! என் வாழ்நாள் லட்சியம் இவ்வளவு தானா?!, இல்லைஎனக்கு தமிழ் பிடிக்கும், போட்டிகளில் பங்கேற்க பிடிக்கும், கவிதை கதை கட்டுரை விமர்சனம் எழுதப் பிடிக்கும்.

பின் ஏன் இருபது வருடமாக அதற்காக எந்த முயற்சியும் செய்யவில்லை?!

இங்கு தான் ஒவ்வொரு பெண்ணிற்கும் நான் என் வாழ்க்கையையே உதாரணமாக்கி பாடம் சொல்ல விரும்புகிறேன்.

பெண்ணே!

உன் வாழ்வு தாய் பெற்றெடுக்க தந்தை வளர்த்தெடுக்க கணவன் பராமரிக்க பிள்ளைகள் பாராட்ட இத்துடன் முடிந்து போவதற்காக இல்லை.

உனக்கென நல்ல லட்சியம் வேண்டும்.

அதற்காக எப்போதும் நீ பாடுபட வேண்டும்சிந்திக்க வேண்டும், வாழ்வின் எந்த கால கட்டத்திலும் உன்னையும் உன் லட்சியத்தையும் நினைவூட்டிக் கொண்டு செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

இல்லையெனில் நாம் சார்ந்திருந்த உறவுகளால் நமக்கு இடைஞ்சல் வரும் போது...அல்லது நம் வாழ்க்கையில் ஏதேனும் சுவாரசியம் வேண்டுமென ஆவலுரும் போது.... நம்மை நாம் நினைக்கத் தொடங்கும் போது.... நாம் எதுவுமற்று பூஜ்ஜியமாக இருப்போம்.

நம் கையில் சம்பாத்தியம் இருக்காது நமக்கு வெளியிடங்களுக்குப் போகத் தெரியாதுநாலு பேரிடம் பேசத் தெரியாதுவண்டி ஓட்டத் தெரியாதுநமக்கு இருந்த தனித்திறமை (பேச்சு எழுத்து தையல் ….) எதிலும் பயிற்சி இல்லாமல் அதுவும் நம்மைக் காப்பாற்ற வராது.

என்ன செய்வதென்று தெரியாமல் திணறுவோம்.

இந்நிலை எந்தப் பெண்ணின் வாழ்வையும் சூனியமாக்கி விடும்.

எனவே பெண்களே…! உங்களை மறக்காமல் உங்களோடு உங்கள் லட்சியத்தோடே இந்த உலகத்தோடும் உறவுகளோடும் உறவாடுங்கள்.

உங்களுக்காகவும் நேரம் ஒதுக்குங்கள்...அழகு என்பது நம் உடல் அழகு மட்டுமில்லை...நமக்கான அடையாளம் உடலோ உடையோ உணர்வோ மட்டுமில்லை.

நமக்கான அடையாளம் நம் குறிக்கோள்...! நம் லட்சியம்...! நம் வெற்றி....! பயிற்சியும் பழக்கமும் விட்டுப் போனதால் எழுத்தாளராக என் வெற்றி மிகக் கடினமாக இருக்கிறது.

நான் கால தாமதமாக உணர்ந்ததை என் வாழ்க்கைப் பாடத்தை உங்களுக்கு உணர்த்தி உங்களுக்கு அறிவுறுத்துகிறேன்...

காலத்தே பயிர் செய்யுங்கள்.நன்றி

பூமாதேவி

 

 

6.K2K-00042

வாழ்க்கைப் பாடம்.  

நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு பாடமே ... நாம் விழிப்புணர்வுடன் இருந்தால்... மாணவன் தயாராக இருந்தால் ஆசிரியர் தோன்றுவர். ஏகப்பட்ட பாடங்கள் தினமும் நிகழ்த்து கொண்டு தான் இருக்கிறது ஒவ்வொருவர் வாழ்விலும்...

இந்தக் கொரோன காலத்தில் WFH போட்டாலும் போட்டாங்க, பேரு தான் WFH ஆனால் வீடே ஒர்க் பண்ண வேண்டி இருக்கு.  வாசிக்கும் நீங்களும் இதை ஒத்துக்குவவீங்கனு நினைக்கிறேன்.

 போன வாரம் ஒரு நாள் மிகவும் ஆர்வமாக வேலை செய்து கொண்டிருக்கும் போது எங்கள் மகன் மகந்த் பக்கத்து வீட்டில் விளையாட சென்றிருந்தான். அங்கே சின்ன சின்ன செல்லச் சேட்டைகளை பண்ணி இருக்கான். அங்கே இருந்து பக்கத்து வீட்டு அம்மா அவனை   வேகமாக அழைச்சிட்டு வந்து எங்க வீட்டுல விட்டுட்டு நடந்தது சொன்னபோது எனக்கு ஏதோ ஒரு வேகத்தில் கோபம் பொத்துக்கொண்டு வந்தது, அதனால் ஆத்திரத்தில் என்னோட மூன்றறை வயது மகனை ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்து விட்டேன். அறைந்த வேகத்தில் கன்னத்துல கை விரல் அனைத்தும் தடம் பதிந்தது. பின் அவனை சமாதானம் செய்ய முயற்சி பண்ண ஆனால் அவன் மிகுந்த வலியால் சமாதானம் அடைய வில்லை.

சிறிது நேரத்தில் அவன் என்னிடம் வந்து நீ எனக்கு வேண்டாம் என்று கோபத்தில் சொல்ல (என் ரத்தம் தானே பிறகு) நானும் பின்னே கோபமடைந்து வீட்டை விட்டு வெளியே போய்விட்டேன். சிறிது நேரம் கழித்து கோபம் தணிந்து வீட்டுக்கு போன் பண்ணினேன் அவன் என்னை வீட்டுக்கு வருமாறு அழைத்தான்.

வந்த பின்னும் எதுவும் நடக்காது போல அவன் அவனது விளையாட்டு வேலையை பார்த்துக் கொண்டிருந்தான், நான் என்ன செய்வதென்று தெரியாமல் தனியே அவனை அழைத்துச் சென்று அவனிடம் மன்னிப்பு கேட்டேன், அவனும் என்னிடம் மன்னிப்பு கேட்டான் என் கண்ணில் கண்ணீர் தாரை தாரையாக பார்த்துவிட்டு அவன் என்னை சமாதானம் செய்தான்.

 மறு நாளும் என்னால் அதை மறக்க முடியவில்லை திரும்பவும் மன்னிப்பு கேட்டேன் அதற்கு அவனும் திரும்பவும் என்னிடம் மன்னிப்பு கேட்டான்.

மறுநாள் நான் அலுவலகம் கிளம்ப, என் மனைவி என் அம்மாவுக்கு போன் செய்து பேசும்போது இந்த விஷயத்தை அம்மாகிட்ட சொல்ல, அதற்கு எங்கள் மூன்றரை வயது மகன் என் அம்மாவிடம் அப்பா என்னை அடிச்சாரு ஆனா நீ அதை எங்கப்பாகிட்ட கேட்காதே ஏற்க்கனவே அவர் ரொம்ப பீல் பண்ணிட்டு இருக்காரு, நீ கேட்ட இன்னும் ரொம்ப பீல் பண்ணிடுவாருனு சொல்லிருக்கான். மாலை அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் இதை என் மனைவி சொல்லிய போது என்னை அறியாமல் கண்ணீர் தாரை தாரையாக வந்தது.

அப்போது தான் புரிந்தது குழந்தைகளை ஏன் தெய்வத்திற்கு சமம் என்று சொல்கிறார்கள் என்று இது ஒரு மிக பெரிய வாழ்கை பாடமாக அமைந்தது. அன்று முதல் முடிவெடுத்தேன் குழந்தையை நன்றாக கவனித்து கொள்ள வேண்டும் அவர்களோடு நேரத்தை செலவு செய்ய வேண்டும் என்று.

நெறி: குழந்தைகள் எப்போதும் அறிவில் சிறந்தவர், அவர்களிடம் இருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.

- கணேசன் சண்முகவேல்

 

 

7.K2K00048

வாழ்க்கை பாடம் 

        நான் கூறும் இந்த சிறு கதை என்னுடைய வாழ்க்கை பாடம் ஆகும் ..,

        விவரம் தெரிந்த பருவத்தில் இருந்தே என்னுடைய விருப்பத்திர்க்கு மாறாக குடும்ப நிலையினை கருத்தில் கொண்டு கிடைப்பதை விருப்பமாக ஏற்றுக்கொள்ள பழகினேன், மேலும் வயதில் சிறிய பெண்ணாக இருப்பினும் அனைவரிடமும் பணிந்து வணங்கி அனைத்தையும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை கொண்டு விலகினேன்.,

       இதே நிலை முற்றிலும் என் வாழ்வில் சகஜமாக மாறியது, ஒரு கட்டத்தில், தான் தன் வாழ்வினை அழித்துக்கொண்டு வருகிறோம் என்றும், தான் வாழும் வாழ்க்கை தனக்கானது இல்லை என்றும், இழந்து வந்த அனைத்தையும் நினைத்து மனம் வருந்தினேன்,

மனம் வருந்தி கூடி குறிகினேன், கடந்து வந்த பாதை மீண்டு வர போவது இல்லை, இனி இருக்கும் பாதையினையும் வீணான கடந்த காலமாக மாற்ற கூடாது என்னும் முடிவினை மேற்கொண்டேன்.,

       கரடு முரடான பாதையிலும் நாம் மகிழ்வுடன், நம் மனம் விரும்பியவாறு பயணிப்போம் என்று முடிவினை மேற்கொண்டேன் ...,

      அத்துடன் அனைத்து வித ஆசா பாசங்கள் மற்றும் நேசங்களில் இருந்து வெளிப்பட்டு, செல்லும் பாதை எல்லாம் அன்பினை விதைத்து செல்ல துணிந்தேன்,

      மேலும் உலகில் நமக்கானது என்று ஏதும் இல்லாத போது, இழக்கவும் ஏதும் இல்லை என்று முடிவு செய்தேன் ...

       எப்போதும் அனைவர் வாழ்விலும் ஒரு இக்கட்டான நிலை வரும், அதனை சந்திக்கும் கனம், நான் மனதில் உருதியினை நிலை நாட்ட வேண்டும், எப்போதும் எதார்ததமாக இருக்க வேண்டும் என்று முடிவு மேற்கொண்டேன்.,

        இப்போது அவ்வாறே செயல் படுகின்ரேன், மாற்றமும் புதிய வாழ்க்கை அனுபவம் தருகிறது ....

கருத்து: மாற்றம் ஒன்றே மாறாதது ..

இப்படிக்கு.,

சி. தெய்வாணி ஸ்ரீ.,

 

 

8.K2K00050

என் வாழ்க்கை பாடம்....

எண்ணம் போல் வாழ்க்கை.....

தன்னிடம் இருக்கும் பொருள் மீது ஒருவன் மோகம் கொள்ளாது.. பிறருக்கு தேவை ஏற்படும் போது மனமுவந்து, சிறிதளவும் தயக்கம் இல்லாமல் தருவானேயாயின்....தன்னிடம் எதும் இல்லாத போதும் பிறருக்கு உதவ வேண்டும் என்று ஒருவன் என்னுவானாயின்.....

நிற்கதியில் நிற்கும் நிலை ஒரு போதும் அவனை நெருங்காது......

அன்று முழு ஊரடங்கு முடிந்து, சில தளர்வுகளுடன் எங்கள் நிறுவனம் திறந்த நிலையில், நானும் என் நண்பன் பிரேமும் காலை புத்துணர்வுடன் வேலைக்கு கிளம்பினோம்.......காலை ஒன்பது மணியளவில் சில உணவகங்கள் மட்டுமே திறந்திருந்த நிலையில், அந்த பகுதியில் இருக்கும் ஒரு பிரபல உணவகத்தில் எனக்கு 6 இட்லி பார்சல் வாங்கினேன்... பில்லை பார்த்தவுடன் நெஞ்சுவலியே வந்துவிட்டது...6 இட்லி 75 ரூபாய்..என் நண்பன்  அவனுக்கு 7 இட்லிகள் பார்சல் வாங்கினான்....அதை பெற்று கொண்டு நாங்கள் மிகுந்த விரக்தியோடு வெளியில் வந்தோம்....அங்கு ஒரு வயதான தாத்தா பசியில் என்னிடம் கையேந்தினார்....எனக்கோ 75 ரூபாய் சன்மானம் கொண்ட இட்லி கொடுக்க மனசில்லை...என்னோடு வந்தவர் இறக்கபட்டு அவர் வாங்கிய இட்லியை அந்தத் பெரியவருக்கு வழங்கினார்.....நேரம் இல்லாமையால் விரைந்து அலுவலகம் சென்றோம்....சென்றதும் என் நண்பருக்கு அலுவலக மேலாளரிடம் இருந்து அழைப்பு வந்தது....அவர் சென்று விட...எனக்கோ காடுவெட்டி site-ல் இருந்து அவசர அழைப்பு வந்தது......வெகு நாட்கள் கழித்து சென்ற நிலையில் வேலை பழு சற்று அதிகமாகவே இருந்தது.......மதியம் கிட்டத்தட்ட 1.30 மணிக்கு ஓரளவு பணியை முடித்து விட்டு கோயம்பேட்டில் உள்ள அலுவலகம் திரும்பினேன்......காலையில் வாங்கிய இட்லி பொட்டலம் கண்ணில் தென்பட வயிற்று பசிக்கு சற்று ஆறுதல் கிடைத்தது.....ஆனால் காலை மேலாளரை காண சென்றவன் அங்கேயே மாட்டிக் கொண்டான்....சிறிது பரிதாபத்தொனியுடன் பொட்டலத்தை பிரித்தேன்...... இட்லியை பிய்த்து போட்டு அதில் சாம்பாரை ஊற்றி எடுத்து சாப்பிட்டால்...வாயில் வைக்க இயலாத அளவிற்கு புளிப்பு.... எவ்வளவு முயன்றும் 3 இட்லிகளுக்கு மேல் உள்ளே தள்ள முடியவில்லை...... இந்த பொட்டலத்தையா படுபாவிகள் எழுபத்தந்து ரூபாய்க்கு விற்றார்கள் என்று என் மனம் நொந்துக்கொள்ள...meeting முடிந்து என் நண்பர் வந்தார்....வந்ததும் சாப்டீங்களா sir என்று வினவினான்.... ஐயோ இவன் வேற வைத்தெரிச்சலை கிளப்புரான் என்று எண்ணிக் கொண்டு," நீ சாப்டியா" என்று வினவினேன்....."நாளைக்கு ரம்ஜான்ல sir... அதான் காலைல, meeting- client கிட்ட இருந்து செமையான விருந்து......நீங்க தான் miss பண்ணிட்டீங்க" என்றான்......ஒரு அசட்டு புன்னகை வடித்து விட்டு கழிவறை சென்றேன்.....அங்கு இருந்த கண்ணாடியில் ஒரு அற்பமான உருவத்தை கண்டேன்......வெளியில் பகட்டான உடை அணிந்திருந்த போதும் நான் அந்த கண்ணாடியில் கேவலமான ஜந்துவாக தெரிந்தேன்....காலையில் கண்ட முதியவர் ஒருக்க்ஷனம் கண் முன் தோன்றி மறைந்தார்......அப்போது என் தங்கை அடிக்கடி கூறும் வாக்கியம் ஒன்று ஞாபகத்திற்கு வந்தது.....KARMA IS A BOOMERANG!!!!!

- THARINI

 

 

9.K2K-00053

என் வாழ்க்கை பாடம்

"எப்படி பூங்கொடி இப்படி ஒரே ரூம்குள்ள அடஞ்சு கெடக்க...

அடிக்கடி கேட்கப்படும் அம்மாவின் கேள்வி..

பதில் எப்படி சொல்லுவேன்?

இது வரை சொன்னதில்ல...

இப்போ சொல்றேன்...

"எனக்கு தனிமை ரொம்ப பிடிக்கும்...

என்னைய யாராலும் காயப்படுத்த முடியாத இடம்...

நான் யாருக்கும் இங்கே பதில் சொல்ல அவசியம் இல்லாத இடம் இந்த 'தனிமை'...

"தனிமை கொஞ்சம் நெறையவே வலிக்கும்... பட் நெறைய வலிகளை எப்படி கடந்து போகனும்னு இந்த தனிமை தான் எனக்கு கத்து குடுத்துச்சு..."

"காரணமே இல்லாத சில கண்ணீர்க்கும் காரணம் இருந்தும் சொல்ல முடியாத என் அத்தனை உணர்வுகளுக்கும் என் மிக நெருங்கிய தோழி இந்த " தனிமை"

தனிமையை தாண்டிய இந்த நான்கு சுவர்களுக்குள் எனக்கே எனக்காய் ஒரு ஜீவன் அது என் கற்பனை குழந்தை...

" எனக்கு பேச ரொம்ப பிடிக்கும்ன்ற விஷயம் கூட தனிமைல என் கற்பனை குழந்தைட்ட கொஞ்சி பேசும் போது தான் நா புரிஞ்சுகிட்டேன்...."

பேசறது ஒரு வரம்... "அழகாய்..வடிவாய்...கோர்வையாய் நிதானமாய்...புன்னகையாய்.. மிக தெளிவாய்... இப்படியெல்லாம் பேச எனக்கு ஒரு வாய்ப்ப இந்த தனிமை குடுத்துச்சு..."

இப்ப கூட என் அனுபவங்களை வார்த்தைகளா இந்த தனிமை கூட தான் பகிர்ந்துட்டு இருக்கேன்... என்னை நானே தேடி பிடிச்சதும் இந்த தனிமைல தான்...

என்னை எனக்கே ரொம்ப பிடிச்சதும் இந்த தனிமைல தான்..

சாப்ட்டயா தங்கம்? ஏதாச்சும் புக் எடுத்து படி மா..பரிட்சை எழுது...

IISE ஜாப் சேரனும்ன்ற அப்பாவின் வார்த்தை அடிக்கடி காதுல விழுந்துட்டே தான் இருக்கு...

"இந்த தனிமைல மனசு எழுதற பரிட்சையின் எண்ணிக்கை மிக அதிகம்னு எப்படி சொல்லுவேன்?"

நீதி: என் வாழ்க்கை எனக்கு இப்ப வரைக்கும் கத்து குடுத்துட்டு இருக்கற பாடம் தனிமைல கூட சந்தோஷத்த எப்படி தேடி பெறலாம்னு பாடம் கத்துகுடுத்துச்சு...

என் சந்தோஷம் என் தனிமையில்..

- பூங்கொடி

 

 

10.K2K 00063

என் வாழ்க்கை பாடம்

நடப்பதெல்லாம் நன்மைக்கே

என் வாழ்க்கைப் பயணத்தில் எண்ணற்ற நிகழ்வுகளில் ஒருசில நிகழ்வுகளை மட்டுமே கூற விழைகிறேன்.ஏதோ நினைவுகளுடன் எழுந்த தாரா எழுந்தவுடன் தான் செய்யும் வழக்கமான வேலையாக தேதி காலண்டரில் தேதித்தாள் கிழித்தாள் அதில் 1.3.2020 என்று இருந்தது இன்றுடன் தான் பள்ளி ஆசிரியராக பணிக்கு வந்து12 ஆண்டுகள் ஓடிவிட்டது.அவள் கணவன் இறந்தும் 11 ஆண்டுகள் ஓடிவிட்டது.அவள் ஆசிரியர் பயிற்சி முடித்ததே பெரும்பாடு ஏனெனில் 1991ல் அவளுக்கு திருமணம் முடித்த போது அவள்+2 மட்டுமே படித்திருந்தால் கணவனின் வற்புறுத்தலாலும்,ஊக்கத்தாலும் ஆசிரியர் பயிற்சியில் சேர்த்து படித்தாள்

இரண்டு ஆண்டுகள் கடின முயற்சியுடன் படித்து தேர்வு எழுதிய போதும் அவள் படித்த ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தை அரசு ஏதோ காரணத்தால் மூடிவிட்டது.அதன் பிறகு அவளுக்கு 1993ல் மகன் பிறந்தான் மகனை வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்ததில் ஆசிரியர் பயிற்சியை பற்றி நினைக்கவில்லை.இந்நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக 1995 முதல் ஒரு கம்பெனியில் தயாரிப்பு பிரிவில் பணிக்கு சேர்ந்தாள் அந்த கம்பெனியில் வேலை பார்த்தபோது 2001 ஜனவரியில் இரண்டாம் முறை கருவுற்றாள். மிக நீண்ட இடைவெளியில் கரு உற்றத்தாலும் கம்பெனி வேலை கடினத்தன்மையினாலும் வேலையை விட வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்பொழுது அவள் மிகுந்த வருத்தத்துடன் வேலையை விடும் பொது கணவர் கூறியது நடப்பதெல்லாம் எதோ நன்மையின் பொருட்டே நடக்கிறது. நீ கவலை படாதே என்று ஆறுதல் கூறினார். மகள் 2001 செப்டம்பரில் பிறந்தாள், அரசால் மூடப்பட்ட பயிற்சி நிறுவனத்தில் படித்த அனைவரையும் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படிக்கச் ஜனவரியில் அரசு அழைத்தது. அப்போது கணவர் கூறினார் வேலை போனது எத்தனை நன்மை பார், மகள் பிறந்தாள் நீ மீண்டும் ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்து படித்து ஆசிரியர் ஆக போகிறாய் எல்லாம் நன்மைக்கே என்றார். இரண்டு ஆண்டுகள் பயிற்சி முடித்து தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அவள் கணவர் குடும்ப அட்டையை தவறவிட்டு விட்டார், ஆனால் பயிற்சி முடிவுகள் வெளிவந்தவுடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். அதற்கு குடும்ப அட்டை வேண்டுமே என கவலை பட்டாள் நல்ல நேரமாக அவள் மாமியார் ஊரில் தனது குடும்ப அட்டையில் தாராவின் கணவரின் பெயரையும் தாராவின் பெயரையும் சேர்த்திருந்தார் அதை வைத்து அவர்களின் சொந்த மாவட்டத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 2004ல் பதிவு செய்தாள். அம்மாவட்டம் கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக இருந்ததால் அவளுக்கு 2008 பிப்ரவரியில் சான்றிதழ் சரி பார்ப்பிற்கு உடனடியாக வரவேண்டும் என்பதை செய்தித்தாளில் வெளி இட்டனர். அப்போது அவள் சென்னையில் உறவினர் திருமணத்திற்கு வந்திருந்தாள். உடனே சென்னையில் இருந்து சான்றிதழ் சரிபார்ப்பிற்கும் நேர்காணலுக்கும் எவ்வாறு செல்வது என்று குழம்பிய நிலையில் தாராவின் கணவர் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்று திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு வாடகை வண்டியை ஏற்பாடு செய்து புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள தன் சொந்த கிராமத்தில் இருந்து சான்றிதழ்களை புதுக்கோட்டைக்கு எடுத்து வர உறவினரையும் ஏற்பாடு செய்து கொடுத்து அந்த நேர்காணலில் பங்கேற்க அணைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு நேர்காணலில் பங்கேற்றாள்.  மீண்டும் பிப்ரவரி 29 ல்பணியில் சேர நியமன ஆணை பெற வரக்கூறினர் இடையில் சென்னை வந்து உறவினரின் திருமணத்தை முடித்துக்கொண்டு புதுக்கோட்டையில் உள்ள சொந்த கிரமத்திற்கு பிப்ரவரி 29 அதிகாலை வந்து  சேர்ந்தாள் இதற்கு இடையில் 26லிருந்து 28 குள் ஒருவர் நியமன ஆணை வழங்க கூடாது என வழக்கு தொடுத்தார் ஆனால் மதுரை நீதி மன்றம் அந்த வழக்குக்கு இடைக்கால தடை விதித்தது உடனடியாக பிப்ரவரி29ல் பணிநியமன ஆணை வழங்க பட்டு 1.03.2008ல் பணியில் சேர்ந்தாள். 6.03.2009ல் அவள் கணவனுக்கு புற்று நோய் முற்றிய நிலையில் கண்டறியப்பட்டது அவன் நோயுடன் போராடிக்கொண்டே தாராவை வாழ்க்கையுடன் போராட தயார் படுத்தினார் அப்படியும் அவள் தளர்ந்த போதெல்லாம் உனக்கு ஒரு கதவை மூடப்போவதால் தான் ஒரு ஜன்னலையாவது கடவுள் திறந்துவைத்தார் என்றான். தாராவின் திருமண நாள் 21.10.1991 தாராவின் கணவன் 22.10.2009 உலகில் இருந்து விடை பெற்று தாராவுடனேயே ஐக்கியமானான் அதற்கு இரண்டு நாள் முன்பு கூட தாராவின் கணவன் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்பதை குடும்ப அட்டை தவறியதில் இருந்து அவள் மாமியார் அவர்கள் பெயரை குடும்ப அட்டையில் சேர்த்ததனால் தான் அந்த மாவட்டத்தில் சீக்கிரம் வேலை கிடைத்தது என்பதையும், தான் இறந்தாலும் அவள் வேலை அவளையும் குழந்தைகளையும் காப்பாற்றும் என்பதை கூறி எது நடந்தாலும் அது நன்மைக்கே என்பதை அவளுள் விதைத்து சென்றான். அவளும் எத்தனை துன்பங்கள் சோதனைகள் வந்தாலும் அதை தாங்கிக்கொள் அச்சோதனைகளை வென்று வரவும் தாரா கூறும் தாரக மந்திரம் நடப்பதெல்லாம் நன்மைக்கே.

 இவள் அனுராதா

 

 

11.K2K00066

என் வாழ்க்கை பாடம்..!

"நீ ஏன் இவ்வளோ கஷ்ட படுற.. உன் குடும்ப நிலைமைக்குப் புள்ளைங்கள இங்கிலிஷ் மீடியத்துல படிக்க வைக்கணுமா?" - இந்த கேள்வியை என் முன்னே பல நபர்கள் என் அம்மாவிடம் கேட்டதுண்டு.

சென்னையில் வசிக்கும் பல்லாயிரம் நடுத்தர வர்கத்தில் எங்கள் குடும்பமும் அடங்கும். அப்பா எலெக்ட்ரிசின் தொழில் செய்பவர். அப்பாவின் குறைவான சம்பளத்தில் இரண்டு பிள்ளைகளை வளர்க்க என் அம்மா மிகவும் சிரமப்பட்டார்.

ஆரம்பத்திலிருந்து, பிள்ளைகளை நன்கு படிக்க வைக்கவேண்டும் என்று என் அம்மா வைராகியமாக இருந்தார். என்னையும் அண்ணனையும் இங்கிலிஷ் கான்வென்ட் ஒன்றில் சேர்த்தப்போது, ஏகப்பட்ட பேர் அம்மாவை சாடினார்கள். சில பேர், "தகுதிக்கு ஏத்த மாதிரி ஆச படனும்" என்று பேசி அம்மாவை மிகவும் நோகடிதார்கள். இதை எல்லாம் நேரில் பார்த்து வளர்ந்த எங்களுக்கும், படித்து பெரிய ஆள் ஆகவேண்டுமென்று எண்ணம் ஆணித்தனமாக பதிந்துவிட்டது.

குடும்ப செலவுக்கே பணம் இல்லாத நெருக்கடி வந்தபோது, அம்மா தையல்காரர் ஆனார். வீட்டு வேலை, தையல், எங்களுக்கு படிப்பின் முக்கியத்துவத்தைப் போதிப்பது என்று அம்மா அனைத்தையும் செவ்வனே செய்தார். என் அண்ணன் பத்தாம் வகுப்பு படிக்கும்போது, "பத்தாவது முடித்தவுடனே.. பையன வேலைக்கு அனுப்பு" என்று நெருங்கிய சொந்தங்களே சொன்னப் போது, எனக்கு சாதித்துக் காட்ட வேண்டுமென்று எண்ணம் ஆழ்மனதிலும் பதிந்துவிட்டது.

இரவு பகல் பாராமல் படித்தேன், விழைவு - பத்தாம் வகுப்பில் 483/500 எடுத்தேன். அதனால் 11, 12ம் வகுப்பு இலவசமாக படித்தேன். 12ம் வகுப்பில் 1149/1200 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மாணவனாக வந்தேன்.

"இன்ஜினியரிங் லாம் நம்ம வசதிக்கு அதிகம்.. வேற ஏதாவது பாரு.." என்று என்னிடமே சிலபேர் சொன்னார்கள்.

ஆனால் தமிழ் நாட்டின் முதன்மையான அரசு கல்லூரியில் இன்ஜினியரிங் சீட் கிடைத்தது. கல்வி கட்டணமும் மிக மிக குறைவாக இருந்ததால், வீட்டிற்கு அதிக செலவு வைக்காமல் படிக்கத் தொடங்கினேன்.

12ம் வகுப்பு முடிந்து ஒரு வருடம் கழித்து, என் பள்ளியின் ஆண்டு விழாவிற்கு எனக்கு அழைப்பு விடுத்தார்கள். முதல் மாணவனாக வந்ததற்கு, எனக்கு தங்கப்பதக்கம் கொடுப்பதற்கு அழைத்தார்கள். நானும், அம்மாவும் மற்றும் சில சொந்தங்களும் சென்றோம். என்னை மேடைக்கு அழைத்தார்கள். என் அம்மாவையும் மேடைக்கு அழைக்குமாறு நான் விண்ணப்பித்தேன், சரி என்றார்கள். மூன்றாயிரம் மாணவர்களுக்கு முன்பே, நானும் அம்மாவும் மேடைக்கு சென்று தங்கப்பதக்கத்தை வாங்கிக்கொண்டோம். அப்போது என் அம்மாவின் கண்கள் கலங்கிவிட்டது, எனக்கோ, எதையோ சாதித்துவிட்டது போல் பெருமிதம் வந்தது.

படித்தால்தான் சாதிக்க முடியும் என்று மீண்டும் மீண்டும் நினைத்துக்கொண்டு, கல்லூரியிலும் நன்கு படித்தேன், 94% மதிப்பெண்களுடன், நாட்டின் சிறந்த தனியார் கம்பெனியில் நல்ல சம்பளத்திற்கு வேலையும் வாங்கினேன். 6 வருடங்கள் ஓடிவிட்டன, இன்றும் என் வீட்டில், பள்ளியில் நானும் அம்மாவும் பதக்கத்தை வாங்கிய புகைப்படத்தைப் பார்க்கும் போதெல்லாம், "படிப்பு தான், நம் வாழ்க்கையை முன்னேற்றும்" என்ற எண்ணம் தோன்றுகின்றது.

நீதி: யார் என்ன வேண்டுமென்றாலும் சொல்லட்டும், எப்படியாவது பிள்ளைகளைப் படிக்க வைத்து விடவேண்டும், அவர்கள் நன்றாக வாழ வேண்டுமென்றால்.

-GD

 

 

12.K2K- 00067

 $$$$$ என் வாழ்க்கைப் பாடம் &&&&&

     ஒரு மாத விடுப்பில் சொந்த ஊர் செல்லும் நான் என் இதய நண்பன் - அலுவலகத் தோழன் கயிலை ராஜனிடம் சொல்லி விட்டுச் செல்வோம் என்று அவன் வீட்டுத் தாழ்வாரத்தில் காலடி எடுத்து வைத்தேன்.

             "போ...போ...என் மூஞ்சில முழிக்காதே...போ... நான் செத்தா கூட என் மூஞ்சில முழிக்காத போ...." என்று தன் இளைய மகனைக் கோபமாக திட்டிக் கொண்டு இருந்தான் கயிலை.

         " ஏண்டா, ஊருக்குப் போறேன்னு சொல்லிட்டு போவ வந்தா இப்படி அபசகுணமா மகனைத் திட்டிக் கொண்டு இருக்கியே" என்றேன் நான்.

         அதற்குப் பதில் சொல்லாமல் அவன், " டேய்... மாசம் எல்லாம் உன்னைப் பிரிஞ்சி வாழ முடியாதுடா....சீக்கிரம் வேலையை முடிச்சுட்டு வாடா..." என்றான் கயிலை.

              கயிலை ராஜனை கரு நாக்கு கயிலை ராஜன் என்று தான் எங்கள் அலுவலகத்தில் சொல்லிக் கொள்வோம் ஒருவருக்கு ஒருவர் - அவன் இல்லாத போது.

          அப்படித் தான் ஒருநாள் என்னை," போடா..போ...கைமாத்துக் கேட்டா சாக்கு போக்கா சொல்ற...காசில்லாம பிச்சை எடுக்கத் தான் போற.." என்றான் விளையாட்டாக.

      பேருந்தில் அன்று மாலை ஏறினேன், பையில்கையை விட்டேன், பர்சைக் காணோம், பைசாவுமில்லை. நடத்துநர் கிட்ட கெஞ்சி வண்டியய் நிறுத்தி இறங்கி நண்பன் ஒருவனிடம் சென்று கையேந்தி காசு வாங்கி வீடு திரும்ப வேண்டியது ஆயிடுச்சி.

  ஒருநாள் கயிலை ராஜனை எங்கள் அலுவலக மேலதிகாரி ஒருவர் கன்னா பின்னா வென்று திட்டி விட்டார்- எல்லோருக்கும் முன்னால். அவமானப் பட்டுப் போன கயிலை அந்த அதிகாரி வீட்டுக்குக் கிளம்பிப் போனதும்" பாரு...பாரு...இவன் முழுசா வீடு போய்ச் சேர மாட்டான்...இவன் வாய்க் கொழுப்புக்கு" என்றான்.

        அடுத்த நாள் கயிலை ராஜன் உட்பட நாங்கள் அனைவரும மருத்துவ மனையில் சென்று பார்க்க வேண்டி வந்தது அந்த அதிகாரியை. நேற்று மாலை அவர் சென்ற இரு சக்கர வாகனம்  குறுக்கே  பாய்ந்த நாய் மீது மோதி அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து விட்டார்.

         அதனால் நான் கூட என் நண்பன் கயிலையிடம் வேடிக்கையாய் கூறுவேன்: " டேய், உனக்குக் கோபம் வந்தால் எனக்கு இரண்டு அடி கொடு; இரண்டு அறைச்சல் விடு; ஆனா ரெண்டு வார்த்தை சொல்லிடாதேடா" என்று.

        " டேய் ...நீயுமாடா?" என்று செல்லமாக கோபித்துக் கொள்வான் - நான் எதைக் குறிப்பிடுகிறேன்  என்பதைப் புரிந்து கொண்டு.

           நான் ஊருக்கு வந்து நாலைந்து நாட்களில் கொரோனா பிரச்சினை வெடித்து திடீர் என்று பொது முடக்கம் அறிவித்து விட்டார்கள்.

             அவ்வப்போது கயிலை தொடர்பு கொண்டு " எப்போதுடா வருவே...நீயில்லாம பொழுதே போகல.."என்று புலம்பிக் கொண்டே இருந்தான்.

       எங்கள் அலுவலகம் இன்றியமையா பணிகள் தொடர்பு உள்ளது என்பதால் எனது விடுப்பு ரத்து செய்யப் பட்டு - பாஸும் அனுப்பப் பட்டு வேலையில் சேர பணிக்கப் பட்டேன்.எனவே உடனே சொந்த ஊரிலிருந்து திரும்ப வேண்டிய தாயிற்று.

      .  அடுத்த நாள் காலை கயிலையை அழைத்துக் கொண்டு அலுவலகம் போவோம் என்று அவன் வீட்டுப் பக்கம் போன போது ஒரே கூக்குரலாய் இருந்தது.

          "அப்பா இப்படி சாபம் விட்டுட்டு போயிட்டரே மாமா.அவரு மூஞ்சியக் கூட பார்க்கக் கொடுத்து வைக்காத பாவியாகி விட்டேனே" என்று என்னைப் பார்த்ததும் பெருங்குரலிட்டு அழ ஆரம்பித் தா ன் கயிலையின இளைய மகன்.

               உடல் நலம் இன்றி மருத்துவ மனையில் சேர்க்கப் பட்ட கயிலைக்கு கொரோனா முற்றிய நிலையில் இருப்பதாக உறு தி செய்யப் பட்டு மறுநாளே இறந்து போனானாம் கயிலை. மூத்த மகன் ஒருவனை மட்டும் முகததைக் கடைசியாய் பார்க்க அனுமதித்து உடலை எரியூட்ட அனுப்பி விட்டார்களாம்.

          எப்படி ஆருதல் கூறுவது என்று தெரியாது திகைத்து இடிந்து போய் நின்றேன் நான்.

-அன்பழகன்.

 

13.K2K 00068

 சிறு வயதில் இருந்தே தந்தையை இழந்து வாழ்ந்த நான் தாயின் வளர்ப்பில் அன்போடு வாழ்ந்து வந்தேன். தாயின் உறவினர்கள் என்னை அன்போடு பார்த்துக் கொண்டனர்.

படிக்க வைத்தனர். ஒரு நாள் வகுப்பறையில் பரிட்சைத்தாள் என் பெயருக்கு முன்னால் உள்ளவனுடைய பரிட்சைத்தாள் பேப்பரோடு இணைந்து இருந்தது. ஆசிரியர் வகுப்பறையில் பேப்பர் கொடுக்கும் போது என்னுடைய பேப்பர் வரவில்லை. இந்த நிலையில் ஆசிரியரோ நீ தேர்வு எழுதினாயா இல்லையா என்று வினவினார்.

நான் எழுதினேன் சார் யாரோட பேப்பரோடு என் பேப்பர் சேர்ந்திருக்கானு கேளுங்க சார் என்றேன் எனக்கே நீ புத்திமதி சொல்கிறாயா என்று அடிக்குமேல் அடி எல்லார் முன்னிலையிலும் அழுதேன்.

மனதிற்குள்ளே நானும் ஒரு ஆசிரியராக வருவேன் உன்னைப் போல் இருக்க மாட்டேன் என்று. சொல்வதைப் போன்றே ஆசிரியராக மாறினேன். ஆசிரியர்களுடன் நட்போடு இருந்தேன்.

கூடவே நான்கு ஆண்டுகள் சுற்றித்திருந்த நண்பன் என்ற துரோகி தாளாளர் காலில் விழுந்து அவன் திறமைசாலி எங்கு வேணாலும் சேர்ந்து கொள்வான் இந்த வேலையை எனக்கு கொடுத்து விடுங்கள் என்று வேலையை பெற்றுக் கொண்டு என் வேலையை தொலைத்தான்.

வேறு இடத்தில் வேலை கிடைத்தது. தாளாளர் செய்யும் தவறை மறைமுகமாக உணர்த்தினேன். வேலையை விட்டு நீக்கினார். வேறு இடத்தில் வேலை பார்த்தேன் அவசரமாக 3 மாதங்களுக்குள் மாணவர்களுக்கு பாடம் முடிக்க வேண்டும். பேப்பர் விடிய விடிய திருத்தப்பட வேண்டும். கைடு வினாத்தாள்கள் விற்பனைக்கு சரி செய்து கொடுக்க வேண்டும்

தாளாளரின் பிஏ தவறை சுட்டிக் காட்டவே வேலை பறிபோனது.

தனியார் மயம் நேர்மை யோடு வாழ விடாது.  வேலையில் பணிவு இருந்தாலும் கூழை கும்பிடு போட்டால் வாழலாம் பணி செய்ய வேண்டியதில்லை என்று சில இடங்களில் காட்டிக் கொடுக்கிறது.

அரசு வேலையை நம்பியும் புண்ணியமில்லாமல் சுய தொழில் பார்ப்பவர்கள் இன்னும் எத்தனை பேரோ வாழ்க்கை அனுபவம் என்ற பெயரில் சோதிப் பதே வாழ்க்கை கற்று தந்த பாடம் என் வாழ்க்கைப்பாடம்

J. Jeyaraj

 

 

14.K2K-00078

என் வாழ்க்கை பாடம்

#################

மூன்று வருடங்களுக்கு பின்பு, நேற்று சதாவை சந்தித்தேன். வெகுநேரம் மௌனமாக இருந்தவள். திடீரென மழை போல விடாது பேச ஆரம்பித்தாள்.

அவளுக்கும் எனக்கும் ஒரு வாதம் எழுந்தது. இறுதியில் நான் சொன்ன வார்த்தைகள் தெளிவாகவும், அழுத்தமாகவும் இருந்தது. கடவுள் என்று ஒருவன் இல்லை. கடவுளை நம்பியவன் முட்டாள். வாழ்க்கை அர்த்தமற்றது.

சிந்து நீ தத்துவ மழை எல்லாம் பொழிய மாட்டியே.. உன்னை இப்போது பார்க்கும்போது அதிசயமாக இருக்கிறதே!

என்ன நடந்தது. ஏன்? வாழ்க்கை மீது உனக்கு இவ்வளவு கசப்பு.

ம்ம்ம்ம்ம்....

வெகுநேரம் மௌனம் தரித்தேன். அவள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க தோன்றியது.

ஆமாம். வாழ்க்கை மீது வெறுப்புதான். உனக்கு தெரியுமே என்னுடைய பள்ளிக்காதலை பற்றி, அன்பில் பூத்து குலுங்கிய 10வருட காதல் பூ! இவ்வாண்டு பணத்தாசையால், முதலாம் மாதம் உதிர்ந்து விட்டது.

ஹா.... உதிர்வா! நீ என்ன சொல்கிறாய்.

உண்மையைதான் சொல்கிறேன். மாலை வேளை மார்கழி பனியில் நானும் கவியும் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தோம்.

வெகுநேரம் அடித்துக் கொண்டிருந்த தொலை(ல்)ப்பேசியை எடுத்தேன்.

"ஹலோ!"

'ஹலோ!'

"நீங்க சிந்துவா! பேசுறீங்க."

"ஆமா... சொல்லுங்க நீங்க யாரு?"

'நா சசிட லவ்வர் கஜி பேசுறே'

"என்ன? லூசு மாரி பேசுறீங்க. அப்போ நா யாரு"

'அது என்க்கு தெரியாது..'

"நா நம்பமாட்டே..."

வட்சப் வா! உனக்கு நா யாருனு காட்டுறே... என்றாள்.

இருவருக்கும் இடையில் தொடர்ந்து உரையாடல் நிகழ்ந்தது. ஐநில போரும் ஒன்றாக நிகழ்வது போல ஒரு காட்சி. முடிவின்றி தொடர்ந்தாள் கஜி. நான் அழுத்தமாக கூறினேன்.

"அவனை அதிகம் நம்புகிறேன். ஆனால் உன் வார்த்தைகளை துளியளவும் நம்பவில்லை" என்று

மீண்டும் கூறினாள். வட்சப் வா! என்று.

என்னுடைய தொலைபேசியை நிறுத்தி வைத்துவிட்டு, அப்பாவின் தொலைபேசியில் இருந்து, அவனுக்கு அழைப்பினை விடுத்தேன். நடந்தவற்றை கூறினேன்.

இல்லை... இல்லை.... இது ஒரு பெரிய கட்டுக்கதை நம்பாதே! உன்னை ஏமாற்ற மனதளவிலும் நான் நினைத்தது இல்லை. என்றான். தொலைபேசி அழைப்பினை துண்டித்துவிட்டு, என்னுடைய தொலைபேசியினை எடுத்து வட்சப் சென்றேன்.

மனதில் இடி விழுந்தது போல ஆயிற்று. இருவரும் உரையாடிய குறுந்தகவல்களையும், ஒன்றாக எடுத்த புகைப்படத்தினையும் அனுப்பியிருந்தாள். சிறகுடைந்த பறவை போல தடுமாறினேன்.

பல பிரச்சினைகளுக்கு மத்தியில், இருவரின் வீட்டிலும் சம்மதம் பெற்றோம். பட்டப்படிப்பு முடிந்து, வேலைக்குச் சென்றதும் திருமணம் என முடிவு செய்து இருந்தனர்.

என் கண்னை பார்த்து, பிள்ளை ஏதோ! பிரச்சினையில் உள்ளது என்று அறிந்த அம்மா. அருகில் வந்து என்னை அணைத்து, என்ன? நடந்தது என்று கேட்டார். சொல்ல முடியாமல் அழுதேன். உடனே அவனுக்கு அம்மா தொலைபேசி அழைப்பினை எடுத்தார்.

அம்மாவிடம் கூறினான். அது யார்? என்று தெரியாது. என்னுடைய வளர்ச்சியினை பிடிக்காத யாரோ? இத்தகைய செயலினை செய்துவிட்டார்கள். என்னை நம்புங்கள் என்றான். அவனது நாடகம் அறியாது அவனை நம்பினார்கள்.

மீண்டும் காதல் மலர்ந்தது.  மூன்று மாதங்கள் கடந்தோடின. மீண்டும் கஜியின் தொலைப்பேசி அழைப்பு வந்தது.

ஹலோ!!!

ஹலோ... உன்னோட பேசனும்.

சொல்லுங்க....!

அவனோட நீ பேசுறீயா? பொய் சொல்லாம சொல்லு!

ஆமா..!!

தெரிஞ்சித்த பேசுறீயா நீ!

'என்ன சொல்லுற' என்றேன்

அவள் தொடர்ந்து என்னோடு பேச ஆரம்பித்தாள். அவன் புதிதாக பிரியா என்ற பெண்ணை காதலிப்பதாகவும், அவளை திருமணம் முடிக்கப் போவதாகவும் என்னிடம் கூறினாள். மீண்டும் நிலைகுலைந்து போனேன்.

ஒவ்வொரு முறையும் மிக கடுமையான வார்த்தைகளில் பேசும் கஜி அன்று ஆறுதலாக பேசினாள். நீ மிகவும் அப்பாவியாக இருக்கிறாய். அவன் உன்னை மீண்டும் ஏமாற்றுகிறான். என்னை ஏமாற்றியது போல பிரியா என்ற பெண்ணையும் இப்போது ஏமாற்றுகிறான். இதற்கு மேலும் அவனை நம்பி வாழ்க்கையை அழித்துக் கொள்ளாதே..  பணத்திற்காக என்னை காதலித்தான். இப்போது பிரியாவையும் பணத்தாசையில் தான் காதலிக்கிறான் என்றாள்.

அவளுடைய வார்த்தைகளில் உண்மையும், துரோகத்தின் வலியும் தெரிந்தன.

வீட்டில் சொல்ல முடியாது தவித்தேன். அவன் பேசுவதையும் குறைத்து விட்டான். இருவருக்கும் இடையில் இடைவெளி அதிகதித்தது..

நண்பர்கள் பலரிடம் சொல்ல ஆரம்பித்தான். நான் வேறொரு நபரை காதலிப்பதாகவும் அதனால் பேசாமல் அவன் விலகியிருப்பதாகவும்... 

காலம் கடந்தது.. என் நண்பர்கள் என்னை பார்த்து, அவன் பாவம் தானே நீ! ஏமாற்றி விட்டாயாமே.! என்றார்கள். தாங்கிக் கொள்ள முடியாத வலி.

அப்பா, அம்மாவிடம் கூறி கதறியழுதேன். பத்து வருட அன்பை பணத்திற்காக ஒரே வார்த்தையில் தூக்கி வீசினான். நீ எனக்கு வேண்டாம். உன்னை பிடிக்கவில்லை. என்னை விட்டு விடு என்றான்.

என்னோடு இணைந்து தந்தை தாய் இருவரும் அழுதார்கள். நம்பிக்கை துரோகத்தின் வலியையும், ஏமாற்றத்தின் வலியையும் கற்றுக் கொடுத்துவிட்டு போனான்.

சதா என்னை பார்த்தவாறு இருந்தாள்.. நீ சந்தோசமாக இருக்கிறாய் என நினைத்து உன்னிடம் கேட்டேன். மனதில் இப்படியொரு வலியை சுமந்துக் கொண்டிருப்பாய் என அறியவில்லை.. யோசிக்காதே காலம் பதில் சொல்லும் என கூறியவள். என் அம்மா அழைக்க சமையல் அறைக்குள் சென்றுவிட்டாள்.

என் வாழ்க்கையில் நான் கற்ற பாடம் நம்பிக்கை. காலம் கடந்துச் செல்லும். நாம் கற்ற பாடம். நமக்கு துரோகம் செய்தவர்கள் கற்கும் வரை வலியின் கொடுமை புரியாது.

நன்றி!

பரமசிவம் இந்துஜா

இலங்கை.

 

 

15.K2K 00079

தோழமை தந்த பாடம்

அவள் சீதா..பெயருக்கு ஏற்றாற்போல் நல்ல அழகு. சிறுவயதிலிருந்தே தனிமையில் வளர்ந்த நான், தோழியர் வட்டத்தில் என்னை இணைத்துக்கொள்வேன். அப்படித்தான் புதிதாய் பள்ளியில் சேர்ந்த சீதாவையும் எங்கள் வட்டத்தில் இணைத்தேன்.

என் பெற்றோருக்கு நான் ஒரே மகள். அப்பா அரசு வங்கியில் நல்ல பணியிலிருந்தார். அளவற்ற சுதந்திரம் எல்லையில்லாத மகிழ்ச்சியோடு வளர்ந்தேன். உடன்பிறந்தோர் இல்லை என்ற குறையை என் தோழிகள் போக்கி கொண்டிருந்தனர். விடுமுறை நாட்களில் என்வீட்டில் அனைவரும் கூடுவர். அம்மா விதவிதமாய்ச் சுட்டுத்தரும் பலகாரங்களோடு விளையாட்டும் கும்மாளமுமாய் பொழுதைப் போக்குவோம்.

அதென்னவோ தெரியவில்லை..சீதாவை எனக்கு மிகவும் பிடித்துப்போயிற்று. அவளின் அப்பா கூலித்தொழிலாளி. சீதாதான் மூத்தவள். தம்பியர் இருவர்.

ஒன்பதாம் வகுப்பில் விளையாட்டோடு சற்று படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. சீதா எனக்கு கணிதப் பாடத்திலிருந்த சந்தேகங்களைத் தெளிவித்தாள். அந்த அரையாண்டுத் தேர்வில் மிக எளிதாக தொண்ணூறு சதவிகித மதிப்பெண்களைப் பெற்றேன் நான்.

மிகுந்த மகிழ்ச்சியோடு சீதாவைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டேன, அவளோ வெட்கத்தில் நெளிந்தாள். அவளுக்கு அன்பின் வெளிப்பாடாய் ஏதாவது வாங்கித் தரவேண்டுமென்ற எண்ணத்தோடு பலவாறு யோசனை செய்து, அம்மாவின் உதவியோடு பட்டுப்பாவாடை தாவணி எடுத்துக் கொடுத்தேன்.

"எனக்கு எதுக்கு புனிதா இதெல்லாம்.." என மறுத்தாள்.

"என்னோட அன்பை புறக்கணிக்காதே சீதா.."நான் உருக்கமாய்ச் சொல்ல ஏற்றுக்கொண்டாள்.

பெரிய மனுசி போல் அறிவுரையெல்லாம் சொல்வாள். பெரும்பாலும் மோர்சாதம்தான் அவளது உணவு. நான் கொண்டுபோகும் உணவை அவளுக்கும் பகிர்ந்து கொடுப்பேன்; விரும்பி சாப்பிடுவாள்.

"படிக்கணும் புனிதா..படிச்சு எங்க வீட்டோட நிலையை மாத்தணும்..பெரிய ஆளா வந்து இந்த பள்ளிக்கே சிறப்பு விருந்தினரா வரணும்.."

 உணர்ச்சியோடு சொல்கையில் இலட்சிய வெறி அவள் கண்களில் தெரியும்.

இரட்டைச் சகோதரிகள் எனச் சொல்லும் வகையில் நெருக்கத்தோடு எங்களின் தோழமை வளர்ந்தது.

பத்தாம் வகுப்பில் அனைவருமே போட்டி போட்டு படித்தோம். எதிர்பார்த்ததைப் போல நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றோம், சீதா பள்ளியிலேயே முதல் இடத்தைப் பிடித்திருந்தாள். பாராட்டும் பரிசுகளும் குவிந்தன. நானும் உயர்ரக வாட்சை வாங்கி அவளுக்குப் பரிசளித்தேன்.

அவள் மருத்துவராகும் கனவில் அறிவியல் பிரிவில் சேர்ந்தாள். நான் வணிகவியலைத் தேர்வு செய்தேன். பிரிவுதான்..முதல்முறையாக.. இருப்பினும் பள்ளி இடைவேளைகளிலும் பள்ளி முடிந்த பின்னும் எங்களது நட்பு தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.. கொஞ்ச நாளுக்குப் பிறகு சீதாவிடம் மாற்றம் தெரிந்தது..என்னிடம் பழகுவதைத் தவிர்த்தாள்...எதையோ என்னிடமிருந்து மறைக்க முயன்றாள்..தலையலங்காரமும் நடை உடை பாவனைகளும் மாறிப்போக ..புதிய சீதாவை எனக்கே அடையாளம் தெரியவில்லை..அவளிடம் வலியபோய் பேசினாலும் சில வார்த்தைகள் பேசிவிட்டு நழுவ ஆரம்பித்தாள். வெறுத்துப்போய் அவளாய் வரட்டுமென ஒதுங்கி விட்டேன் நான்..

திடீரென ஒருநாள்..காலை நேரத்தில் சீதாவின் அப்பா என் வீட்டு வாசலில்..என்னவென அம்மா கேட்க..சீதாவை நேற்றிலிருந்து காணவில்லையாம்.

"தேடாத இடமில்லைமா...ஸ்கூலுக்கு போறேன்னு போனவ திரும்பி வரவேயில்ல..அதான் புனிதாகிட்ட ஏதாவது சொன்னாளான்னு.. "அவர் கேட்க பலமாய்த் தலையை ஆட்டினேன் நான். நம்பாதவராய்த் திரும்பி போனார்.

 அம்மாவும் துருவித்துருவி என்னை விசாரித்தாள். எனக்கு ஏதாவது தெரிந்தால்தானே சொல்ல..

மறுநாள் பள்ளி முழுவதும் சீதாவை பற்றியே பேசிக்கொண்டிருந்தனர். என்னிடம் விவரம் அறிய முயன்றனர்; நான் சொன்னதை யாரும் நம்ப மறுத்தனர்.

"பார்க்க பதுசு மாதிரி இருந்துண்டு.. என்ன செஞ்சிருக்கா பார்..ஊரை விட்டு ஓடிப்போனவ இவகிட்ட சொல்லாமலா போயிருப்பா..அப்பன்காரன் பொண்ணே வேணாம்னு தலைமுழுகிட்டானாம்.. அடுத்து இவ எப்போ கம்பி நீட்டப்போறாளோ தெரியலை.." நாக்கு தீக்கங்குகளைக் கொட்டியது.. எனக்கு பள்ளிக்கு போகவே பிடிக்கவில்லை..அப்பாவிடம் அழுது அடம்பிடித்ததில் ...வேறு பள்ளியில் சேர்த்து விட்டார். இன்றுவரை சீதாவை என்னால் மறக்க முடியவில்லை..பள்ளிமாறி கவனம் சிதறியதால் மேல்நிலைத் தேர்வில் நல்ல மதிப்பெண்களும் எடுக்க முடியவில்லை.. யாரிடமும் தோழியாக நெருங்கி பழகவும் மனமின்றி தனித்தே வாழ்கிறேன் இன்றுவரை நான்.

கருத்து: நட்பு சுகத்தை மட்டுமன்று சிலசமயம் மாறா இரணத்தையும் கொடுத்து விடுகிறது.

பெயர் கி. இலட்சுமி

 

 

16.K2K 00080

என் வாழ்க்கைப் பாடம்

நமது வாழ்க்கையில் கடந்து வந்த பல்வேறு பாதைகளில் பல்வேறு அனுபவங்கள் பல்வேறு பாடங்களை நமக்குக் கற்றுத் தந்துவிட்டுத் தான் போயிருக்கின்றன.

இது வரையில் பெற்ற அனுபவங்களில் மிகப் பெரிய பாடத்தைக் கற்றுத் தந்திருப்பது இந்தக் கொரானோ நோய் தான் என்று நினைக்கிறேன்.

வாழ்க்கையின் எத்தனையோ முக்கியமான விஷயங்களைப் பின்தள்ளி விட்டு உயிரைக் காத்துக்கொள்வது தான் அதிமுக்கியம் என்று நம் அனைவரையும் வீடுகளில் சிறைப்படுத்தி விட்டது.

வீட்டு சமையலை கேலி பேசிக் கொண்டு வாரத்திற்கொரு முறை, மாதத்திற்கொரு முறை வெளியே சாப்பிட்டு வந்த வழக்கம் போயே போச்சு!

இல்லத்தில் பெண்களின் சமையலறை வேலைகள் மிகவும் அதிகமாகி விட்ட நிலையில் குடும்பத் தோரை இன்முகத்துடன் நகர்த்தி வருகிறார்கள் பெண் தெய்வங்கள்.

பீரோவில் விதவிதமாக வாங்கி அடுக்கி வைத்திருக்கும் புதுப் புடவைகளுக்கும் பெண்களின் உடலை அலங்கரிக்கும் வேளை வரவேயில்லை, இத்தனை வாங்கிச் சேர்த்தது தவறு என்ற கசப்பான உண்மை புரிந்து விட்டது.

விதவிதமான பிரம்மாண்டமான கண்ணைக் கவரும் விளம்பரங்களுடன் நம்மைக் கவர்ந்திழுக்கும் மால்களும் ஜவுளிக் கடல்களும் நகைக் கடைகளும் இழுத்து மூடப்பட்டாலும் தினசரி வாழ்க்கையில் ஒரு பாதிப்பையும் அவை ஏற்படுத்தவில்லை. மீண்டும் நிலைமை இயல்புக்கு வந்த பிறகும் அவற்றைத் திரும்பிப் பார்க்காமல் இருக்கப் போகிறோமோ தெரியவில்லை.

ஆலயங்களும் பல்வேறு வழிபாட்டு ஸ்தலங்களும் மூடப்பட்ட நிலையில் நடமாடும் தெய்வங்களாக ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்களுக்கும் செவிலியர்க்கும் மனதார நன்றி சொல்ல வேண்டும். இந்தக் கலியுக தெய்வங்கள் அவர்களே!

தேர்வுகள் இல்லாமல் வெற்றி என்பது மாணவர்களுக்கு நல்லதா கெட்டதா என்று புரியவில்லை, ஒவ்வொரு வருடமும் இதே போல ஏதாவது புதிய பிரச்சினை வந்தால் நன்றாக இருக்கும் என்று அவர்கள் எண்ணிக் கனவுகள் காணத் தொடங்கி விட்டால் கல்வியின் தரம் குறைந்து விடும், அது வேறு கவலை தருகிறது.

இந்த வருடம் இறுதியாண்டுப் படிப்பை முடித்து விட்டு வேலையில் சேரக் காத்துக் கொண்டிருக்கும் இளைய தலைமுறையின் மனநிலை இப்போது எப்படி இருக்கும்?

வீட்டு வேலைக்கு உதவி செய்யும் ஆட்கள் இல்லாமலும் வீட்டை சமாளிக்க முடியும் என்ற தெம்பு வந்துவிட்டது.

கணினிகளையும் ஸ்மார்ட் ஃபோன்களையும் எப்போதும் திட்டிக் கொண்டிருந்த முதியவர்கள் கூட இன்று அவற்றின் மகத்துவத்தை உணர்ந்து விட்டார்கள்.

பள்ளி, கல்லூரிகளை மூடினாலும் ஆன்லைனில் வகுப்புக்களை தொடர்வதற்காக ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கும் பெரிய கும்பிடு.

அனைவருக்குமே ஒரு மனமுதிர்ச்சி வந்திருக்கிறது, பல நாட்களாகப் பேசாத உறவுகளிடமும் நண்பர்களிடமும் கூட மீண்டும் நாமாகவே ஃபோன் செய்து பேசி உறவையும் நட்பையும் புதுப்பித்துக் கொண்டது நல்ல ஆரோக்கியமான மனநிலை, உறவுகள் தொடர்கதை, நண்பர்கள் ஊன்றுகோல்கள் என்ற உண்மைகள் புரிந்து மனதில் நான் என்ற அகந்தை குறைந்து விட்டது.

வெளியே போவதில்லை, பயணங்கள் ரத்து என்பதால் செலவுகள் பெருமளவில் குறைந்து போயின, அடிக்கடி வெளியிடங்களில் சென்று உணவருந்தாததாலும் வீட்டில் சுகாதாரத்தைக் காக்க எடுக்கும் நடவடிக்கைகளாலும் அடிக்கடி ஏற்படும் சிறு சிறு உடல் உபாதைகளும் மருத்துவமனை விஸிட்களும் பெருமளவில் குறைந்து போய்விட்டன.

குடும்பத்துடன் எல்லோரும் சேர்ந்து ஒன்றாக இருப்பதால் குடும்பப் பிணைப்பும் பாசமும் கூடி விட்டன என்பது எனது கருத்து.

என்னுடைய பேரன் மூன்றரை வயது, அவன் எனக்குச் சிறப்பான பாடம் கற்றுத் தந்தான்.

" சொன்னதைக் கேட்காமல் அழுது அடம் பிடித்தால் பூச்சாண்டி வந்து பிடித்துக் கொள்வான்",

என்று நான் பயமுறுத்த அவனும் சளைக்காமல்,

" பூச்சாண்டி வரமுடியாது பாட்டி, வெளியில் கொரானோ வைரஸ் அவனைப் பிடிச்சுக்கும்", என்று சொல்லி என் வாயை அடைத்தான்.

என் பேரன் சாமிக்குப் பெருங் கும்பிடு!

கொரானோ என்ற வியாதி பெரும் ஆசான்!

புவனா

 

 

17.K2K 00081

 என் வாழ்க்கை பாடம்

"ரெண்டாவதும் பொட்டப் புள்ளையா? யாருகாச்சும் குடுத்துடு..."

"ரெண்டும் பொண்ணா... இந்த கோயிலுக்குப் போய் பூஜை பண்ணுங்க. பையன் பொறப்பான்..."

"பொட்டப் புள்ள தானே..இவ்ளோ படிக்க வெக்கணுமா? ஒழுங்கா வீட்டு வேலை கத்துக்குடுத்து கல்யாணம் பண்ற வழியப் பாரு..."

பிறந்தது முதலே இந்த வார்த்தைகள் அடிக்கடி என் காதில் ஒலித்த வண்ணம் இருந்தன. எங்கள் பெற்றோருக்கு நான் மற்றும் என் அக்கா என இரு (பெண்)பிள்ளைகள். பெண்ணாகப் பிறப்பது பெரும் குற்றமென்று சிறுவயது முதலே உலகம் எங்களுக்குப் போதித்தது. நான் பிறந்த போது, இரண்டாவதும் பெண்ணென்று உறவினர்கள் யாரும் மருத்துவமனையில் பார்க்கக் கூட வரவில்லையாம்.

பிழையென்ன செய்தேன் பெண்ணாய் பிறந்தேன், யாமரியேன் பராபரமே!

இரண்டும் பெண் பிள்ளைகள் என்பதால் என் பெற்றோரை ஏளனம் செய்யாதவர்களே கிடையாது. ஆண்மகனைப் பெறாமல் போனது ஏதோ பெரியத் தவறு இழைத்ததைப் போன்று சமூகத்தில் பார்க்கப்பட்டது (இன்றும் பார்க்கப்படுகிறது). பெண் பிள்ளைதானே என்று என் அப்பாவிற்கு சொத்தில் பங்கு தர மறுத்த கதைகளும் எங்கள் வீட்டில் அரங்கேறியுள்ளன.

ஆனால் என் பெற்றோர் எப்போதும் எங்களைக் குறைவாக நடத்தியது இல்லை. எங்கள் இருவருக்கும் நல்ல தரமான கல்வியைக் கொடுத்தனர். சுயமாக முடிவெடுக்கும் உரிமையைக் கொடுத்தனர். பிறர் கூறுவதைக் கண்டுகொள்ளாமல் நம் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்று வலியுறுத்தினர். சமூகத்தின் குரல் எங்கள் வாழ்வை பாதிக்காத வண்ணம் பார்த்துக்கொண்டனர்.

"போற்றுவார் போற்றுவதும் தூற்றுவார் தூற்றுவதும் போகட்டும் கண்ணனுக்கே" இதுவே என் தந்தை எனக்கு போதித்தத் தாரக மந்திரம்.

பெற்றோரின் கஷ்டங்களைப் புரிந்துகொண்ட நாங்கள் இருவரும் நன்கு படித்தோம். கல்வியில் சிறந்து விளங்கி அதன் பயனாக நல்ல வேலைக்கும் சென்றோம். பெண்தானே என்ன செய்துவிடுவாள் என்று கேலி செய்தவர்களுக்குப் பதிலடி குடுக்கும் விதமாக இன்று நாங்கள் சமூகத்தில் உயர்ந்து நிற்கின்றோம்.

இருபத்தெட்டு வருடங்கள் கழித்து ....

"முதல் குழந்தை ஆணாக இருந்து இருக்கலாம்..."

மேற்கூறிய வார்த்தைகள் நான் பிரசவித்த சில மணி நேரங்களில் என் செவிக்கு வந்தவை.

இந்த உலகத்தைத் திருத்தவே முடியாது என்பதைத் தெளிவாக உணர்ந்த நான், என் மகளின் செவிக்கு இவ்வார்தைகள் எட்டாதிருக்க என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று யோசிக்கத் தொடங்கி விட்டேன்.

நீதி: சமூகத்தையும் அதில் இருக்கும் குறைகளையும் நம்மால் அவ்வளவு எளிதில் மாற்ற முடியாது. நம் வாழ்க்கையை நமக்காக வாழ்வோம்.

-Narmada

 

 

18.K2K OOO99

என் வாழ்க்கை பாடம்

வீட்டுக்கு ஓரு பெண் என்று மிகவும் செல்லமாக வளர்ந்த பெண். அதனால் சின்ன வயதில் கல்யாணம். உடனடியாக இரு குழ்ந்தைகள்

மணவாழ்க்கை நினைத்தபடி இல்லை. துன்பம் துயரம். காலம் எல்லாம் காப்பாற்றும் என்ற மன வாழ்க்கை கை விட்ட அவலம்.  மிகவும் சிறிய வயசு செல்லமாக வளர்ந்து விட்டதால் வெளி உலகம் தெரியாத வெகுளி பயம்.  ஆனால் குழந்தைகளின் எதிர்காலம் கருதி துயரத்தை முழுங்கி மேல படித்து தேர்வு எழுதி அரசு உத்தியோகம். பட்டினத்தில் வேலை. இரண்டு வரிகளில் எழுதி விடலாம் ஆனால் அதற்குள் சொல்ல இயலாத துயரம்.

ஒரு சின்ன பெண் சிங்கள் மதர் வெளியே தனியே வந்ததும் முதலில் பயம் சற்று போனவுடன் உலகம் சற்று புரிந்தது.

தைரியம் புருஷ லச்சனம் மட்டும் அல்ல.  பெண்கள் நிமிந்து வாழ அதுவும் அவசியம். என அறிந்து நிமிர்ந்து நின்றதால்   தயக்கம் ஒதுக்கி தைரியம் பழக,  எல்லோருக்கும் மரியாதை வந்தது.  இயல்பாக எல்லோருக்கும் உதவும் குணம் இருந்ததால் மெல்ல மெல்ல சங்க பணிகளில் ஆர்வம்.  சங்கம் தந்த பயிற்சிகள் ஓரு துரும்பு பெண் இரும்பு பெண்ணாக மாற்றம்.  வாழ்வில் துணை இன்றி சமாளிக்கவும் சிங்கள் மதர் ஆக பிள்ளைகளை தன் பெற்றோர் துணையுடன் வளர்க்கவும் ஓரு தன்னம்பிக்கை வளர்த்தது.

அலுவலகத்திலும் பணியில் உயர்வு கிடைத்ததுடன் பணியாளர்களும் அலுவலர்களும் ஓரு மரியாதையாக பார்க்கவும் மாற்றம் வந்தது.

கோழி குஞ்சு போல பயந்த ஓரு பெண்மணி தன்னம்பிக்கையால் தான் பணி புரிந்த துறை சங்கத்துக்கு தலைவர் ஆகும் வாய்ப்பும் தன்னால் வந்தது பிள்ளைகளும் வளர்ந்து வெளிநாடுகளில் பதவிகள் கல்யாணம் என வாழ்க்கை தரம் உயர்ந்தது. பிள்ளைகளின் கல்யாண பத்திரிகைகளில் கூட தன் பெயரை மட்டும் போடும் அளவுக்கு அவளின் சுய மரியாதையும் உயர்ந்தது.

இந்த சம்பவங்களின் என் வாழ்க்கையில் நடந்தவை எனக்கு கிடைத்த பாடம் பெண்களுக்கு கல்வி வேலை பொருளாதார சுய சார்பு அவசியம் மன வாழ்க்கை கொஞ்சம் சறுக்கினால் சுயநலமாய் சிந்தித்து உடைய கூடாது.  பிள்ளைகள் மேம்பட கண்ணியமாக தைரியமாக உலகை எதிர் நோக்க வேண்டும் தடை கற்களை படிகள் ஆக மாற்றி மேலே ஏற வேண்டும். ஏளனம் செயதோர் தலை கவிழ சாதிக்க சாம்பலில் இருந்து எழும் பீணிக்ஸ் பறவையாக பெண்கள் அவதாரம் எடுக்க வேண்டும்

எல்லாவற்றையும் கடந்து தற்போது இந்த வருடம் ஒர்கிங் வுமன் அசிவர் அவார்ட் பீனிக்ஸ் category வாங்கும்போது வாழ்க்கை பாடம் கற்று சரியான பாதையில் போய்க்கொண்டு இருக்கிறோம் என்ற திருப்தி ஏற்பட்டது.

 

-KK MADAM

 

 

19.K2K-00101

ஏன்டா எப்போமே உனக்கு மட்டயும் பந்தும் தான் வாழ்கையா "அந்த புக் எடுத்து வெச்சு கொஞ்சம் படிக்கலாம் " என்று கூறி கொண்டிருந்த தாயின் அதட்டலை கேட்டு கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான் ஹரி.

ஆம். மணி மாலை 6 தாண்டி வேகமாய் சென்று கொண்டிருந்தது. ஹரி கெட்டிக்காரன் தான். படிப்பில் 80 சதவீதம் எடுத்து விடுவான். ஆனால் சற்று இன்னும் ஆர்வமாய் படித்தால் 90 எடுக்க வைக்கலாமே அடுத்த வருடம் ஃபீஸ் கட்ட ஸ்காலர்ஷிப் கிடைக்குமே என்று அந்த தாயின் எண்ணம் எப்போதும் அவனை முட்டிக்கொண்டு ஓட செய்து கொண்டிருந்தது.

ஹரிக்கு எப்போதுமே அந்த கிரிக்கெட் மீது ஏனோ அலாதி ஆர்வம். மதியம் சென்றால் மாலை வரை ஆடி விட்டு தான் கால் வீட்டுக்குள் நுழையும்.

இன்னிக்கு நீ இப்டி ஆடிட்டு இருக்க ஒரு நாள் உன் கையில் பேட்டும் பாளும் வாங்க காசு இருக்கும் ஆனா நேரம் இல்லாம சுத்த போற அன்னிக்கு உன்கிட்ட பேசிக்கிறேன் என்று கூறி கொண்டிருந்த அந்த தாயின் சொல் முடிவதற்குள் அப்டி லாம் இல்ல மா. நீ வேனா பாரு நா எப்போமே இப்படிதான் இருப்பேன் என்று கூறி கொண்டே சென்று விட்டான்.

வாழ்க்கையும் ஒரு வட்டம் தானே. வட்டம் சுழன்று ஓடி இன்று அவன் நல்ல பேங்க் ஒன்றில் வேலை செய்து கொண்டு அப்பா அம்மா என்று இன்பமாய் வாழ்ந்த போதும் அன்று அவன் அம்மா கூறியது போல இன்று அவனால் அந்த கிரிக்கெட் ஆட முடியாமல் நேரம் இன்றி வாழ்க்கை முன்னேற்றம் நோக்கி ஓடி கொண்டிருக்கிறான்.

விடுமுறை நாளிலும் பழைய நாட்களை போல் விளையாட நண்பர்கள் சேருவது இல்லை.

எதை நாம் அதிகம் நேசித்து வாழ்நாள் முழுவதும் இன்பமாய் இருக்கும் என்று ஓடுகிறோமோ அது இன்றியும் ஒரு நாள் நம் வாழ்க்கை ஓடும் என்பது என் வாழ்வில் நான் கற்று கொண்ட பாடம்.

-ஹரீஷ்

 

 

 


Comments

Popular posts from this blog

Father

சுய விருப்ப கதைகள்

LGBTQ & DISABILITY