நறுமணம்

1.K2K-00002                                                                                                                                

நறுமணம் என்று சொன்னவுடன் ஞாபகத்திற்கு வருவது இயற்கையின் மண்வாசனை மணமும், மல்லிப்பூவின் மணமும், தன் அம்மா செய்கின்ற   உணவை மணத்தை வைத்து சொல்வதில் வல்லவராக இருப்பர். குழந்தைகளுக்கு தன் அம்மாவின் சேலையின் நறுமணம் இல்லாமல் இருக்கமாட்டார்கள். சிலர் வீட்டில் விருந்தினர்களின் மனநிலையை மேம்படுத்த நறுமணங்களைப் பயன்படுத்துவார்கள். பல்பொருள் அங்காடி நறுமணம் நிறைந்தது. ஒவ்வொரு நறுமணத்திற்கும் சிறப்பம்சம் உண்டு. நாம் நல்ல நறுமணத்தை நுகரும் பொழுது நமக்குள் இருக்கும் ஒரு வித உணர்ச்சியை தூண்டிவிடுகின்றன.                

கற்பனைக் கதை- 

சதிஷ் வாலிப வயது உடையவன் தனது பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக அலைந்து திரிந்தான். எந்த ஒரு நிறுவனத்திலியும் வேலைத் தரவில்லை. ஏனென்றால் அவன் மேல் வந்த வாசனை திரவியத்தின் நறுமணம் காரணத்தில்தான் வேலை கிடைக்கவில்லை என அவனுக்கு தெரியவில்லை ஆனாலும் மனம் தளராமல் முயற்சி செய்கிறான். ஒரு நாள் நேர்முகத்தேர்வுக்கு தயாராகி கொண்டுருந்த வேளையில் அவனுடைய தங்கை மூன்று பாட்டிலின் வாசனை திரவியத்தை ஒன்றாக கலந்து அவனது உடம்பில் படர விட்டால். சதிஷ் தங்கையிடம் போதும் நேரம் ஆகி விட்டது பஸ் போய்டும் என்று சொன்னான். அண்ணன் பேச்சை கேட்காமல் தங்கை அவள் பணியில் மும்முரமாக செயல்பட்டால். அண்ணனுக்கு கோபம் வந்து அவளை "பளார்" என அறைந்து விட்டு கிளம்பி சென்று விட்டான். அவன் போனதுமே பஸ் வந்துவிட்டது. படிக்கட்டில் நின்றான். அப்போது ஒரு பெண்மணி அவனிடம் "எந்த வகையான வாசனைத் திரவியத்தின் பயன்ப்படுத்திகிறீர்கள் நல்ல நறுமணமாக இருக்கிறது அதன் பெயர் என்ன?" கேட்டாள் சதிஷ் அதற்கு தெரியவில்லை என்று கூறி அவனுடைய நிறுத்தம் வந்ததும் இறங்கிட்டான். அவன் போகிற வழியில் ஒரு சிற்றுண்டி சாலையைக் கடக்க அவனுக்கு பிரட், கேக்,வடை,காபியின்  என பல நறுமணத்தை நுகர்ந்துக் கொண்டு செல்கையில் அவனுக்கு அது பசியின் உணர்வை தூண்டிவிட்டது. அப்போது அவன் கண்ணுக்கு ஒரு பிச்சைக்காரர் சமோசா விற்கிறவரிடம் வாக்குவாதம் நடப்பதை கவனித்து அங்கு சென்று சமோசாவை வாங்கி அந்த பிச்சைக்காரரிடம் கொடுக்க அருகில் சென்ற போது அவனுக்கு கெட்ட நறுமணம் வர தண்ணீர் பாட்டிலையும் அவரிடம் கொடுத்துவிட்டு யோசித்து கொண்டே நடக்கிறான் நம் உடலில் வரும் சிறு வியர்வை வாடையே பிடிக்காது. துப்புரவு பணியாளர், சாக்கடைக் கால்வாய், கழிவுநீர்க் கால்வாய்களை சுத்தம் செய்தல், வடிகால்களை தூய்மைப்படுத்தல் உள்ளிட்ட பணிகளை எந்த ஒரு அருவருப்பும், முகத்தையும் சுளிக்காமல், துர்நாற்றத்தையும் மற்றும் அவர்களின் உயிரையும் துச்சமாய் பொருட்படுத்தாமல் உலக மக்களின் நன்மைக்காக மகத்தான பணியை தியாகமாக பணியாற்றி வருகிறார்களே என்று யோசித்துக் கொண்டே நிறுவனத்துக்கு வந்தடைந்துவிட்டான். சிறிது நேரத்திலேயே நேர்முகத்தேர்வுக்கு சதிஷ் பெயரை அழைத்தார்கள் உள்ளே சென்றான் மேனேஜர் உள்ளத்தை நறுமணத்தால் கவர்ந்துவிட்டதால் வேலை கிடைத்தது. மேனேஜர் கடைசியில் என்ன வாசனைத் திரவியம் பயன்ப்படுத்துகிறீர்கள் என கேட்டார். என் தங்கை இன்று பரிசாக கொடுத்ததாள் நேர்காணலுக்கு சீக்கிரம் வரணும்னு நினைத்ததால் அதன் பெயர் பார்க்கவில்லை சார். சேரும்போது வாசனைத் திரவியம் பெயர் சொல்றேன் சார் என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான். தன் தங்கைக்கு பரிசு கொடுத்து, சமாதானம் படுத்திவிட்டான்.      

கருத்து: ஒரு நபர் பழக்கமான நறுமணத்தை வேறு இடத்தில் எதிர்கொள்ளும்போது, முன்பு அனுபவம் வாய்ந்த உணர்ச்சிகள் அவனுக்குள் விழித்தெழுகின்றன. அது ஒரு சிறந்த மனநிலையையும் புத்துணர்வையும் உருவாக்குகிறது, மக்கள் கண்களையும் காதுகளையும் "மூடுகிறார்கள்". ஆனால் நாம் மிகவும் இனிமையான மற்றும் சிறந்த வாசனையை நுகரும் போது மூக்கை மூடி விட முடியாது, ஏனென்றால் நாம் நல்ல காற்றினையையும் நறுமணத்தையும் சுவாசிக்கிறோம், மேன்மேலும் நம்மளைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலை பாதுகாத்து "நல்லதையே பேசுவோம்..! நல்லதையே சுவாசிப்போம்..!!     

கொரோனா கதை குழுவிற்கு: நறுமணம் என்ற தலைப்புக்கு 5000 வார்த்தைகளுக்கு மேல் எழுதலாம்..பல கோணங்களில் சிந்திக்க வைத்தது இந்தத் தலைப்பு கொடுத்ததற்கு நன்றி..பாராட்டுக்கள்..!!

- லக்ஷ்மி பிரியா

 

2.K2K0003

நறுமணம்

 

 வணக்கம் தோழர்களே, காலை வணக்கம் மற்றும் கவிதை 003 வானொலி நிலையத்திற்கு வருக. இன்று நான் இந்த சிறப்பு விருந்தினருடன் பலவிதமான நறுமணங்களைப் பற்றி பேசப் போகிறேன், முதல் பாடலுக்குப் போவோம். கல்பனா ஆற்றல் நிறைந்த வீட்டுப் பெண், அவளும் திமிர்பிடித்தவள், அவள் வேலையை நேசிக்கிறாள். அவளுடைய வானொலி நிலையத்தில் அவர்கள் ஒரு போட்டியை நடத்துகிறார்கள். அது சமைக்கும் போட்டியாகும். கல்பனாவும் ஒரு போட்டியாளர்.அவர் அந்த போட்டியை தவறான வழியில் வெல்ல திட்டமிட்டார், ஆனால் ஒரு நபர் தனது அனைத்து திட்டங்களையும் துண்டுகளாக அழிக்கிறார், அவர் சஞ்சய் ...... தனது வானொலி நிலையத்தின் ஒரு அழகான பையன். அவரைப் பொறுத்தவரை சமையல் என்பது நறுமணத்தை அடிப்படையாகக் கொண்டது. அவரது அப்பா ஒரு பிரபலமான உணவகத்தில் சமையல்காரர். அவரது உதவியால் அவர் அந்த போட்டியில் கலந்துகொண்டு கல்பனாவைத் தவிர அனைவரின் இதயத்தையும் வென்றார். கல்பனா பதற்றமடைந்து அவரது தோல்விக்கு கோபமடைந்தார்.சஞ்சய் அவளிடம் சொன்னார், எதிர்மறையாக இருக்க வேண்டாம் எல்லா நேரத்திலும், நேர்மையான இயல்புடன் சென்று, பின்னர் அந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள்.

கல்பனா ஒரு வாரம் சஞ்சய் மீது கோபமடைந்தார், அப்போது அவர் அவனுக்கு போன் செய்து, "அதற்காக நீங்கள் மட்டுமே வருந்துகிறீர்கள்" என்று சொன்னார் ... அதேபோல் அவர் சொன்னார் ... அவர் கல்பனா பேச்சில் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கிறார். அதே வானொலி நிலையத்தில் ஒரு வருடம் கழித்து சஞ்சோய் அழைத்தார் ஒரு நிகழ்ச்சியில் விருந்தினர், அந்த நிகழ்ச்சியை கல்பனா தொகுத்து வழங்கினார் .அவர் ஒரே நபரைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.அந்த நிகழ்ச்சி தொழில்நுட்ப ரீதியாக மிகச்சிறப்பாக இருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர்கள் இருவரும் பெற்றோரின் விருப்பத்தால் திருமணம் செய்து கொண்டனர் .........

 எல்லா நேரத்திலும் எதிர்மறையாக இருக்க வேண்டாம்.

பெயர்: சிந்துஜா. எம்

 

 

3.K2K-00004

நறுமணம்:

தீப்பெட்டிகளை அடுக்கி வைத்தார்போல பல அடுக்குகளை கொண்ட வானுயர் அடுக்கு மாடி குடியிருப்புகள் மிக நெருக்கமாக நிறைந்துள்ள நகரம் அது. எறும்புகள் வரிசையாக ஊர்ந்து செல்வது போன்று நான்கு சக்கர வாகனங்கள் தொடர்ச்சியாக நகர்ந்து செல்லும் சாலைகளை உடையது அந்த நகரம். மரங்களும், பறவைகளை காண்பது அரிதிலும் அரிதான நிகழ்வாக கொண்டு மனிதர்கள் மட்டுமே வாழும் பரிணாம வளர்ச்சி அடைந்த நகரம் அது. நகரம் உருவாக்கியதும், அது இயங்குவதற்கும், அதை எழில் கொஞ்சும் விதமாக விளங்கவும் அரும்பாடுபடுகின்ற தூய மனம் கொண்டவர்கள் வாழுகின்ற குடிசை பகுதி அது. நகரின் கழிவுநீர் வழிந்தோடும் ஆறுகளின் கறைகளில் அமைந்திருந்தது அந்த குடியிருப்பு. அதில் உள்ள ஒரு குடிசையின் வாசலில் அமர்ந்தாவாறு பள்ளி அனுப்ப துளசியை தயார் படுத்தி கொண்டிருந்தால் ராதா.

தூய்மை பணியாளராக பணிபுரியும் தம்பதிகள் கண்ணன், ராதாவின் ஏக புதல்விதான் இந்த துளசி. நகரத்தை தூய்மை செய்யும் உன்னத தொழில் செய்யும் இவர்கள் இருவரும் தன் மகளை அனைவரும் வியக்கும்படி ஒரு நல்ல நிலைக்கு வர வைக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தோடு தங்கள் சக்திக்கும் மீறி கான்வெண்டில் படிக்க வைத்து வந்தனர். துளசியும் அவர்களின் எண்ணப்படி வரவேண்டும் என்ற இலக்குடன் பயின்று வந்தாள். அன்று பள்ளி சென்றுவிட்டு வீடு திரும்பிய துளசியின் முகம் வாட்டமாக இருந்ததை ராதா பார்த்தாள். என்னம்மா துளசி பள்ளியில் ஆசிரியர் ஏதும் சொன்னார்களா என் இப்படி வாட்டமாக இருக்கிற என்று கேட்டாள். சொல்ல தயங்கியவாறு அன்று பள்ளியில் நடந்ததை சொன்னாள்அவள், அம்மா நான் இன்னைக்கு பள்ளிக்கு போனதும் அங்க உள்ள மத்த பசங்க எல்லாரும் வழக்கம் போல மூக்க மூடி என்னை கிண்டல் பண்ணாங்க. அது கூட பரவாயில்ல மா என் பக்கதில கூட யாரும் உட்கார மாட்டேன்னு சொல்லிட்டாங்க மா. அதான் மா கொஞ்சம் ஏதோ மாதிரி இருக்கு என்று கூறினாள்.

இதை கேட்ட ராதா என்ன சொல்வது என்று தெரியாமல் ஒரு நொடி தயங்கி பின் தொடங்கினால், துளசி உனக்கு தெரியாதது ஒன்னும் இல்ல நம்ம குடும்ப கஷ்டம். உன்ன எப்படியாவது பெரிய நிலைக்கு எடுத்திட்டு வரனும்னு தான் நானும், அப்பாவும் இப்படி கஷ்டப்படுறோம். நம்ம நிலைமைய பாத்து இன்னைக்கு சிரிகிறவங்க, பரிகாசம் பண்றவங்க பாராட்டிற மாதிரி வாழனும்மா அதுதான் எனக்கு வேணும் என்று சொல்லியவாறு கண்ணிர் சிந்தினாள் ராதா. பின்பு நிலைமையை உணர்ந்த துளசி இதுக்கு தான் மா நான் உன்கிட்ட சொல்ல மாட்டேன்னு சொன்னேன். எனக்கு நம்ம நிலைமை நல்லாவே தெரியும் மா. அவங்க சொல்றதெல்லாம் ஒரு பொருட்டே இல்ல நீ விடுமா என்று சொல்லி அம்மாவை கட்டி அணைத்து புன்னகை பூத்தாள் துளசி.

இரவு சாப்பாடு சாப்பிட்டு துளசி உறங்கியதும் ராதா கண்ணனிடன் நடந்ததை கூறி கவலையுற்றால், பின்பு ராதா கூறினாள் என்னங்க நாம பேசாம வேற ஏதாவது தொழில் பண்ணலாம்ங்க குழந்த ரொம்ப சங்கடப்படுறா, பள்ளியில் தினமும் அவள யாராவது இத சொல்லியே பரிகாசம் பண்றாங்களாம். மேலே நோக்கியவாறு இருந்த கண்ணன் இப்போது பேச தொடங்கினான், குழந்த தூங்கிட்டாளா என்று ராதாவிடம் உறுதி செய்து கொண்டு. அடிப்போடி பைத்தியம் நான் என்ன டிகிரியா படிச்சிருக்கேன் கலெக்டர் வேல பார்க்கிறதுக்கு, இந்த சர்கார் ஜோலி நமக்கு கிடச்சதே பெரிய புண்ணியம். மாசா மாசம் சரியான தேதிக்கு சம்பளம் வருதுல அத பாப்பிய வேற வேலைக்கு போகனுமாம்ல. அது போக நாம பாக்குற வேலையில அப்படி என்னடி நீ குறை கண்டுட்ட ஊர்ல இருக்கிற குப்பையெல்லாம் எடுத்து ஊர சுத்தம் பண்றோம். அடுத்தவங்களுக்கு நோய் நொடி வராமல் நாம தாண்டி பாத்துக்கிறோம். நாம பன்றதும் ஒரு வகையில சேவை தான். என் பொன்னுக்கும் இது நல்லாவே தெரியும், இந்த ஊரு எப்பவும், எத பண்ணாலும் குறை சொல்லும்டி, நாம பாக்குற வேலை வேணும்னா அழுக்கா இருக்கலாம், நம்ம கை சுத்தம்டி அதுபோதும். படுத்தா நிம்மதியான தூக்கம், சாப்பிட நேரத்துக்கு சோறு, என் கனவ கறைசேர்க்க என் பொண்ணு இருக்கா இன்னும் என்னடி வேணும்.

நாம இந்த நாற்றம்பிடிச்ச வேலைய செய்யறதால தான் இந்த ஊரு நறுமணமா இருக்கு, நீ எதும் மனச குழப்பிக்காம தூங்கு என்று பெருமிதத்துடன் சொல்லிவிட்டு உறங்கினான் கண்ணன். மறுநாள் வழக்கம் போல பள்ளி செல்ல தயாரானால் அந்த நாற்றங்களுக்கிடையே துளிர்விட்டு நறுமணம் கமழும் துளசி....

"நறுமணம் என்பது நுகர்வதால் அறியப்படும் பண்பே தவிற அது பார்வையினால் நாம் கண்டறிய முடியாது". வளரும் இடம் என்பது நாற்றமுள்ள இடமாயினும் அந்த மலரின் நறுமணமே அதற்கு அழகு சேர்க்கும். அதுபோல நாம் செய்யும் தொழில் அசுத்தமானாலும் அதனால் அது மற்றவர்களுக்கு தூய்மை வழங்குமானால் அந்த தொழிலும் புனிதம் நிறைந்ததே. "அடுத்தவரை மனங்கள் கொண்டு மதிப்பிடுவோம் அவர்களின் நறுமணங்கள் கொண்டு அல்ல". இந்த பழக்கத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துரைப்போம்.

மனங்களில் நறுமணம் வீசும் தூய மனிதர்களுக்கு சமர்ப்பணம.

இவண்

கடைக்கோடி தமிழன்

மணிகண்டன் கணேசன்

கும்பகோணம் (குடந்தை)

 

 

4.K2K - 00008

 உதிராப் பூக்கள் / நறுமணம்!!!

சுகுணா, ஆபீஸ்க்கு நேரமாச்சு. இன்னும் என்ன பண்ணிட்டிருக்கஅம்மாவின் குரல் சமையலறையிலிருந்துகேட்டது.

இதோ. ரெடியாயிட்டேன்மாஎன்றவாறு தான் புதிதாய் வாங்கி வைத்திருந்த சுடிதாரை உடுத்திக்கொண்டு, ஒருமுறை கண்ணாடி முன் நின்று சரிப்பார்த்துக் கொண்டாள்.

சமையலறையை ஒட்டிய டைனிங் டேபிளில் அவள் வந்தமர்ந்தாள் காலைச் சிற்றுண்டியை உண்பதற்கு. அம்மாசமையலறையிலிருந்து வெளிவந்து சுகுணாவை உற்றுப் பார்த்தாள். அவள் தன் கண்கள் கலங்கியதைமறைத்துக் கொண்டு, தட்டை வைத்து, இரண்டு இட்லியும், சட்னியும் வைத்துவிட்டு சுகுணாவின் அருகில்அமர்ந்தாள். அவள் சாப்பிட்டு முடிக்கும்வரை அவளையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். சுகுணா சாப்பிட்டு முடித்து கையை கழுவிவிட்டு, டைனிங் டேபிளிலிருந்த மதிய உணவை எடுத்துஹேண்ட்பேக்கில் வைத்துக் கொண்டுபோயிட்டு வரேன்மா. சாயந்திரம் சீக்கிரம் வந்துடுவேன். ரெடியாயிருங்க. வந்தவுடனே பக்கத்தில் இருக்கிற சிவன் கோயிலுக்கு போயிட்டு வந்துரலாம்என்றுசொன்னபடியே, வாசலில் நிறுத்தியிருந்த தனது காரை உறுமவிட்டு கிளம்பினாள் தன் அலுவலகத்துக்கு.

சுகுணா வாழ்க்கையின் சுக துக்கங்களை எல்லாம் தன் இருபத்து மூன்று வயதிற்குள்ளேயே பார்த்தவள். தன்இருபத்தோராவது வயதில் அவளுக்கு திருமணம் நடந்தது. திருமணமான முதல் இரு வருடங்களும் அவளின்வாழ்க்கை போல வேறு எவருக்கும் அமைந்திருக்காது என்றே சொல்லலாம். உலகத்தில் உள்ள அத்தனைசுற்றுலா தளங்களையும் கண்டு ரசித்தனர் சுகுணாவும், அவளது கணவருமான சேகரும்.

சேகர் நல்ல வளமான, செழுமையான, அன்பான குடும்பத்தைச் சேர்ந்தவன். வீட்டிற்கு அவன் ஒரே பிள்ளை. அதை நல்ல முறையில் பயன்படுத்தி, அவனுக்கென தனித்ததொரு நிறுவனம் தொடங்கி அந்த வியாபாரத்தில்வெற்றியும் பெற்றான். அவனின் நிறுவனத்தில் இளம் கணக்காளராய் பணிப்புரிந்த பெண்தான் சுகுணா.

சுகுணாவின் குடும்பமோ மிக ஏழைப்பட்ட குடும்பம் என்று சொல்ல முடியாது. வரும் வருமானத்தில் அவளின்தந்தை, தாய், அண்ணன் மூவரும் வாழ்ந்து வந்தனர். அண்ணன் கார்த்திக் மும்பையில் உள்ள ஒரு தனியார்நிறுவனத்தில் பணி கிடைத்து, அங்கேயே ஒரு பெண்ணை விரும்பி திருமணம் செய்துக் கொண்டான். மாதாமாதம் வீட்டுக்கு சரியான தேதியில் அவன் சம்பளத்தின் ஒரு பாதியை அனுப்பிவிடுவதோடு அவன் கடமைமுடிந்தது என்று எண்ணிக் கொண்டான்.

சுகுணா தன் பள்ளிப் படிப்பை முடித்தவுடனேயே, சேகரின் புதிதாய் தொடங்கிய நிறுவனத்தில் இளம்கணக்காளராய் பணியில் சேர்ந்தாள். அங்கே தான் இருவருக்கும் மனமொன்று பட்டு, பெற்றோர்களின்ஆசியோடு திருமணமும் நடைபெற்றது. தொடர்ந்து மேற்படிப்பை அஞ்சல் வழிக்கல்வியில் படித்தும் வந்தாள்.

திருமணமாகி இரண்டு ஆண்டுகள் முடிந்து, மூன்றாம் ஆண்டு தொடங்கிய நாளன்று அவர்கள் வழக்கம்போலஉலக சுற்றுலா பயணத்தை மேற்கொண்டனர். ஸ்விட்சர்லாந்து, இந்த உலகத்திலேயே அனைவரும் பார்க்கவேண்டிய ஒரு இடம். முழுக்க முழுக்க பனிப்பிரதேசமான அந்த ஊர்தான் சுகுணாவின் வாழ்க்கையிலும் மறக்கமுடியாத ஒரு இடமாய் அமைந்தது.

அவர்கள் அங்கு போன இரண்டாம் நாளிலேயே, சேகருக்கு கடும் குளிர்க்காய்ச்சல் ஏற்பட்டது. உலகின்முன்னணி மருத்துவமனையின் உதவியும் வழங்கப்பட்டது. ஆனால் எதுவும் பயனளிக்காமல் மிக இளம்வயதிலேயே, அதுவும் திருமணமான இரண்டு ஆண்டுகளிலேயே, அவன் உயிர் இவ்வுலகைப் பிரிந்தது.

இது நடந்து ஐந்து ஆண்டுகள் முடிந்துவிட்டது. அவள் தன் கணவரின் வீட்டில்தான் இருந்து வருகிறாள். தன்கணவரின் தாயை, தன் தாயாக எண்ணி, அவளைத்தான் இவள் அம்மா என்று அழைத்துக்கொண்டிருக்கிறாள்.

எத்தனையோ முறை தன் மாமியார், சுகுணாவை மறுமணம் செய்துக்கொண்டு வாழுமாறு வேண்டிக்கொண்டாள். ஆனால் அவள் எதற்கும் தலையசைக்கவில்லை. இதுவே அவர்களின் வருத்தத்துக்கு மிக முக்கியகாரணம்.

சுகுணா என்றுமில்லாது, பல வருடங்கள் கழித்து சுடிதார் போட்டு தன்னை அழகுப்படுத்தி கொண்டதே, அவளின் மாமியாரின் ஆனந்தக் கண்ணீருக்கு காரணம். சுகுணா இன்னமும், சேகரின் நிறுவனத்தை தன்நிறுவனமாக எடுத்து நடத்தி இலாபம் சம்பாத்தித்துக் கொண்டுதான் இருக்கிறாள்.

மறுமணம் பற்றி பலரும் பலவிதமாக கருத்துக்களை பதிவிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், எவரும்அதை ஒரு புரட்சியாய் முன்னிறுத்தியதில்லை. அதற்கு பல காரணங்கள் உண்டு. இந்த சமூகத்தின் பார்வையில்இருக்கும் கோளாறுகளே இதன் அடிப்படை பிரச்சினைக்கு காரணம். மதம், கலாச்சாரம் போன்றகாரணங்களை மறுமணங்களின் மீது திணிக்கப்பட்டு, அது ஏதோ தீண்டத்தகாத விசயமாகவே பார்க்கப்பட்டுவருகிறது.

ஒரு ஆண், தன் மனைவியை இழந்தால் மறுமணத்திற்கு சம்மதிக்கும் இந்த சமூகம், ஒரு பெண் தன் கணவணைஇழந்தால், மறுமணத்திற்கு ஆயிரத்தெட்டு குற்றங்களை கண்டறிந்து, அந்த பெண்ணின் வாழ்க்கை அந்தவயதிலேயே முடிந்துவிட்டதொரு பிம்பத்தை ஏற்படுத்திவிடுகிறது.

 

பெண்ணுக்கு பொட்டு, பூ, ஆடை அணிகலன்கள் எல்லாம் பிறந்தது முதலே அடையாள சின்னங்கள் மற்றும்அவர்களின் தனிப்பட்ட ஆசைகள். கணவனை இழந்ததும் இதையெல்லாம் துறக்க வேண்டுமென்பது சமூககொடுமையின் உச்சக்கட்டம்.

சுகுணாவிற்கும் இந்த சமூகத்தைக் கண்டுதான் பயமேயோழிய, அவளின் மாமியாரும் சரி, அவளின்பெற்றோர்களும் சரி, அவளின் மறுமணத்திற்காக காத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். சுகுணாவிற்குசேகருடன் வாழ்ந்த அந்த இரு வருடங்களே தன் வாழ்க்கைக்கு போதும் என்று தோன்றியிருந்ததும் ஒருகாரணம் தான்.

அந்த நேரத்தில் தான், தன்னுடன் படித்தவனுமான, பள்ளியில் சக நண்பனான செழியன் அவளின்அலுவலகத்துக்கு வேலைத் தேடி வந்திருந்தான். நேர்முகத் தேர்வின்போது தான் அவனை அடையாளம் கண்டுகொண்டு, அங்கேயே பணியமர்த்தினாள் சுகுணா.

செழியன், சுகுணாவின் வாழ்க்கைப் பற்றி அந்த அலுவலகத்தில் பணியாற்றிய சக ஊழியர்களின் மூலம் தெரிந்துமனம் உடைந்துப் போனான். அவ்வப்போது அவளுக்கு தன்னாலான உதவியும் செய்து வந்தான். சிலமாதங்களுக்குள், அவர்கள் இருவரும் மிகவும் நட்பாக நெருங்கிப் பழக ஆரம்பித்தனர்.

அலுவலக அலுவல் காரணமாக சுகுணாவும், செழியனும் வெளியூர் செல்ல நேர்ந்தது. வேலை முடிந்து அவர்கள்தங்கியிருக்கும் ஓட்டலுக்கு வந்து சேர்ந்தனர். அப்போது, செழியன் சுகுணாவிடம், தான் தனிப்பட்ட முறையில்பேச வேண்டுமென்று கூறினான்.

சுகுணாவுக்கோ செழியன் எதைப்பற்றி பேச போகிறான் என்பது கொஞ்சம் விளங்கியது. அவளுக்கு நெஞ்சில்பதற்றம் ஏற்பட்டு இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது.  அதனால...” என்று கேட்டாள்.

நீங்க ஏன், ஒரு குழந்தையை தத்தெடுத்துக்க கூடாது சுகுணா. உங்க வீட்டுலயும் உங்களுக்கு அப்புறம்யாருமேயில்லை. அதனால உங்களுக்கும் எதிர்காலத்துல ஒரு துணையிருக்குமில்லையா? அதனால தான்சொன்னேன். நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க, நான் சொன்னது பிடிக்கலைன்னா

சுகுணாவிற்கு தன் வயிற்றில் பால்வார்த்ததுப் போல் இருந்தது. இதுவரை மறுமணம் என்ற பேச்சை மட்டுமேஎல்லோரிடத்திலும் கேட்டு புளித்துப் போன ஒரு விசயமாய் இல்லாமல், செழியனின் பேச்சு அவளுக்கு ஒரு புதுஉத்வேகத்தை கொடுத்தது. செழியனின் மேல் அவளுக்கு ஒரு புதிய நம்பிக்கையும் ஆறுதலும் கிடைக்கும்எண்ணம் மேலோங்கி, வார்த்தைகளினால் சொல்ல முடியாத ஒரு மரியாதையையும் அவன் மேல் ஏற்பட்டது.

நீங்க எதுவும் தப்பாக சொல்லவில்லை செழியன். நான் இதுப்பற்றி, இதுவரை எதுவும் யோசித்ததில்லை. உங்கள் கருத்து யோசிக்கப் படவேண்டிய ஒன்று தான். நிச்சயம் ஊருக்கு போனவுடன் இதைப்பற்றி அம்மாவிடம்பேசிவிட்டு சொல்கிறேன்என்று கூறிவிட்டு இதுவரையில்லாத ஏதோ ஒரு மகிழ்ச்சி மனதில் ஏற்படுவதைசுகுணா உணர்ந்தாள்.

அடுத்த வாரம், ஊருக்கு வந்தது முதல் அவள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் இருந்தது. அந்த மாற்றம் என்னஎன்பது அந்த அம்மாவுக்கு தெரியவில்லை. ஒருவேளை மறுமகள் யாரையாவது விரும்புகிறாளா என்ற சந்தேகம்வந்தது. அப்படியாவது இந்த பெண்ணுக்கு ஒரு விமோட்சனம் வராதா என்று ஏங்கிக்கொண்டு தான் இருந்தாள்.

அன்று தான், புதிதாய் சுடிதார் அணிந்துக்கொண்டு அழகாக தன்னை கண்ணாடியில் பார்த்துக்கொண்டு அவள்வேலைக்கு புறப்பட்டது. அன்று மாலை அவள் வீட்டுக்கு வந்தவுடன், அவளும் அம்மாவும் கோவிலுக்குச் சென்றுசற்று நேரம் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது, சுகுணா அம்மாவிடம்அம்மா, என்னோட எதிர்காலத்தைபத்தி உங்கக்கூட கொஞ்சம் பேசலாம்னு தான் கோவிலுக்கு வந்தேன்என்று ஆரம்பித்தாள். அம்மாவுக்குமனதில் சந்தோசம் அதிகமாகியது.

அம்மா, நம்ம நிறுவனுத்துல வேலை பார்க்கிறாரே செழியன், அன்னைக்கு கூட செக்குல கையெழுத்து வாங்கவீட்டுக்கு வந்தாரே, அவர் தான் ஒரு விஷயத்தை பற்றி சொன்னார்என்றவுடன் அம்மாவுக்கு இருப்புகொள்ளவில்லை. உடனே, தன் மருமகள் அவனை விரும்புவதாகவும், திருமணம் செய்துக் கொண்டு காலில்விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது போலவும் கனவு காண தொடங்கிவிட்டாள் சந்தோஷத்தில்.

தயங்காம சொல்லுமா?” என்று ஆவல் தீராமல் கேட்டாள்.

அவர் தான் ஊருக்கு போயிருந்த போது சொன்னார். எத்தனை நாள்தான் தனியாக இருக்கப் போகிறீர்கள்என்று. அதனால், ஒரு குழந்தையை தத்தெடுக்கலாமே என்றார்

அவள் அப்படி கூறியதும், அம்மாவுக்கு கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டது. “உன் இஷ்டப்படி செய்யுமாஎன்றுகூறிவிட்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

சுகுணாவைப் பற்றியும், செழியனைப் பற்றியும் அம்மா தன் இதயத்தில் ஒரு கோவிலே கட்டிக் கொண்டு வீட்டுக்குவந்து சேர்ந்தாள்.

மறுநாள், “அன்னை ஆதரவற்றோர் இல்லத்தில்சுகுணாவும் செழியனும் சென்று தேவையானதகவல்களையெல்லாம் கொடுத்துவிட்டு, மூன்று மாதங்களே ஆன ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்துக்கொண்டு வந்தனர்.

ஒரு பூ உதிர்ந்துவிடுவதாலும், பறிக்கப் பட்டாலும் அந்த செடியும் கொடிகளும் தன் கடமையிலிருந்துதவறுவதில்லை. அடுத்த பூவும் அதில் பூக்கத்தான் செய்யும்.  நல்ல வாசமும் கொடுக்கத்தான் செய்யும்.

அதுபோல ஒரு வாழ்க்கை முறிந்தால் அடுத்த வாழ்க்கை என்று ஒன்று உண்டு. அதை தேர்ந்தெடுப்பது நம்கையில் தான் உள்ளது. உலகத்தில் ஆதரவற்ற எத்தனையோ பேர் இன்னும் வளர்ந்தும் வாழ்ந்தும்தான் இருந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாழ்வு வளம்பெறவும் மனிதர்களாகிய நாம் கடமைப்பட்டுள்ளோம்.

கணவனால் கைவிடப்பட்டவர்களும், கணவன் அல்லது மனைவி இறந்துபோனவர்களும், மறுமணம் புரிந்துக்கொள்வது தவறே இல்லை. அது அவரவர்களின் மனநிலையைப் பொறுத்தது. அதனால், அப்படிப்பட்டவர்கள், ஆதரவற்ற எத்தனையோ பேர் இருக்க அதில் ஓரிருவரையாவது தத்தெடுத்துக் கொண்டால், அந்த ஆதரவற்றகுழந்தைகளுக்கு நல்ல தாய், தந்தை கிடைக்கும் மற்றும் அவர்கள் வாழ்விலும் வசந்தம் ஏற்படும்.

பூக்கள் உதிர்வதும் மீண்டும் பூப்பதும் இயற்கையே. உதிர்ந்த பூக்களெல்லாம் மாலையானாலும், கீழே வீணாய்கிடந்தாலும் அதன் வாசம் மாறப்போவதில்லை. பூக்கள் பறிக்கப்படவில்லையெனில் அதன் அழகே தனி தான். அந்த இடத்தை சுற்றிலும் நறுமணம் வீசிக்கொண்டே இருக்கும். அதுவே இந்த உதிராப் பூக்கள்.

சுகுணா மற்றும் செழியனின் செயலால், ஒரு குழந்தைக்கு இன்று ஆதரவு கிடைத்திருக்கிறது. அந்தகுழந்தையின் நறுமணம் அந்த வீட்டில் இனி நிரந்தரமாய் இருக்கும். இதைவிட நறுமணம் வாழ்வில் வேண்டுமாஎன்ன?

அன்பரசமகாதேவன்

() அகத்தியன்

 

 

5.K2K00011

அன்று வாரத்தில் முதல் நாள். மாணவர்கள் அனைவரும் மலர்ச்சி உடன் இருந்தனர். ஆசிரியர் வருகைப் பதிவேட்டில் குறிக்க ஆரம்பித்தார்.

. கவின், உள்ளேன் ஐயா.

. சரவணன், உள்ளேன் ஐயா.

. அன்பு..... இன்னும் வரலை ஐயா.

ஏன் வரலை?

ரவி உன் தம்பி தானே, ஏன் அன்பு வரலை?

தெரியாது ஐயா. என்னது தெரியாத.?,

அருண் கூறினான். ஐயா ரவி அப்பாவும், அன்பு அப்பாவும் சண்டை. பேசமாட்டாங்க.

ஏன்டா பெரியவங்க சண்டை போட்டா உங்களுக்கு என்னடா?

ரவி கூறினான். ஐயா நான் போயி அன்புகிட்ட பேசினா அவங்க அம்மா என்னை திட்டறாங்க. சரி ரவி பள்ளியில் பேசுங்க, வீட்டில் வேணா பேசாம இருங்க, இங்க பாருங்க பெரியவங்க சண்ட போட்டா அது அவங்க பிரச்சனை.

ஆனால் நீங்க சின்ன பசங்க. பேசாம இருக்காதீங்க. அது தப்பு!!

சரிங்க ஐயா. நான் நாளைக்கு அன்பு ஏன் வரலைன்னு தெரியாம கேட்டு வர்றேன்.

வெரிகுட்.

மறுநாள் வகுப்பில் அன்பு அழுது கொண்டு இருந்தான்.

ரவியின் கண்களும் அழுகையை வெளுப்படுத்தியது.

ஏண்டா இரண்டு பேரும் அழுகிறீங்க?

அன்பு அதிகம் அழ ஆரம்பித்தான்.

சொல்லு அன்பு என்னாச்சு?

ஐயா எங்க அப்பாவுக்கு நெஞ்சு வலி.

மதுரை ஆஸ்பத்திரியில் இருக்காரு.

அழுகாத அன்பு. உங்கப்பா சீக்கிரம் சரியாயிருவாரு.

இடைவேளையின் போது கவனித்தேன். ரவி அன்பை தேற்றிக் கொண்டிருந்தான். திண்பண்டம் வாங்கி சாப்பிட வைத்தான்.

 உணவு இடைவேளையின் போது இருவரையும் அழைத்து, ரவி உங்கப்பா பெரியப்பாவ பார்க்க போனாரா?

இல்ல ஐயா. நீ பேசு. அப்பாட்ட சொல்லு. உடம்பு சரியில்லாத போது சண்டைய நினைக்கக் கூடாது.

கூட பிறந்தவங்க கிட்ட பாராமுகம்

காட்டக்கூடாது. நீங்க போய் பாருங்க. பெரியப்பா சரியாயிருவாரு. அப்படின்னு சொல்லு.

ஐயா நான் சொன்னா எங்கப்பா கேப்பாரா?

கண்டிப்பா. மனசுக்குள் பாசம் இருக்கும். ஆனால் போய் பார்க்க தயக்கம். சாமிகிட்ட வேண்டிட்டு உங்கப்பாகிட்ட பேசு. சின்ன பசங்க வேண்டினா கடவுள் உடனே பதில் கொடுக்கும்.

மறுநாள் இருவரும் வரவில்லை.

மறுநாள் வந்தார்கள்.

அழைத்துப் பேசினேன்.

ஏண்டா இரண்டு பேரும் வரலை?

இரண்டு பேர் உதட்டிலும் கவலையை மீறிய சோகப் புன்னகை.

ரவி வேகமாக கூறினான். ஐயா நான் எங்க பெரியப்பாவ போய் பார்த்துட்டு வந்துட்டேன்.

நீ மட்டும் போனியா? இல்லை உங்கப்பா வந்தாரா?

நீங்க சொன்ன மாதிரி சாமிகிட்ட வேண்டிட்டு அப்பாகிட்ட பேசினேன்.

அப்பா நீங்க வந்து பாருங்க. பெரியப்பா குணமாயிருவாரு.

சண்டைய மறந்திருங்கன்னு சொன்னேன்.

சண்டை என்னடா சண்டை. எங்க அண்ணன் தானே. திட்டினா நான் தான் பொறுத்து போகணும். வீம்பு பிடிச்சிருக்கக் கூடாது. தப்பு பண்ணிட்டேன்.

ஆஸ்பத்திரியில் பெரியப்பாவ போய் பார்த்தோம். எப்பவும் திட்ற பெரியம்மா கூட எங்கள பார்த்த உடனே கட்டிப் பிடித்து அழ ஆரம்பிச்ட்டாங்க.

அப்பா உள்ள போய் பெரியப்பாவ பார்த்து கையை பிடித்து மன்னிப்பு கேட்டாரு.

விடுடா மன்னிப்பெல்லாம் எதுக்கு?

நம்ம ஒரு வயிற்றில் பிறந்தவங்க. நான் அன்றைக்கு கொஞ்சம் அதிகமா பேசிட்டேன். மனசுல வச்சுக்காத. ரவி எங்க? வரலையா.

அவனால தான் இன்னைக்கு வந்தேன்.

ரவியைப் பார்த்த உடன் கட்டிக் கொண்டார்.

பெரியப்பா வீட்டிற்கு வர வரைக்கும் அன்ப பார்த்து க்க.

சரிங்க பெரியப்பா. நாங்க இரண்டு பேரும் சண்டையே போட மாட்டோம்

ஒற்றுமையாக இருப்போம்.

ஐயா சரியான சமயத்தில் வழி காட்டீனீங்க.

ரவி எந்த அண்ணன், தம்பிகிட்டயும் பாசம் இல்லாம இருக்காது. வெட்டி வீராப்பு அதை அன்பு என்னும் உளியாலதான் வெட்ட முடியும்.

ஒற்றுமை ஒரு நாளும் ஒதுங்குவது இல்லை. ஒதுக்கப்படுவதும் இல்லை. வாழ்வின் பலமே ஒற்றுமை ஒன்றே ஒன்றுதான். அந்த ஒற்றுமையோடு நாம் வாழணும்.

வீம்பு என்னும் துர்நாற்றம் அகன்று ஒற்றுமை, பாசம் என்னும் நறுமணம் வீசியது.

. மதுமதி

. உசிலம்பட்டி.

 

 

6.K2K - 00013

 மணிக்கு சிறுவயது முதலே, மருத்துவராக வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதற்கு முக்கியக் காரணம் மருத்துவமனையின் வாசமாகும் dettol வுடன் இணைத்து வேறு பல கிருமிநாசினிகளின் மணம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. மற்றவர்களுக்கு "முகச்சுளிப்பை" ஏற்படுத்தும் அந்த வாடை. அவனை ஏன் கவர்ந்தது என்று இன்று வரை தெரியவில்லை.

இன்று பிரபல நரம்பியல் மருத்துவர் ஆனபிறகு அவன் பணியாற்றும் மருத்துவமனையை தன்னுடைய வீடாக நினைத்து பணியாற்று வந்தான் "அறுவை சிகிச்சை" அறையில் மருந்தின் மணம் பிறந்த பச்சிளம் குழந்தையின் "கலப்படமில்லாத இரத்த மணம் மற்றும் தன்னிடம் வரும் நோயாளிகள் உபயோகப்படுத்தும் perfume என்று இப்படி பலத் தரப்பட்ட வாசனை அவனை வெகுவாக ஈர்த்தன. உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் சென்னையை தன் "தத்துப் பிள்ளையாக நினைத்து சீராட்டி கொண்டிருக்கும்போது மணியின் மனைவி மதுமதி (அவளும் ஒரு மருத்துவர் தான் ) சில நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் இருக்குமாறு சொன்னபோது முதலில் மறுத்த மணி பிறகு சம்மதித்தான்.

"அப்பா அப்பா, எந்திரிங்க" என்றபடி மணியின் இரண்டுப் பிள்ளைகளும் அவன் மீது ஏறி எழுப்பிக்கொண்டுருந்தன கண்களைப் பாதியாக திறந்தபடி எழுந்தவனுக்கு தன் மூக்கு ஒரு "வித்தியாசமான" நறுமணத்தை உணர்ந்து எங்கேயிருந்து வருகிறது என்று நினைத்தபடி பார்த்த போது தன் மகன்களின் மேனியில் உள்ள ஜான்சன்ஸ் பேபி பவுடர் தான் என்பதை அறிந்தான் இதுவும் நன்றாக உள்ளதே என்று எண்ணியபடி குழந்தைகளை வாரி அணைத்து முத்தமிட்டான். இதற்குள் மதுமதி காபி கப்புடன் உள்ளே வந்து கண்ணுங்களா அப்பா இன்று மருத்துவமனைக்கு போகவில்லை. நம்முடன் தான் இருப்பார். சிறிது நேரம் வெளியில் சென்று விளையாடுங்கள் என்று அனுப்பிவிட்டு, மணி சீக்கிரம் குளித்துவிட்டு, எனக்கு உதவியாக சமையல்கட்டுக்கு வா என்றுச் செல்லமாக அவன் கன்னத்தில் தட்டிவிட்டுச் சென்றாள். அவள் சென்றுவிட்ட போதிலும் அறையில் அவளின் பிரியமான perfume வாசனையை அவன் உணர்ந்தான்.

குளித்துவிட்டு முதன் முறையாக சமையல் அறைக்குள் சென்ற போது மதுமதி ரசம் "தாளிக்கும்" வாசமும், மற்றொரு பக்கம் மீன்கள் பொறிக்கும் போது எழும் மனமும் அவனுக்குள் ஏதோடு இனப்புரியாத சந்தோஷத்தையும் ஏற்படுத்தின. மருத்துவமனையின் வாசத்தை விட வீட்டில் எழும் இந்த "நறுமணம்" தனக்கு இதுவரை புரியாமல் போனதை நினைத்து வருந்தினான். அன்று முதல், மருத்துவமனையே கதி! என்று இல்லாமல் குடும்ப சுகத்தையும் அனுபவிக்க ஆரம்பித்தான்.

"நறுமணம் (கெட்ட) வாடையாக மாறாதவரை வாழ்க்கையை மூக்காலும்?! ரசித்து மகிழ்வோமாக!!

-ramagovindarajan (grapss)

 

 

7.K2K-00036

 இதுவும் ஒரு நறுமணம்

கதிர் ஒருவரின் காலே பிடித்து கெஞ்சி கொண்டு இருந்தான்.

கதிர், "சார்! சார்! பிளீஸ் இந்த வேலையை எனக்கே கொடுங்க. என்னால் முடியும் நம்புங்க.", என்றவனை மேலும் கீழும் பார்த்த அந்த மனிதர், "அதுக்கு நீ சரிப்பட்டு வர மாட்டே.", என்று சொல்லி விட்டு தன் அறைக்குள் சென்று விட்டார்.

கதிர் தன் தலையில் கை வைத்து கொண்டு அமர்ந்தே விட்டான். அவனின் காதல் மனைவியிடம் இருந்து வந்த போன் கோலை எடுத்தவனின் காதில் அழும் சத்தம் மட்டுமே முதலில் கேட்டது.

கதிர், "விஜி என்னம்மா ஆச்சு..? ஏன் இப்படி அழுகிற..?", என்று கேட்க எதிர்முனையில் அவள் சொன்ன ஒரு வார்த்தை இவனையும் கண்ணீர் விட செய்தது.

விஜி சொன்னது, "பசிக்குது.", என்பது தான்.

தன் கண்ணீரை நிறுத்தியவன் போனை வைத்து விட்டு அந்த மனிதரின் அறைக்கு சென்றான்.

கதிர், "சார், எனக்கு கண்டிப்பா இந்த வேலை வேண்டும். இந்த கொரோனா ஆரம்பித்த மூன்று மாசத்தில் செய்து கொண்டிருந்த ஐடி வேலை போய், சேமிப்பு எல்லாம் தீர்ந்து போய், இப்போ ஒரு வேளை உணவு கூட இல்லாமல் நானும் என் மனைவியும் இருக்கிறோம். பிளீஸ், இந்த வேலையை எனக்கு கொடுங்க. என்னால் கண்டிப்பா முடியும்! நிச்சயமா முடியும்", என்றான்.

அந்த மனிதர், "தம்பி, நான் காரணமாக தான் சொல்றேன். நீயோ ஐடி வேலைக்கு போய்ட்டு வந்தவன். இந்த வேலை செய்யும் அளவுக்கு சகிப்பு தன்மை கண்டிப்பா உனக்கு இருக்க வாய்ப்பு இல்ல.", என்றார்.

அப்போ கதிர் சொன்ன ஒரு உண்மையை கேட்டு உடனே வேலை தர சரி என்றார்.

இரவு எட்டு மணி..

உடலெல்லாம் இருந்த சாக்கடை நாற்றம் அந்த அறை முழுதும் பரவும்படி உள்ளே வந்த அவனை கண்ணீருடன் பார்த்தாள் அவன் மனைவி விஜி.

கதிர், "விஜி, போ போய் நான் குளிக்க தண்ணீர் ரெடி பண்ணு. கடை முடுவதுக்கு முன்னாடி குளித்து விட்டால் தான் ஹோட்டலுக்கு போய் ஏதாவது சாப்பிட முடியும்.", என்றான்.

அதே கண்ணீர் வழியும் கண்களோடு அவன் சொன்னதை செய்து விட்டு வீட்டு வாசலில் அமர்ந்து விட்டாள்.

குளித்து முடித்து வந்தவனின் உடலில் இப்போது அந்த சாக்கடை நறுமணம் பெயரளவில் மட்டுமே இருந்தது.

ஹோட்டலுக்கு சென்று ஆளுக்கு நான்கு இட்லி சாப்பிட்டு ஓர் அளவுக்கு பசியை போகியவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தார்கள்.

வீட்டின் வாசல் கதவை மூடிய விஜி அவன் காலில் விழுந்து வணங்கினாள்.

விஜி, "சாரி கதிர். எல்லாம் என் தப்பு தான். என்ன மாதிரி வேலையை காரணமாக சொல்லி உங்களையும் உங்க அப்பாவையும் பிரித்து வைத்தேனோ அதே சாக்கடை அள்ளும் வேலையால் தான் இன்று ஒரு வேளை உணவாது நம்ம உண்டது.", என்று சொல்லி கண்ணீர் வடித்தாள்.

அவளை தன் கை அணைப்பில் வைத்து கொண்டவன், "விஜி, எங்க அப்பா அடிக்கடி சொல்வர். மகனே! எல்லாருக்கும் நாற்றமாக படும் இதே சாக்கடை வாசம் எனக்கு மட்டும் நறுமணம். அதற்கு காரணம், இந்த வேலையில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் உன்னை படிக்க வைக்கிறேன் . என் உடல் முழுதும் நாற்றம் அடித்தாலும் இந்த வேலையால் என் மகனின் வாழ்க்கையில் நறுமணம் வீசுவதை நான் காண வேண்டும் என்றெல்லாம் சொல்லி இருக்கார். அப்படி சொன்னவர் இப்போ உயிரோடு இல்லை. ஆனால், சிறு வயது முதல் அவரின் மகனாக இருந்து நீங்க சொல்லும் நாற்றத்தை நறுமணமாக பழகி கொண்ட ஒரே காரணத்தால் மட்டும், இன்று இந்த வேலை கிடைத்தது. நமது பசியும் போனது.", என்றான்.

# குறிப்பு:

பல துப்புரவு பணியாளர்கள் இந்தக் கொரோனா சமயத்திலும் கூட அவர்களின் உடல் நலத்தை மறந்து சில நாற்றம் கலந்த வேலைகளை எல்லாம் நறுமணம் போல நினைத்து வேலை செய்து கொண்டே தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த கதை சமர்ப்பணம்.

 

நன்றி!

விஜயன்.

 

 

8.K2k 00038

நறுமணம்!

மார்கழி மாதம் அதிகாலைப் பொழுது வீட்டு வாசல் கதவைத் திறந்த காயத்ரி தன்னை மறந்து நிற்கிறாள், மார்கழியின் மழை மண்வாசத்தைக் கிளப்பியிருக்க கொடியில் பூத்த பிச்சி மல்லிகை  இரவில் பூத்த பாரிஜாத மலர்கள் உதிர்ந்து கொட்டி மலர்க் கோலங்களாக வாசல் நிறைந்திருக்க மலரோடு மண்ணின் மணமும் நாசியைத் துளைத்து மனதில் இருந்த பக்தி உணர்வை அதிகரிக்கச் செய்யகோவிலுக்குப் போய் விட்டு வந்து கோலமிடலாம் இப்போது போட்டாலும் மழையில் கரைந்து விடும் என்று நினைத்தவாறே சூடாக காபியை பிளாஸ்க்கில் ஊற்றி வைத்து விட்டுகோவிலுக்குச் செல்கிறாள் காயத்ரி.

"கௌசல்யா சுப்ரஜா ராம

பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே

உத்திஷ்ட நர ஸார்தூல

கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்

உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த

உத்திஷ்ட கருடத்வஜ

உத்திஷ்ட கமலா காந்தா

த்ரைலோக்யம் மங்களம் குரு…."

கோவிலில் சுப்ரபாதம் இசைத்துக் கொண்டிருக்க உள்ளே நுழைந்ததும் பன்னீரும் சந்தனமும் கலந்து விநாயகருக்கு நடக்கும் அபிஷேகத்தைப் பார்க்கிறாள்.

ஆஹா…. அந்த மணம் நறுமணம் அபிஷேகம் முடிந்ததும் தெய்வத்திற்கு சாற்ற இருந்த செவ்வந்தி ரோஜாப் பூக்களின் நறுமணம் …. ஆண்டவா இந்த சகமான அதிகாலை தரிசனமும் மணமும் வருடத்தின் எல்லா நாளும் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?! மார்கழி மாதம் என்பதால் தான் காலையில் கோவிலுக்கு வந்து செல்ல முடிகிறது. மற்ற நாட்களில் அரக்க பரக்க இப்படி வர முடிவதில்லை, அவருக்கு கம்பெனி பிள்ளைகளுக்கு பள்ளி கல்லூரி, எவ்வளவு முயன்றாலும் காலையில் கோவிலுக்கு வர முடியவில்லை.

ஆனால் இந்த மாதம் மட்டும் எதற்காகவும் கவலைப்படாமல் யோசிக்காமல் நாலு மணிக்கேஎழுந்து டிபன் காபி தயார் செய்து வைத்து விட்டு கோவிலுக்குச் வந்து விடுவாள், இது பக்திக்கான நாட்கள்எனக்கான நாட்கள், இந்த நாட்களில் என்னை எனக்காக விட்டு விடுங்கள் என்பாள்.

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்…..”

திருப்பாவை பாடல்கள் திவ்ய பிரபந்தம் 108திவ்ய தேச அர்ச்சனை லக்ஷ்மி நரசிம்மர் ஸ்துதி என் பஜனை பாடும் போது பஜனையின் ஒவ்வொரு பாடலும் வாய் மணக்க மனம் குளிர பக்தி எனும் நறுமணத்தைப் பரப்பும்.

மெய் மறந்து பாடி முடித்ததும் சுடச்சுட வெண் பொங்கலும் சர்க்கரைப் பொங்கலும் பிரசாதமாகக் கிடைக்கும், வாங்கிக் கொண்டு தோழிகளுடன் வீட்டிற்கு வருவாள்.

பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் இருக்கிறதா?!என்ற சந்தேகம் திருவிளையாடல் காலத்திலிருந்து இன்று வரை தீரவே இல்லையோ? ஒவ்வொரு பெண்ணின் கூந்தலில் இருந்தும் விதம் விதமான நறுமணம்  வர …..சுத்தமே சுகந்தமோ என்று எண்ணிச் சிரித்தாள் காயத்ரி.

வீட்டிற்கு வந்ததும் பெண்ணிற்கு தலைவாரி பூச்சூட்டி பள்ளிக்கு அனுப்புகிறாள் காயத்ரி.

மாலையில் அவரவர் வேலை முடிந்து வீடு திரும்புகின்றனர்.

அம்மா…. காலையில் உங்களைக் காணோம்னு அபி உங்க சேலையை எடுத்து கையில வச்சுகிட்டிருந்தாள். சேலையில என்னடி இருக்கு அங்க வைன்னு சொன்னால் கேட்கவே இல்லை.”

பையன் சொன்னதும் சிரித்துக் கொண்டேநீ கூடத்தான் சின்னப் பிள்ளையில என் முந்தியைப் பிடிச்சுகிட்டே தூங்குவ…. நானும் என் பாட்டி எங்கேயாவது வெளியில போயிட்டா கொடியில் காய்கிற அவங்க சேலையை பிடிச்சுகிட்டே நிப்பேன்னு எங்க அம்மா சொல்வாங்க என்கிறாள் காயத்ரி.

ஏன்…..மா அப்படி?!”

அது ஒரு உணர்வு…..பாசம்அன்பு…. அது மணம் போல அவரவரைச் சூழ்ந்திருக்கும் போல. அதிலும் தாய்மையில் இது அதிகம் உணரப்படுகிறது

காதலிலும்….” என்று மெல்ல வந்து நெற்றியில் முத்தமிட்டுச் சொல்கிறான் காயத்ரியின் கணவன் ரகு.

பிள்ளைகள் சிரிக்க….” வெட்கத்தில் சிரித்த காயத்ரி…. ஆமா என்ன இப்போ?!” என்று சொல்லி கணவனின் கரம் கோர்க்கிறாள்.

அழகான அந்தக் குடும்பம் அன்பென்னும் நறுமணத்தை வீசி குடும்பத்தை சுத்தப்படுத்துகிறது.

நீதி;(படிப்பிணை)

 மலராக மனம் இருந்தால் உறவுகள் நறுமணம் கொண்டு மகிழும்.

பூமாதேவி

 

 

9.K2K-00042

()றுமணம் 

 ராகவனுக்கு 24 வயதிருக்கும் அவன் மருத்துவமனையில் கோமாவில் கடந்த இரண்டு மாதங்களாக பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தான்.   அவனது குடும்பமும் மிகுந்த சோகத்தில் இருந்தது.

நாம் அவன் ஏன் இப்படி ஆனான் என்பதை பார்ப்போம்.

அவன் கல்லூரியில் மேல்நிலை கணித பாடத்தில் படித்து கொண்டிருந்ததான், படிக்கும் நேரத்தில் தன்னுடன் படித்த ஏஞ்சலை மிகவும் நேசித்தான், அதேபோல ஏஞ்சலும் இவனை மிகவும் நேசித்தாள், இருவரும் மனதார பழகினார்கள். 

பெயருக்கேற்றபடி ஏஞ்சல் மிகவும் அழகாகவும் வசீகரமாகவும் இருப்பாள்.  அவள் எப்போதுமே தலையில் மண மணக்கும் மல்லிகை பூவை வைத்துக்கொண்டு வருவாள், அப்படி மல்லிகை வைக்காவிட்டாலும் கூட அவள் கூந்தல் எப்போதும் நறுமணத்துடன் இருக்கும். மல்லிகை பூவும் அவள் கூந்தலும் சேர்ந்து ஒரு புதிய மணத்தை கொடுக்கும். அவன் அதை எப்போதுமே கண்டுபிடித்துவிடுவான் ஏஞ்சல் 20 அடி தூரத்தில் இருந்தாலும் அவனுக்கு தெரிந்து விடும்.

 இப்படி சென்று கொண்டிருக்கும் நேரத்தில் அவர்கள் கல்லூரி படிப்பு முடியும் ஒரு தருணம் வந்தது அவர்கள் இருவரும் தங்கள் வீட்டில் தாங்கள் காதலிப்பதை சொன்னார்கள். ஆனால் இருவரும் வேறு மதம் என்பதால் வீட்டில் மறுத்து விட்டனர், ஆனால் இருவரும் வீட்டில் சம்மதம் இல்லாமல் மண முடிக்க விரும்பவில்லை.

இப்படி இருக்கையில் ஏஞ்சல் வீட்டில் அவளுக்கு மணம் முடிக்கத் திட்டமிட்டு மாப்பிள்ளை பார்த்தார்கள், மாப்பிளை பார்த்து உறுதியும் செய்து விட்டார்கள். ஆனால் ராகவனுக்கு மிகுந்த நம்பிக்கை ஏஞ்சல் எப்படியும் தன் வாழ்க்கைத் துணைவியாக தான் வருவாள் என்று அதே உறுதியுடன் இருந்தான். திருமணம் உறுதி செய்த நாளும் வந்தது திருமணமும் நடந்தேறியது அந்த திருமணத்தில் கலந்து கொள்ள ராகவனும் தன் ஊரிலிருந்து தனது பைக்கில் வந்து கொண்டிருந்தான், அந்த நேரத்தில் எதிரே வந்த ஒரு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான்.

அந்த விபத்தின் மூலம் அவன் உயிருக்கு பாதிப்பு இல்லை என்றாலும் அவன் கோமா நிலையை அடைந்தான் அதே அதே நேரத்தில் ஏஞ்சல் ராகவன் வருவான் என எதிர்பார்த்து பின் தனக்கு திருமணமும் முடித்து விட்டால் நிலையில் தன் கணவனுடன் ஊருக்கு புறப்பட்டு சென்றார்கள்.

 செல்லும் அந்த தருணத்தில் அவள் கணவனுக்கு திடீரென மாரடைப்பு வந்து போகும் வழியிலே அவன் உயிர் பிரிந்தது.

ஏஞ்சலும், ஏஞ்சலின் பெற்றோரும்   மிகுந்த வருத்தத்திற்கு ஆளானார்கள்.  தன் மகளின் வாழ்வை நாமே கெடுத்து விட்டோமே என்று மனம் உடைந்து போனார்கள். பின்பு இரண்டு மாதங்களுக்கு பிறகு அவர்கள் ஏஞ்சலுக்கு ராகவனை மணமுடிக்க முடிவு எடுத்தனர்.

அவர்கள் கிளம்பி ராகவனை காண வந்த போது தான் தெரிய வந்தது ராகவன் கோமாவில் இருப்பது, பின்னர் தினமும் ஏஞ்சல் மன உறுதியுடன் மல்லிகைபூவை தலையில் வைத்து கொண்டு ராகவன் சிகிட்சை பெறும் அறையில் உட்கார்ந்து அவனுடன் மனதார பேச ஆரம்பித்தாள். பின் படிப்படியாக கோமாவில் இருந்த ராகவன் நுகர்வு தன்மை வேலை செய்ய ஆரம்பித்து, அவன் எண்ண அலைகளை தூண்டியது.

துவண்டு போயிருந்த அவனது மூளை நரம்புகள் நுகர ஆரம்பித்தன். பின்னர் நான்கு மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு நினைவு திரும்பியது. டாக்டர்களும் அவனது குடும்பம் எல்லோரும் மகிழ்ச்சியடைந்தனர்.

அந்த நறுமணம் அவனை குணப்படுத்தியது. முழுமையாக குணமடைந்த பிறகு அவர்களது பெற்றோர்கள் சந்தோஷமாக திருமணம் செய்து வைத்தார்கள்

நெறி: எந்த ஒரு (நறு)மணம் என்பது நம் மூளையில் பதிவாகும், நாம் ஒன்றை மனதார நினைத்து அதை நோக்கி எப்போதுமே நகர்ந்து கொண்டு இருந்தால் அது நம் வாழ்வில் கண்டிப்பாக கிடைக்கும். 

கணேசன் சண்முகவேல்

 

 

10.K2K00048

நறுமணம்...

             உலகில் மனித உடலின் உணர்வுகளில் ஒன்றானது நுகர்வு தன்மை ,

           இந்த தன்மையினை கொண்டே நாம் சில நேரத்தில் உடலுக்கு நன்மை பயக்கும் நறுமணத்தை, உடலுக்கு கேடு விளைவிக்கும் துர்நாற்றத்தையும் உணர்த்தும் இத்தகைய தன்மை ஒரு சிலருக்கு அதிகமாகவே உள்ளது, அவ்வாறு உள்ள ஒருவரின் செயல்களை பற்றி காண்போம் ...

             ஒரு குழந்தை பிறந்து விவரம் அறியும் வயதை அடைந்ததும் , வீட்டில் காலை எழுந்ததும் தன் உடலில் வரும் துர்நாற்றத்தை உணர்ந்து , அந்த நாற்றம் பிடிக்காமல் வாடினால் , பிறகு தன் உடலில் இருந்து வெளியேறும் கழிவுகளின் துர்நாற்றமும் இவளுக்கு அதிகமாக தெரிந்தது , அதையும் அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை , உணவு சமைக்கும் போது வரும் நருமணங்களை வீட்டின் வெளியில் இருந்தாலும் சரியாக கண்டு அறிந்தால் , பூஜையின் போது சுற்றத்தில் உண்டாகும் நறுமணத்தை அதிக அளவில் சுவாசித்தால் , இது அனைத்தும் அவள் உடலுக்கு நிம்மதியையும் , மனதிற்கு அமைதியும் கொடுத்தது , இதனை கடவுள் குடுத்த வரம் என கருதினர் அனைவரும் , ஆனால் அதே சமையும் வீட்டில் சாதாரணமாக ஒரு நாள் காற்றால் ஏற்படும் தூசியின் செயல் கூட அளவில்லா துர்நாற்றத்தையும் எரிச்சலையும் அக் குழந்தையினுள் உருவாக்கியது , தினம் தினம் வீட்டினை சுத்த படுத்திக் கொண்டே இருந்தனர் ,

            வீட்டில் எதேனும் உணவு பொருள் கேட்டு போனாலும், உடலில் வேர்வை வந்தாலும், இவ்வளவு ஏன், தன் தொண்டைக்கு சளி ஏற்பட்டு சுவாசத்தில் வரும் துர்நாற்றம் கூட இவனுக்கு கேடுகளை விளைவித்தது ...

            எந்நேரமும் சுற்று சூழலும், தன்னுடைய உடலையும் மிக தூய்மையாக வைத்துக்கொள்ள துவங்கினர், அளவுக்கு அதிகமான எந்த ஒரு செயலும் கேடு தரும், அவ்வாறே காலை கழிவின் துர்நாற்றம் பாதிக்காமல் இருக்க ஒரு வாசனை திரவியம் உருவாக்கும் முக கவசத்தை அணிவித்தனர்,

             தினசரி அந்த முக கவசத்தினை அணிந்து கொண்டே இருக்கும் அவனது வாழ்வில் சுகந்திரமான இயற்கையின் வெளி காற்றினை சுவாசிக்க இயலாமல் போனது ...

            சிறு வயதில் இருந்து அனைத்தையும் அந்த குழந்தை பழகிக்கொள்ள வேண்டும் என பழக்கி விட செயல்பட்டு இருந்தால் இந்த சுவாச சிறைச்சாலை இன்றி இருந்து இருக்கலாம் ...

கருத்து:  அனைத்தும் அளவுடன் இருந்தால் மட்டுமே பயன் அளிக்கும் ... 

இப்படிக்கு.,

சி. தெய்வாணி ஸ்ரீ.,

 

 

11.K2K 00049

தலைப்பு:  நறுமணம்

அந்த கடிகாரத்தில் மணி ஒன்பது காட்டியது.

அது காட்டாவிட்டாலும் மேரிக்கு மணி தெரிந்திருக்கும் ஏனெனில் அமலா ஜெபிக்கத் தொடங்கியிருந்தாள்

ஆம் அமலோற்பவம் தன் இரவு ஜெபத்தை சரியாக ஒன்பது மணிக்கு தொடங்கிவிடுவாள்.

அவள் ஜெபம் செய்யும் நேரம் மட்டும் கையிலிருக்கும் ஜெபமாலை பைபிளின் மீது வைக்கப்படும், மற்ற நேரங்களில் அது அவள் விரல்களுக்கிடையில் உருண்டு கொண்டே இருக்கும்.

அமலோற்பவத்துக்கு எப்படியும் அறுபது வயதுக்கு மேல் இருக்கும் சற்றே ஆங்கிலோ இண்டியன் முக அமைப்பு பாலைவனத்தின் மணற்பரப்பை போன்ற வண்ணமும் அதே போன்ற சுருக்கமும் கொண்ட முகம்.

பாலை காய்ச்சி ஆறவைத்துவிட்டு ஹாலுக்கு வந்த மேரி.

உள்ளே வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டிருந்த மகனின் தலையை லேசாக வருடிவிட்டு ஜான் பால் வச்சிருக்கேன் குடிக்காம தூங்கிடாத என்று சொல்லிவிட்டு மீண்டும் சாய்ந்தாள்.

ஜானுக்கு இப்போது ஆறு வயது, அவளின் உலகமே அவன்தான்; அவனுக்கும் அப்படியே. மேரி அவன் படிக்கும் பள்ளியில் தான்   ஆசிரியையாக பணிபுரிகிறாள்.

ஆனாலும் அவனுக்கென்று எந்த சலுகையும் காட்ட மாட்டாள். எல்லா சலுகையும் வீட்டில் மட்டுமே, மேரிக்கு வயது;

அதிகபட்சமாய் முப்பதிருக்கும்.

கருணை பொங்கும் முகம்

எந்தவித அலங்காரமும் ஆபரணமும் இல்லாமலே பொழிவான முக அமைப்பு அவளுக்கு.

காலையிலிருந்து தொடர்ச்சியான வேலையினால் அவளது உடலும் மனதும் சோர்ந்து போயிருந்தது.

விட்டால் அமர்ந்த நிலையிலேயே தூங்கிவிடலாம் போலிருந்தது அவளுக்கு.

பால் ஆறிவிட்டதா என்று பார்க்க எழுந்தவள் அவள் அப்பாவின் புகைப்படத்துக்கு முன் எரிந்துக்கொண்டிருந்த அணையப்போகும் நிலையில் இருந்த மெழுகுவர்த்தியை கவனித்தவளாய், அங்கு சென்று அதை அணைத்தவ ள் கைகளை கூப்பி தன் அப்பாவின் புகைப்படத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அணைந்த மெழுகுவர்த்தியின் திரி தரும் புகையின் மணம் அவளுக்கு இதமாய் இருந்தது.

அந்த மணம் அவளுக்கு மிகவும் பிடித்தமானதும் கூட அந்த புகை யை உணரும் தருணங்களில் தன் தந்தை தன்னுடனே இருப்பதாய் உணர்வாள் அப்படி ஒரு பிணைப்பு அவளுக்கும் அந்த வாசத்துக்கும். அப்பாவின் புகைப்படத்தின் மீது அந்த புகை பரவி தழுவிச்சென்று கொண்டிருந்தது.

அப்பாவின் புகைப்படத்தின் கண்ணாடியில் இவள் முகமும் பிரதிபலித்து இரண்டும் ஒன்றாகி தெரிந்தது.

அவளையும் அறியாமல்   கன்னங்களில் கண்ணீர் வடிந்து ஓடிக்கொண்டிருந்தது.

எப்போதும் பரபரப்பாகவும் கூட்ட நெரிசலாகவும் இருக்கும் வேளாங்கண்ணி ஏப்ரல் மாதத்தில் கட்டுக்கடங்கா நெரிசலாய் இருக்கும்.

புனிதமாதமான அதில் பெரிய வியாழன் தொடங்கி ஈஸ்டர் சன்டே வரையிலான நான்கு நாட்களும் கூட்டம் கடலையே நிரப்பிவிடும்.

தேவாலய கீழ்வாசல் தொடங்கி வங்கக்கடலின் மேல்வாசல் வரை மனிதத்தலைகள் மட்டுமே தெரியும், கழுகுப்பார்வையில் கூட தரை தெரியாது; தேவாலயத்தின் மற்ற வாசல்களும் அப்படித்தான் இருக்கும்.

உலகில் எல்லா மத மக்களும் இப்படி கூட்டநெரிசலில் கடவுளை வணங்குவதையே பெரும் பேராக நினைக்கின்றனர், அப்படியான வணங்குதலையே கடவுள் விரும்புதாக

நம்புகின்றனர், நம்பவைக்கப்படுகின்றனர், தேவாலயத்தில் மனமுருகி அமர்ந்திருந்தாள் மேரி.

அந்த காற்றில் வந்த மெழுகுதிரியின் வாசனை அவளுக்கு அவள் தந்தையின்

அருகாமையை உணர்த்தியது, சுற்றும்முற்றும் பார்த்து விட்டு மீண்டும் தன் மூச்சை இழுத்து சுவாசித்தாள்.

அவள் கண்களில் கண்ணீர் தாரையாக கடன்றோடியது.

அதன் ஒவ்வொரு துளியிலும் ஏராளமான மெழுகுவர்த்திகள் எரிந்து அடங்கின.

அடங்கிய மெழுகுவர்த்திகளில் அவளுக்கு யோவானின் ஸ்பரிசம் கிடைத்தது.

அவளின் புடவை தலைப்பை பற்றிக்கொண்டு, அழகிய ஆண் குழந்தை சிரித்துக்கொண்டிருந்தது..

அதே தேவாலயத்தில் ஊழியம் செய்து வந்த யோவான்தான் மேரியின் தந்தை.

யாரிடமும் அதிகம் பேசாதவன், ஆனால் இரவு முழுவதும் கடலோடு ஏதோ பேசிக்கொண்டிருப்பான்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அவன் எப்போதும் போல கடலோடு பேசிக்கொண்டிருந்தவன்.

திரும்பவே இல்லை, இவளும் ஊரெங்கும் தே டியும் அவன் கிடைக்கவேயில்லை.

கடைசியாக அவனை பார்த்தவரும் அவனின் நீண்டகால நண்பருமான மரக்காயர்தான் சொன்னார்; அவன் வழக்கத்தை விட உற்சாகமாய் தேவனே நான் உமதண்டையில் இன்னும் நெருங்கி சேர்வதே என் ஆவல் பூமியில்

என்ற பாடலை பாடிக்கொண்டிருந்தான், பின்னர் சிறிது சிறிதாக அந்த குரல்

 அலையோ டு கலந்து விட்டது.

அவன் இறுதியாக   அவன் குடும்பத்தோடு கலந்தே விட்டான் போல என்று கண்கலங்க கூறினார்.

மீண்டுமாய் நினைவுக்கு வந்தவள் ஆராதனை முடிந்து எழுந்தாள்

அந்த குழந்தை அவளின் அருகாமையை இழந்ததால் அழத்தொடங்கியது.

அதை அள்ளி தன் மார்போடு அணைத்துக்கொணெடாள்.

எப்போதும் தன் தந்தையை உணரும் மெழுகுவர்த்தி வாசனை இப்போது அந்த குழந்தையின் மீதும் வீசியது.

இப்படி நாளில் தான், யோவான்   அவளுக்கு தந்தையானான் என்று அமலோற்பவம என்றோ சொன்னது அவள் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது.

அடுக்களையில் ஏதோ உருட்டும் சத்தம் கேட்டு சுய நினைவுக்கு வந்தவள்

பாலை ஆற்றி எடுத்துக்கொண்டு, அவள் மகனை அழைத்தாள் ஜான் வா வந்து பால் குடிக்க வாஎன்று அவனிடம் நீட்டினாள்.

பாலைக்குடித்து முடித்ததும் தலையை கோதியபடியே

அவனை உறங்க வைத்துக்கொண்டிருந்தாள், அவன் அவளிடம் அம்மா அந்த தாத்தா யாரும்மா என்றான் மழலை மாறாமல்,

எங்கப்பாடா என்றவளிடம், அவன் மீண்டும், அப்பான்னா யாரும்மா எனக்கும் அப்பா இருக்காங்களாம்மா, அவங்க எங்கம்மா என்றடுக்கியவனிடம்

சுவற்றில் ஆளுயரமிருந்த அந்த படத்தை காண்பித்து அவர்தான்

என்றாள், அதில் 

கையில் ஒரு ஆட்டுகுட்டியை தூக்கியபடி

இப்படிப்பட்ட ஒரு சின்னப் பிள்ளையை எனக்காகஏற்றுக்கொள்கிறவர் என்னையும் ஏற்றுக்கொள்கிறார்.

என்ற

வசனத்தோடே இயேசு நின்று கொண்டிருந்தார்

அதன்பிம்பம் யோவானின் படத்தில் பட்டு பிரதிபலித்தது.

அப்போதும் அமலோற்பவத்தின் கைகள் அந்த ஜெபமாலையை உருட்டிக்கொண்டே இருந்தது.

அணைந்த மெழுகு வர்த்தியின் நறுமணம் அந்த அறையெங்கும் பரவியிருந்தது.

இப்போது அதை ஜானும் உணரத்தொடங்கியிருந்தான்.

- எழுத்தாக்கம்: எபிநேசர் ஈசாக் ...

 

 

12.K2K-00053

நறுமணம்

"அன்புடன் காலை வணக்கம் மக்களே.."நான் உங்க தோழி ஆர்.ஜே. வர்ஷா..இது உங்க வைகை எப். எம். நூறு புள்ளி ஐந்து...என தன் குரலை உயர்த்தி லேசான புன்னகையை வார்த்தையில் தவழ விட்டவளாய் கலகலவென பேச ஆரம்பித்தாள் ஆர்.ஜே. வர்ஷா...

இன்னைக்கி நாம பேச போற டாபிக் "நறுமணம்"...

சொல்லும் போதே நுரை ததும்பி நின்ற காபி வாசனை கை அருகே டேபிளில் வர்ஷாவை ஈர்த்தது...

எனினும் கடமையே கண் என தன் வேலைக்கு கட்டுமட்டவளாய் தன் நாசிகளுக்கு கடிவாளம் போட்டு பேச்சைத் தொடர்ந்தாள்..

இன்னைக்கி உலக காற்று தினம்...

இந்த காற்றின் அலைவரிசையில் நுகரப்படும் அத்தனை வாசனையும் நறுமணம் தர்றதில்லைங்க.... "

"அன்பு என்ற வாசனை எங்கெல்லாம் பரவிக் கெடக்கோ அங்கே நறுமணத்துக்கும் அளவே இல்லைங்க....

"உங்க அன்பின் நறுமணம் மற்றும் அன்பின் வலிய மனச விட்டு பகிர அழையுங்க...7538818779...

இது நம்ம

வைகை பண்பலை 100.5...

நேரம் இப்பொழுது சரியாக 08:05.."

"வணக்கம் மா...

என் பேரு ராமையன்

எனக்கு வயசு 63 ஆச்சு மா... " குரலில் ஒரு வெறுமை...

வணக்கம் ஐயா..

"எங்க இருந்து பேசறீங்க ஐயா? "

"நான் அன்னை முதியோர் இல்லத்துல இருந்து பேசறேன் மா..

நல்ல தலைப்பு..என கூறிக் கொண்டே லேசாக இருமியவாறு...

தொண்டையை செறுமிக் கொண்டே ஹால்ஸ் மிட்டாய சுவைந்து கொண்டே

ஹால்ஸ் வாசனை நாசிகளுக்குள் ஊடுறுவ...பேச்சை தொடர்ந்தார்..

வாழ்க்கைல சில நறுமணம் போலியாவும் இருக்குது...

காசு பணம் சேர்த்தேன் நல்ல உறவ சேர்க்கல...கடைசில எதுவும் நெலைக்கல...

கடைசி நிமிஷ வாழ்க்கைல வலிய பகிர்ந்துக்க கூட யாருமே இல்லைனா அத விட கொடுமையான வலி எதுவுமில்லை மா...

மனசு பாரத்த, மனசு தனிமைய இப்படி எப். எம் வழியா கொஞ்ச நிமிஷம் எல்லாத்தையும் மறக்கறேன் மா என்றார்...

"ஐயா றுத்தம் வேணாம்...

அன்ப காட்ட வயசும் தடை இல்லைங்க? உங்க மனச நீங்க நேசிங்க...அன்பு தன்னால மனசுக்குள்ள தேடி வரும் ஐயா என்றாள்" அழுத்தமாய்... நம்பிக்கையாய்..

அழைத்தமைக்கு நன்றி ஐயா என போன் காலை துண்டித்தாள்...

"சுமார் நாலு முதல் ஆறு சதவீதம் முதியோர்களுக்கு அன்பு மரியாதை கிடைப்பதில்லை, இதனால உடல் ரீதியாக மனரீதியா பாதிக்கப்படுறாங்க..."

இன்னைக்கி முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம் கூட..."

அன்பு செய்வோம் மக்களே...

அன்பே தீர்வு " என்றாள் ஆழமாய்..

நீதி:

நறுமணம்ங்கறது நம்ம உடம்புல ஆடையில பூசப்படுறதுனால வர்ற வாசத்துக்கு பேரு மட்டும் இல்லைங்க.. மத்தவங்க சந்தோஷப்படுற மாதிரி நாம உதிர்க்கிற வார்த்தைல தான் நறுமணம் இருக்கனும்ங்க...

பூங்கொடி

 

 

13.k2k 0063

நறுமணம்

    அம்மாவின் புடவை வாசம், அப்பாவின் வியர்வை வாசம், நண்பர்களின் தனிப்பிரிய வாசம், குழந்தைகளின் பால் மணம் இப்படி வாழ்வில் எத்தனையோ நறுமணங்கள் உள்ளன என்பதை யோசித்தபடி மீனலோசனி தன் கணவனின் வருகைக்காக காத்திருந்தாள். அன்று வெள்ளிக்கிழமை வீட்டில் சமையல் வாசமும்,பூஜை செய்த சாம்பிராணி வாசமும் கலவையாக வீசியது. வீடே மங்கலமாக இருந்தது. அவளது கணவன் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிபவன். வெள்ளிக்கிழமைகளில் அம்பாளுக்கு அபிஷேகம் செய்து மஞ்சள் உருண்டடையுடனும், கையில் மலர்ச்சரத்துடனும், உடல் முழுவதும் கருவறையில் இருந்து வியர்வை ஈரத்துடனும் உள்ளே நுழையும் போதே மீனம்மா இந்த மஞ்சளையும், பூவையும் வீட்டில் உள்ள அனைவருக்கும் உடனே கொடும்மாஎன்று கூறுவான். அவர்கள் வீடு நடுவில் முற்றத்து டன் நான்கு பக்கமும் வீடுகள் கொண்டு நான்கு குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. அவள் அந்த வீட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் மஞ்சளையும், பூவையும் கோடுத்துவிட்டு உணவு பரிமாற கணவனிடம் வந்தாள்,  கோவிலில் இருந்து வந்தவுடன் கை, கால் அலம்ப வேண்டாம் என்றிருந்தேன்,இரு நான் கை,கால் அலம்பி வருகிறேன் என்று கூறி சென்ற கணவனை பின் தொடர்ந்து சென்று குளியலறையில் கணவனை கட்டியணைத்து அவன் வாசத்தை தன் உயிர் முழுதும் நிறைத்தாள்.அவர்கள் கூட்டுக்குடும்பத்தில் இருப்பதால் தனிமை கிடைப்பதே அபூர்வம்.அவன் என் உடல் முழுவதும் வியர்வை வாடை வருகிறது நீ எப்படி இதை வாசம் என்று கட்டியணைக்கிறாயோ என்றான் அதற்கு அவள் கோயிலின் கருவறை வாசத்தில் உங்களின் வியர்வை வாசம் எனக்கு தெரியவில்லை என்று கூறினாள்.என் அம்மாவின் நறுமணம் என் அப்பாவின் வியர்வை மணம், என் குழந்தைகளின் பால் மணம், என் நண்பர்களின் நறுமணம், கோவில் கருவறையின் நறுமணம் அனைத்தையும் உங்களின் நறுமணத்திலேயே நான் உணர்கிறேன் என்றாள் மீனலோசனி.17வயதில் அவள் அறிந்த இந்நறுமணம் அவளின் 35ம் வயதில் ஒரு வியாழன் அன்று விடைபெற்றது.ஆனாலும் அவள் கணவனின் நறுமணத்தை உயிரில் நிறைத்தே உலகில் வாழ்கிறாள் இன்று வரை.

     அவள் அனுராதா

 

 

14.K2K-00066

நறுமணம்..!

சென்னையின் ஒரு அலுவலகத்தில்..!

"உனக்கு பயம் டா. வாய்த்தான் அதிகம். ஒண்ணும் செய்ய மாட்டல" என்று வேண்டுமென்று மகேஷ் சொன்னான்.

அனைவரின் முன்னே இதை சொன்னதும், குமாரின் ஈகோ அவனைப் பேச வைத்தது.

"ஓவரா பேசுறடா. நான் ஒரு தடவ முடிவு பண்ணிட்டா.. அவ்ளோ தான்" என்றான் குமார்.

"அப்படியா.. சரி ஒரு பெட் வெச்சுக்கலாம். ஒரு மாசத்துல நீ 3 கிலோ வெயிட்ட கம்மி பண்ணு. அப்போ ஒத்துக்குறேன்" என்றான் மகேஷ்.

குமார் அவன் வயதுக்கு மீறிய எடையில் இருந்ததால் மகேஷ் அவ்வாறு கூறினான். அனைவரின் முன் இதைக் கேட்டதால், தன்மானப் பிரச்னையாக எண்ணிகொண்டு, "பெட்டுக்கு நான் ரெடி" என்றான் குமார்.

"3 கிலோ ஒரு மாசத்துல கம்மி பண்றது கஷ்டம் குமார், சொன்னா கேளு. வீணா அசிங்க படாத " என்று மகேஷ் மறுமொழி கூற, "பெட்ல நான் வின் பண்ணிட்டா, என்ன தருவ?" என்று குமார் கேட்டான்.

"ஆயிரம் ரூபாய் பெட்" என்றான் மகேஷ்.

எப்பொழுதும் போட்டி மனப்பான்மை உடனே இருக்கும் குமாருக்கு, எப்படியாவது மூன்று கிலோ எடையைக் குறைக்கவேண்டும் என்று அந்த நொடி முதலே முடிவு செய்தான். அன்றைய தினமே அலுவலகத்தில் மாலை நேரத்தில் வழங்கப்படும் நொறுக்கு தீனிகளையும் நிராகரித்தான். அலுவலகத்தில் இருக்கும் உடற்பயிற்சி கூடத்திற்கும் சென்று விண்ணப்பப் படிவத்தை வாங்கி கொண்டான்.

"இவன் உண்மையாவே, பெட்ல வின் பண்ணிடுவானோ?" என்று நினைத்துக்கொண்டே "ஆல் தி பெஸ்ட் குமார்" என்று மகேஷ் சொல்லிவிட்டு விடைப்பெற்றான்.

தன் இருசக்கர வாகனத்தில் வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்த குமார், திடீரென்று வாகனத்தை நிறுத்தினான். இடது புறம் திரும்பி பார்த்தான்,

"எஸ் எஸ் பிரியாணி கடை", கடையின் உள்ளே நுழையக்கூட இடம் இல்லாத அளவுக்கு கூட்டம் அதிகமாக இருந்தது. 'டங் டங்' என்று வரும் சத்தத்துடன், காற்றில் வரும் சிக்கன் பிரியாணியின் நறுமணம் தூங்குபவரையும் எழுப்பி விட்டது. குமார் வாரத்தில் 7 நாளும் அந்த பிரியாணியை வாங்கி சாப்பிடுவான். அதனால் அவனை அறியாமலே வாகனம் அந்த கடை முன் நின்று விட்டது. மகேஷிடம் போட்ட சவால் ஞாபகம் வந்தது, மனதை ஒருமுக படுத்திகொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

"என்னை மறந்துட்டியா..?" என்று கேட்பதுபோல் அந்த பிரியாணியின் வாசனை அவனை இழுத்தது.

"பெட்டா? பிரியாணியா?" என்று குட்டி உலகப்போரே அவனுள் நடந்தது. அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவன் கையில் ஒரு சிக்கன் பிரியாணி பொட்டலம் இருந்தது.

அந்த பிரியாணியின் வாசனையின் முன் குமாரின் ஈகோ தோற்று போய் விட்டது. முப்பது நாட்களும் பிரியாணி சாப்பிட்டாலும், விடாத உடற்பயிற்சியால் 2 கிலோ குறைத்தான் குமார். சவாலில் தோற்றதை ஒப்புக்கொண்டு 1000 ரூபாயை மகேஷிடம் கொடுத்தான்.

"எனக்கு காசுலம் வேணாம். நம்ம டீமுக்கு ஒரு பக்கெட் பிரியாணி ஆர்டர் பண்ணு" என்றான் மகேஷ்.

"மறுபடியும் பிரியாணி.. ஜாலி..!" என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு பிரியாணி கடைக்குப் போன் செய்தான் குமார்.

 

நீதி: நாளை எப்படி இருக்குமென்று நமக்கு தெரியாது, நமக்கு பிடித்த உணவை சாப்பிட வாய்ப்பு கிடைத்தால், அதை விட்டுவிடக் கூடாது.

- GD

 

 

15.K2K 00067.

**.   நறுமணம்.   ****

         சினேகாவுக்கு நல்ல கூரிய மூக்கு, எடுப்பான நாசி அழகான முகத்துக்கு அழகூட்டுபவை அவை, நறுமண மோ அல்லது நாற்றமோ - மன்னிக்கவும் - துர் நாற்ற மோ அவள் மூக்குக்குத் தான் வியர்க்கும் முதலில்.

        அடுப்படியில் கருகுவதை அறையிலிருந்தே அறிவுறுத்தி அலறு வாள் சினேகா. தெருக் கோடியில் மீன் காரி வருவதை அவளது ' மீனோய்' என்ற குரலுக்கு முன்பே கட்டியம் கூறுவாள். தலையில் தடவிய தேங்காய் எண்ணெய் பழசாகி சிக்குப் பிடித்து விட்டது என்று அதை தூக்கிக் கடாச சொல்வாள்.தம்பி விளையாட்டு மைதானத்தில் இருந்து வந்து விட்டான் என்பதை அவன் வியர்வை நாற்றத்தை முகர்ந்தே சொல்லி விடுவாள்.

  அவள் தம்பி கூட வேடிக்கையாய் கூறுவான்,' ஒரு நாய் தான் எனக்கு மூத்த அக்காவாய் வந்து வாய்ச்சிருக்கு ' என்று.

            ஆனால் என்ன பிரச்சினை என்றால் வாசனை பூச்சு திரவம் - அதான் செண்ட் - என்றால் சினேகாவுக்கு ஆகவே ஆகாது. சற்று நேரத்தில் தலைவலி வந்து நாய் போல் குரைக்க - அதான் கத்த ஆரம்பித்து விடுவாள். அவள் தங்கை கூட கிண்டல் அடிப்பாள்," இரு இரு சினேகா ஒரு குநேகா செண்ட் போடுறவன் தான் உனக்கு மாப்பிள்ளையாக வரப் போகிறார் " என்று.

               அன்று காலையில் இருந்தே வீடு அல்லோகலப் பட்டது. எல்லாப் பொருட்களும் அதனதன் இடததில் திருத்தமாக இருந்தன. அப்பாவும் அம்மாவும் பர பரப்பாக இருந்தனர். சினேகாவுக்கு அவள் தங்கை அழகாக தலை வாரிப் பூச்சுடினாள். அவள் சினேகாவி் டம் "ஏய் நீ அடுத்து தல வாரி விடணும்" என்றாள." சும்மா இரு ரொம்ப சிங்காரிச்சுகாதே, அப்புறம் பொண்ணு யாருன்னு சந்தேகம் வந்துரும் " என்றாள சினேகா கிண்டலாக.

                      பெண் பார்க்கும் படலம் ஆரம்பம், சினேகா கையில் காஃபி தட்டு. முதலில் மாப்பிள்ளை பெற்றோருக்கு, அடுத்து மாப்பிள்ளை நாதன் முன்னால் தட்டை நீட்டி விட்டு ஓரக் கண்ணால் அவனை நோட்டம் விட்டாள். அதற்கு முன் அவளது நாசி முக்கூடல் ஜவ்வாது வாடையையும், விக்டர்& ரால்ஃப் பிளவர் பாம் பாரிஸ் செண்டின் நறுமணத்தை யும் மோப்பம் பிடித்து விட்டது. சட்டெனப் பின்வாங்கி சபைக்கு முன் அடக்கமாக நமஸ்கரித் தாள் சினேகா.

    காபியைப் பருகுவதர்க்கு முன்பே நாதன் கண்கள் சினேகாவின் எழிலைப் பருகி விட்டது. அதனால் ஏற்படும் திருப்தியும் மகிழ்ச்சியும் அவன் முகத்தில் வெளிப் பட்டன.

            இரு வீடுகளிலும் அனைவருக்கும் மன நிறைவு, இறுதி செய்யும் முன் எதற்கும் இருக்கட்டும் என்று சினேகாவின் அப்பா அவளை ஒரு வார்த்தை கேட்க எண்ணி அவளை அறைக்கு அழைத்தார்.

    " என்னம்மா திருப்தி தானே" என்றார்.

" எல்லாம் திருப்தி அப்பா. ஆனால் ஜவ்வாது வாடையும் செண்ட் நாத்தமும் கொடலைப் பிரட்டுதே" என்றால் சினேகா.

   "அம்மா ஜாதகப் படி பத்துப் பொருத்தமும் இருக்கு, மாப்பிள்ளை வீட்டார் செம வசதி, மாப்பிள்ளைக்கு சுளை யாய் சம்பளம் வரும் அரசாங்க வேலை; நல்ல பழக்கங்கள் கொண்ட பையன். குண மண மான பெற்றோர், வேறு அக்கு தொக்கு இல்லை. இந்த நல்ல வாய்ப்பை ஒரு செண்டுக்காக உதறித் தள்ளிவிட்டு விடமுடியுமா அம்மா? செண்ட் போடாத மாப்பிள்ளை தண்ணி போடுறவனா இருந்தா என்ன பண்ணுவே? நன்றாக சிந்தித்துப் பார்" என்றார் அப்பாகாரர். சினேகாவுக்கு வேறு வழியில்லை. தன் தங்கையின் விளையாட்டுப் பேச்சு உண்மை ஆகி விட்டதோ என்றெண்ணி அரை மனதுடன் ஒப்புதல் சொல்லிவிட்டாள் சினேகா, திருமணமும் முடிந்தது.

              சில மாதங்கள் கடந்தன, சினேகா வாட்டமாய் நின்றாள் நீதி மன்ற அறையில்; நாதனும் வந்திருந்தான், தீர்ப்பு சொல்ல வேண்டிய நீதிபதி," நாதன், கடைசியாக நீங்கள் கூற எதுமுள்ளதா? " என்று கேட்டார்.

      " மாண்புமிகு நீதியரசர் அவர்களே! இந்த செண்ட் ஒவ்வாமை தவிர என் அன்பு மனைவி மீது எந்தக் குறையும் இல்லை, எனக்கோ நறுமணம் தவிர்க்க இயலாத மனபிரச்சினை, இது வரை என் மனைவியிடம் கூடக் கூறாததை இந்த திறந்த நீதிமன்றத்தில் அனைவருமக்கும் முன் வெட்கத்தை விடுத்து கூற விழைகிறேன். எனக்கு அதி   பயங்க ரமாக வியர்க்கும், வியர்வை நாற்றத் தோடு ஒரு கெட்ட துர்நாற்றமும் அடிப்பதாக என் நண்பர்கள் சொல்லுவார்கள். வகுப்பறைகளிலl என்னோடு சேர்ந்து அமர யாரும் விரும்ப மாட்டார்கள். விடுதி அறையிலும் நான் வெளியே படுக்க வேண்டி இருக்கும்.எனவே என் இதய நண்பன் யோசனை படி நான் ஜவ்வாது செண்ட் போட்டுக் கொள்ள ஆரம்பித்தேன்.அதுவே ஒரு பழக்கமாகி போதையும் ஆனது. அதைப் பயன் படுததா விட்டால் என்மனம் வியர்வை துர் நாற்றத்தைப் பற்றியே சிந்திக்கும். வேறு எதுவும் மனதில் ஓடாது, நான் எதிலும் கவனம் செலுத்த முடியாது " என்றான் நாதன்.

   . .   வேடிக்கை யோடும் வேதனையோடும் அந்த நீதிபதி குறிப்பிட்டார்." நறுமணம் கூட இருமனம் ஒன்றிய திருமணத்துக்கு உலைவைக்குமோ? ".

****

                " ஏய் சினேகா, பெண் வீடு பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வர இருக்கையில் இப்ப என்னடி குட்டித் தூக்கம்?" என்று அதட்டல் போட்டாள் அம்மாக்காரி.

         " ச் சீ, என்ன ஒரு பகல் கனவு " என்றவாறே எழுந்த சினேகா தன் தம்பியை நோக்கி " டேய், நீ போய் சித்தப்பா உனக்கு லண்டனில இருந்து வாங்கி வந்த செண்டை எடுத்து நல்லா தாராளமா போட்டுக்க. அப்படியே எனக்கும் கொஞ்சம் அடித்து விடு "என்றாள் சினேகா, என்ன ஆயிற்று இவளுக்கு என்று திகைத்துப் போனார்கள் சினேகாவின் மொத்தக் குடும்பத்தினரும்.

  அன்பழகன்

 

 

16.K2K 00068

ராஜ் சிறு வயதில் ஏழையாக வாழ்ந்து வந்தவன், அவன் வளர வளர செல்வங்கள் குவிந்தன. நாகரிகமும் வளர்ந்தது நறுமணமும் சென்றது.

கூரை வீட்டில் இருக்கும் போது இயற்கை காற்று சூரிய காந்தி பூக்கள் சூரியனை நோக்கி இருக்கும் வண்ணமாகவும் பூத்துக்குலுங்கும் பூஞ்சோலைகளும் வயல்வெளி களும் நறுமணத்துடன் இருந்தன.

அதிகாலை 5 மணி அளவிலும் சாயுங்காலம் 6 மணி அளவிலும் மாட்டுச்சாணத்தை முற்றத்தில் தெளித்து கோலமிட்டு நடுவில் பூ வைப்பார்கள் வீட்டைச்சுற்றி மல்லிகைப்பூ கனகாம்பரம் செடிகள் இருக்கும் போது மிகவும் வாசனையாகவும் இருக்கும்.

ஓட்டு வீட்டில் இருக்கும் போது சளி பிடித்தால் ஆவி பிடிப்போம் என்று வெந்நீரில் மஞ்சள் இட்டு போர்வையால் நுகரச்செய்வதும் குளித்தவுடன் தலை ஈரமாக இருக்கும் என தூள் சாம்பிராணியில் தலை முடியை உலர வைப்பதே நறுமணமாக இருந்தது.

மாடி வீட்டிற்கு சென்றோம் செடி கொடிகளை காணவில்லை. மாடி வீடு என்பதால் மண் தரையானது தார்ச்சாலையாக மாறியது. இங்கே முற்றத்தில் நீர் தெளிப்பது அபூர்வமாக மாறியது.

மாளிகையில் வாழ்வதால் மாத்திரைகள் குவிந்தன. கொரோனா என்ற தொற்று நோய் தொடர்ந்து வருவதால் வீடுகளின் முற்றத்தில் மஞ்சள் நீரோடு வேப்பிலை தெளிக்கப்படுகிறது.

அக்காலத்தில் களி, சுக்கு மிளகு திப்பிலி பயன்பாடு அதிகம். இன்றோ கசாயமாக மாற்றப்படுகிறது. நறுமணம் நறுக் என்று சென்றது.

J. JEYARAJ

 

 

17.K2K 00069

  நறுமணம்

பாதி விரிந்த மல்லிகை மொட்டுக்களின் நறுமணத்துடன் சாம்பிராணி மற்றும் கற்பூர வாசனை கலந்து வீட்டுக்குள் நுழைந்த போதே மனதை நிறைத்தது.

"மகா கணபதிம் மனஸா ஸ்மராமி மகா கணபதிம்.. " சிந்துவின் பாடல் வேறு வீட்டைத் தட்டி எழுப்பி இருக்க வேண்டும். ஓரமாக இருந்த மின்சாரத்தில் இயங்கும் ஸ்ருதிப் பெட்டி மெல்லிய இசையை மீட்டிக் கொண்டிருந்தது.

சட்டென்று என் பார்வை குசினிக்கு விரைந்தது.

"கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்" நான் பாடிய எதிர்ப் பாட்டு சிந்துவை வெறுப்பேற்றி இருக்க வேண்டும்.

"அம்மா, நந்தனைப் பாருங்கம்மா" கத்தினாள்.

அக்கா தம்பி என்றால் இப்படித்தானே இருக்க வேண்டும்.

"அம்மா, நெய் தோசை தானே! " பதிலுக்குக் கத்தினேன்.

"பக்கத்தில சமயலறையில் தானே இருக்கிறேன். ஏன் இப்படி அம்மா அம்மா என்று அலறுகிறீர்கள்!" அம்மா தோசைக் கரண்டியுடன் வெளியில் வந்திருந்தார்.

அந்தத் தோசைக்கரண்டி தரக்கூடிய வலியைப் பற்றி கண்டிப்பாக எல்லா அக்கா தம்பிக்கும் தெரியும்.

"டேய் நந்தன்!  விளையாடி விட்டு வந்தால் குளிப்பதில்லையா!  குளிக்கப் போடா" அம்மா தோசைக் கரண்டியை அசைத்து அசைத்துப் பேச என் சுவாசக் குழாய் சுருங்கத் தொடங்கி இருந்தது.

"நெய்த் தோசை வாசம் வந்தது.. அதான்..." என்றுஇழுத்தவாறறே ஓடினேன்.

"தோசை கருகும் அளவிற்கு அம்மாவும் மகளும் மகனும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். ம்ம்ம" அப்பா வந்திருந்தார்.

அப்போது மல்லிகையை விட வாசனைத் திரவியங்களை விட நெய் தோசையை விட இனிய ஒரு இல்லற நறுமணம் பரவத் தொடங்கி இருந்தது.

🥳🥳🥳🥳🥳🥳💙

நீதி - இல்லற நறுமணத்தை விட பெரியது ஏதாயினும் உண்டா?

நெய் தோசை என்று சொல்கிறீர்களா?? 😂😂

-VILIA

 

 

18.K2K-00078

 நறுமணம்

########################

ராணி கண்களைத் துடைத்துக்கொண்டு, நா! நீ சொன்னதுக்கு அழுகலடி. என்னோட தலவிதிய நினச்சி அழுறே" என்று கூறித் தோட்டத்திற்கு கண்ணீருடன் சென்றுவிட்டாள். அருகிலிருந்த கீத்தா மாமி என்ன? நடந்து! என்றால்,. வலிகள் மட்டுமே கொண்ட ராணியைப் பற்றி கூற ஆரம்பிதேன்.

தன் தாயை இழந்தபோது, ராணிக்கு 9 வயது. தன் தாயை ஒத்த வனப்பிலே, தங்கை மலர். ஒருநாள் குடிபோதையில் ராணியின் தந்தை மயிரைப்பிடித்து, தன் மனைவியை சுவரில் அடித்தான். ஊர் அடங்கிய அச்சாமத்தில், வைத்தியசாலையில் அனுமதிக்க துணையின்றி தவித்தாள் ராணி, ஓரிரு நிமிடம் மூச்சு வாங்கிய, அவளது தாயின் உடல் உயிரற்று, மண்ணில் வீழ்ந்தது. தாய்ப்பாலை தேடும் தங்கையின் முகம், அவளுக்கொரு பாதையாக இருந்தது.

தந்தையின் நிழலினை வெறுத்தவள், அவ்வூரில் இருந்த தேனப்பனது உதவியால், தாயின் பெயரில் இருந்த, 10 ஏக்கர் நிலத்தில் நறுமணம் வீசும் ரோஜாப்பூக்களை வளர்க்க ஆரம்பித்தாள்; தேனப்பனால், அந்நிலத்திலேயே குடிசையொன்றும் அமைத்துக் கொடுக்கப்பட்டது.

சிறுவயதிலேயே...!

ராணியின் வாழ்க்கையில் நடந்த விபரிதங்கள். எந்தப் பெண்ணுக்கும் நடந்துவிடக்கூடாது.

காலம் கடந்து சென்றது. ஊர் ஊராக பூவிற்றவள். மலருக்கு தாயாகவும், தந்தையாகவும் இருந்தாள். அவளுக்கு வயதோ! பதினைந்தினை எட்டியது. அக்காவின் மீது அதித அன்புக்கொண்டள். அடிக்கடி ரோஜாப்பூவின் நறுமணத்தை நுகர்ந்துப் பார்ப்பாள், ஒருநாள் 'அக்கா மலர்களுக்கு மட்டும். ஏன்? இவ்வளவு மணம், என்று கேட்டாள், தன் வாழ்க்கையை இணைத்து விளக்கம் கொடுத்தாள் ராணி.

மலரே!!!

பூக்களுக்கு சண்டைப் போட்டு, அடுத்தவரின் உயிரைப் பறிக்க தெரியாது. கடவுளின் படைப்பில் மனமற்றவன் மனிதன். ஆனால், அழகோடு மணத்தையும் கொடுத்து, உன் வாழ்க்கை ஏழு நாட்கள் என விதி செய்து வைத்துள்ளான்.

ராணி கூறியதை கேட்டவள். அன்றிரவு முழுதும் அதனையே யோசித்துக் கொண்டிருந்தாள். அதிகாலை கோழி கூவியதும், ரோஜாத்தோட்டத்திற்கு சென்று பூக்களைப் பறித்து வந்து, பூமாலையாக கோர்த்து தாயின் படத்திற்கு சூட்டினாள்.

"மலர்... என்மா! இன்னைக்கு அம்மா படத்துக்கு பூமாலை எல்லாம் கட்டிப் போடுற"

என்று கேட்டாள்.

அக்கா... பூக்களுக்குள் எப்படி சண்ட வராதோ.! அதே மாரி. நமக்குள்ளையும் வரக்கூடாது.

என்றாள். இதனை கேட்டவள். கட்டிப்பிடித்து அழுதாள்.

தேனப்பனது மகனுக்கு ராணி மீது காதல். பூமாலை வாங்க வரும் தேனப்பனது மகனோ! காதல் பார்வையில் அடிக்கடி அவளை தீண்டிச் செல்வான்.

சிறுவயதிலிருந்து ராணி மீது அன்பும், மரியாதையும் கொண்ட தேனப்பனுக்கு ராணியை தன் மகனுக்கு மனைவியாக்குவதில் விருப்பம் இருந்தது. நாள் குறித்து, சொந்தங்களை வரவழைத்து, ராணி வீட்டிற்கு சென்றனர். மலர் ஒன்றுமறியாத சிறுபிள்ளைப் போல, ராணி முகத்தை பார்த்தப்படி நின்றாள். ஊரிலேயே மிகப்பெரியது தேனப்பனது வீடு. இவ்வளவு காலம் தங்கைக்கு கொடுக்க முடியாத ஆடம்பர வாழ்க்கையை கொடுத்துவிடலாம். என நினைத்தவள். திருமணம் செய்ய ஒப்புக்கொண்டாள். சிவப்பு சேலையும், மஞ்சள் நிற ரவிக்கையும் ராணியின் நிறத்திற்கு எடுப்பாக இருந்தது.

தேனப்பனது மகனுக்கும், ராணிக்கும் பெரியவர்களின் ஆசியுடன் திருமணமும் நடந்துமுடிந்தது. திருமணமுடிந்த கையோடு ராணியையும், அவளது தங்கை மலரினையும் தேனப்பனது உறவினர்கள் அழைத்து சென்றார்கள்.

ராணிக்கு குடும்ப பொறுப்புக்கள். தலைக்கு மேல் குவிந்தது. ராணியின் கணவனுக்கு இரண்டு தங்கைகள் இருவருமே திருமணப் பருவத்தினை அடைந்து விட்டார்கள். அவர்களுள் மூத்தவள் கலைக்கு மாப்பிள்ளை பார்க்க, அயலூருக்கு குடும்பத்துடன் ராணியும் சென்றாள்.

ரோஜாத்தோட்டத்திற்கு நீர் ஊற்ற வேண்டும் என்பதற்காக மலரை வீட்டிலேயே இருக்கும் படி கூறிச்சென்றாள்.

சாயங்காலம் வீடு திரும்பிய ராணி. தனியாக தோட்டத்தில் மலர் இவ்வளவு நேரம் என்ன! செய்கிறாள். என்று காணச் சென்றாள். ஏதோ விபரீதம் நடக்கப் போவது போல காலையிலேயே ராணியின் வலக்கண்ணும் துடித்துக் கொண்டே இருந்தது.

இல்லை.. அப்படியெல்லாம்

ஒன்றும் நடந்து விடாது. என்று தனக்கு தானே ஆறுதல் கூறிக்கொண்டு, ரோஜாத்தோட்டத்திற்கு வேகமாக நடந்துச்சென்றாள்.

பதற்றத்துடன் சுற்றி சுற்றித் தேடிப்பார்த்தாள். மலரை காணவில்லை.

"மலரே! எங்கே இருக்க"

தோட்டத்தில் வழமையாக சுற்றித்திரியும் குருவிகளின் சத்தமும் இல்லை. வீட்டின் உள்ளே யாரோ இருப்பது போல கண்டாள். உள்ளே சென்றுப் பார்த்தாள். பூக்களோடு பூக்களாக மலரும் தரையில் சிதைக்கப்பட்டுக் கிடந்தாள்.

யார்? உன்னை இப்படி! செய்தது. என்று கேட்கும் முன்பே, ராணியின் கையில் மலரின் உயிர் பிரிந்தது.

ராணியின் கதையை, கேட்ட கீத்தா மாமி கண்ணீர் வடித்தப்படி வீட்டின் உள்ளே! சென்று, தன் கணவனிடம் கேட்டாள்.

அந்த இளம் பூவை பிய்த்துப் போட்ட, உன்னுடன் வாழ்ந்த வாழ்க்கையில், நமக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருந்ததை மறந்துவிட்டாயே.

காலம் கடந்துச் சென்றாலும் ஒரு சில ஆண்களின் மோகத்தினால், இன்றும் எத்தனையோ! நறுமணம் கொண்ட ரோஜாவை ஒத்த, இளம்பிஞ்சுகள் சிதைக்கப்படுகின்றன. பெண் பிள்ளைகளை ஒருசில

கயவர்களிடமிருந்து காப்போம்.

                            நன்றி!!!

-பரமசிவம் இந்துஜா

நுவரெலியா

இலங்கை.

sabaragamuwa university of srilanka

 

 

19.K2K 00079

 நறுமணம்

"அண்ணாச்சி..எனக்கு ரெண்டு கிலோ அரிசி..ஒரு கிலோ சர்க்கரை..அப்படியே முந்திரி திராட்சை ஐம்பது கிராம் போட்டுக்குங்க.."

"எனக்கு துவரம்பருப்பு அரை கிலோ அண்ணாச்சி..சேமியா பாக்கெட் இரண்டு…" தொடர்ச்சியாக குரல்கள் கேட்டுக் கொண்டேயிருந்தன..பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தார் முருகேசன் அண்ணாச்சி...ஆனாலும் அவரின் கண்கள் யாரையோ தேடிக் கொண்டிருந்தன.. அப்பளத்தை எடை போட்டுக் கொண்டிருந்தவர் நாசியில் நறுமணம் ஏற சட்டென திரும்ப எதிரில் கடைக்கு வெளியே புகை போடும் தட்டோடு காதர்பாய் நின்றார்.

"அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹீ "

"வாங்க பாய்அலைக்கும் சலாம்..". அவரிடம் சொல்லியபடியே கடைப்பையனை அழைத்து வேலையை ஒப்படைத்துவிட்டு காதர்பாயை உள்ளே கூப்பிட்டு உட்கார வைத்தார்.

"பாய்..பையன் நல்லா படிக்கறானா.."

"அல்லா அருளால நல்லா படிக்கறான்..."

"சரிங்க பாய்.. நாளன்னைக்கு அவனுக்கு பிறந்தநாள்னு சொன்னீங்க இல்ல இந்தாங்க புதுச்சட்டை துணிமணி ..கூடவே அவன் கேட்ட ரெண்டு புக்கும் வாங்கியிருக்கேன்.. கொண்டுபோயி கொடுங்க பாய்...இந்தாங்க புள்ளைக்கு சாக்லேட் பெட்டி.. என்னோட அன்பு பரிசு.."

"அல்லா..உங்களை நல்லா வெச்சுருக்கணும்; இந்த அன்புக்கு நான் எப்படி கைமாறு செய்யப் போறேன்..", "அட போங்க பாய்.. அஞ்சு வருசத்துக்கு முன்ன முதமுதலா வெள்ளிக்கிழமை அதுவுமா நம்ம கடைக்கு வந்து தூபம் போட்டீங்க.. அன்னியில இருந்து கடையில வியாபாரம் நல்லா நடக்குது.. வாசனையான புகையோடு உங்க நல்லெண்ணமும் சேர்ந்து நம்ம கடை இப்ப உசந்திருக்கு..

புள்ளையில்லா எனக்கு மொய்தீனும் மகன் மாதிரிதான்.. அவன் படிக்கறதுக்கு என்ன உதவி வேணும்னாலும் தயங்காம கேளுங்க பாய்.." கண்ணீல் நீர் பெருக நன்றி சொல்லி புறப்பட்டார் காதர்பாய்.

மொய்தீன் நன்கு படிக்கும் பையன்.. அத்தோடு பெரியோரிடம் மரியாதையும் பணிவும் கொண்டவன்.. என்னவோ அவனை பார்த்ததும் பிடித்துப் போயிற்று முருகேசுக்கு..அன்புக்கு மதமேது... வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவனிடம் பேசுவார்.. 'நல்லா படி மொய்தீன்' என உற்சாகப்படுத்துவார்.

பத்து நாளாயிற்று...காதர்பாயை காணவில்லை.. தினமும் அவரை எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம். சோர்வோடு நிமிர்கையில் நாசியைத் தீண்டியது சாம்பிராணியின் நறுமணம். அடடா காதர்பாய் வந்து விட்டாரா.. விழிகளை உயர்த்தியவர் அதிர்ந்தார். மொய்தீன் புகை போடும் தட்டுடன் நின்றான்.

"அப்பா திடீர்னு மௌத்தாயிட்டார்...அதான் நான் வந்திருக்கேன்... அம்மாவால படிக்க வைக்க முடியாது..அதனால படிப்பை நிறுத்திட்டேன்..இனிமே இதுதான் என் தொழில்.."

நெஞ்சை அடைக்கும் துயரத்துடன் மொய்தீனை நோக்கினார் முருகேசன்.

"இல்ல மொய்தீன் .. நீ படிக்கணும்.. அதுதான் உங்க வாப்பா விருப்பம்.. உன்னோட படிப்பு செலவை நான் ஏத்துக்கறேன்.. உங்க அம்மாகிட்ட பேசி குடும்ப வருமானத்துக்கு வேற வழி ஏற்பாடு செய்றேன்.. உங்க அப்பா ஸ்தானத்துல இருந்து சொல்றேன்..நல்லா படி..  உன்னோட எதிர்காலத்துக்கு நான் பொறுப்பு.." மொய்தினின் கண்களில் பிறந்தது புதிய ஒளி.. இனி அவன் வாழ்வில் என்றும் நறுமணமே வீசட்டும்.

கருத்து: மனங்கள் இணைந்திடின் மதங்கள் மரித்திடும்.

-பெயர் கி. இலட்சுமி

 

 

20. K2K 00080

  நறுமணம்

அம்மாவின் உயிரில்லாத உடலின் அருகே அழக்கூடத் தெரியாமல் உட்கார்ந்திருந்தான் அருண்.நம்பவே முடியவில்லை அவனால்.

 

அம்மா இல்லாத வாழ்க்கையை நினைத்தே பார்க்க முடியவில்லை அவனால்.

அம்மா இருக்கும் இடத்தில் ஒரு தனி நறுமணம் இருப்பதாகத் தான் அருணுக்கு எப்போதும் தோன்றும்.அவனுடைய பிரியமான அம்மாவின் வாசம் அது.அவளுடைய நல்ல மனத்தின் வாசம்.

" நறுமணம் என்றால் என்ன?", என்று ஒருமுறை குழந்தையில் கேட்டது ஞாபகம் வந்தது.

" மலர்களின் மணம் மட்டும் அல்ல நறுமணம், மழைத்துளி வீழ்ந்த மண்ணின் வாசம், மழை நீரில் குளித்த இலைகளின் பசுமை வாசம், புத்தம்புது புத்தகத்தின் வாசம், புது சிசுவின் வாசம், சமையறையில் உணவின் வாசம், பழங்களின் வாசம், புதுத் துணியின் வாசம், புது நெல்லின் வாசம் தவிர உழைப்பாளியின் வியர்வை மணம் கூட வாசனை தான்", என்று அம்மா சொன்னது அவன் மனதில். பசுமரத்தாணி போலப் பதிந்திருந்தது.

அப்பா இருந்தவரை மூன்று பேருமாகக்

கூடிப் பேசிக் கும்மாளமடித்து மகிழ்ந்திருந்த குடும்பம், அப்பா

திடீரென்று விபத்தில் இறந்துவிட இருவராகக் குறுகிப் போனது.

அதற்குப் பிறகு அருணை வளர்த்தது முழுக்க முழுக்க அம்மா தான்.துணையை இழந்த துயரத்தையும் கண்ணீரையும் விழுங்கி விட்டு அவனுக்காகவே வாழ்ந்தாள் அவள்.பிறருடைய உதவியில்லாமல் தானும் வேலைக்குப் போய் அருணையும் நன்றாகவே வளர்த்து அவனுக்காகவே வாழ்ந்தாள் அவள்.

மலர்கள் என்றால் அம்மாவிற்கு ரொம்ப இஷ்டம்.அப்பா இருக்கும் வரை மாலையில் ஆஃபிஸில் இருந்து வரும் போது மல்லிகைச் சரம் தவறாமல் வாங்கி வருவார்.தலை நிறைய மல்லிகை சூடி நிற்கும் அம்மாவின் அழகான முகம் இன்னமும் நினைவில் நிற்கிறது அருணிற்கு.

அப்பா மறைந்ததற்குப் பின்னால் அம்மா பூச் சூடிக் கொண்டு அருண் பார்த்ததில்லை.சொந்த வீடு கட்டி வந்த பின்னர் பின்பக்கத் தோட்டத்தில் மல்லிகைப் பதியன்கள்; முன்பக்கம் முல்லையும் ஜாதியும் கொடிகள் நட்டார்கள்.அவை படர்ந்து வீட்டிற்கு அழகும் நறுமணமும் சேர்த்தன.தினமும் மலர்களைப் பறித்துக் கட்டும் போது அம்மாவின் முகமே தாமரையாக மலர்ந்து போகும்.பூஜையறையில் கொஞ்சம் சாற்றி விட்டு அக்கம்பக்கத்து சிறுமிகளுக்குக் கொடுத்து விடுவார்.அதுவும் ஒருநாள் நின்று போனது.யாரோ ஏதோ சொல்லி இருக்க வேண்டும் என்பது அம்மாவின் கண்ணீர் வடிந்த முகத்தில் இருந்து தெரிந்தது.என்ன உலகம் இது? கணவனை இழந்த பெண்ணிற்கு மட்டும் ஏன் இத்தனை கொடுமைகள்?

இதோ அருண் படித்து முடித்து வேலையிலும் அமர்ந்து விட்டான்.முதல் மாதச் சம்பளத்தில் அம்மாவிற்கு ஆசையாகப் புடவையும் அம்மாவிற்குப் பிடித்த இனிப்பும் வாங்கிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.

அவனுக்கு வாழ்த்து சொல்லி ஆசீர்வதித்த அம்மா புடவையைத் தொட்டுப் பார்த்து மகிழ்ந்து போனாள்.இனிப்பைக் கொஞ்சமாக அவனுக்கு ஊட்டி விட்டுத் தானும் வாயில் போட்டுக் கொண்டாள்.அதிக உணர்ச்சிவசப் பட்டதாலோ என்னவோ, "நெஞ்சைக் கரிக்கிறது என்னவோ செய்கிறது", என்று சொல்லி விட்டுக் கீழே சாய்ந்தாள்.டாக்டர் வந்து பார்ப்பதற்குள் அம்மா என்ற சகாப்தம் முடிந்து போனது.

அம்மாவின் இறுதிச் சடங்குகள் நடந்து கொண்டிருக்கின்றன.

ஏதோ நினைத்து திடீரென்று எழுந்த அருண் அப்பாவின் படத்தில் போடப் பட்டிருந்த நீளமான மல்லிகைச் சரத்தை எடுத்தான்.அம்மாவின் கூந்தலில் வைத்து அம்மாவை அவளுக்குப் பிடித்த மல்லிகை மணத்துடன் அனுப்பி வைத்தான்.

 

கருத்து

விதவையும் பெண் தான்.அவளுக்கு இழைக்கப் படும் அநீதிகளைத் தவிர்த்து  மறுக்கப் படும் இன்பங்களை அளித்து மகிழ்விப்போம்.நல்ல மனதில் எழும் உயர்ந்த எண்ணங்கள் என்றும் சமூகத்தில் நறுமணம் வீசும்.

 

புவனா

 

 

21.K2K - 00081

நடேசன் கடைக் காபி

கடைத்தெரு நடேசன் கடை என்றால் மேட்டுக்குடியில் அனைவருக்கும் நன்கு பரிச்சயம். அவரது கடை காபிக்கு அந்த ஊரில் அடிமை ஆகாதவர்கள் கிடையாது என்றே சொல்லலாம். கடைத்தெருவில் அடியெடுத்து வைத்தாலே அவர் கடை டிகாக்ஷன் நறுமணம் மூக்கைத் துளைக்கும். அந்த வாசத்திற்காகவே தாங்கள் போகும் இடத்திற்கு, கடைத்தெருவின் வழியாகச் செல்ல விரும்பும் வாகன ஓட்டிகள் பலர் இருந்தனர்.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மேட்டுக்குடியில் வெற்றிநடை போடும் நடேசன் கடை ஒரு ஹாட்ஸ்பாட். சிறிசுகள் முதல் பெருசுகள் வரை அனைத்து வயதினருக்கும் ஒரு பொழுதுபோக்கு இடமாகவே இருந்தது. சந்தோஷம் துக்கம் என அனைத்திற்கும் மருந்து நடேசன் கடை காபிதான். போராடித்தால் போதும், "வாயேன், நடேசன் கடைல காபி சாப்பிடலாம்..." என்று கிளம்பிவிடும் அளவிற்கு அவரது கடை காபி பிரசித்திபெற்றது.

காலை நான்கு மணிக்கெல்லாம் தொடங்கிவிடும் டிகாக்ஷன் தயாரிக்கும் பணி. தேர்ந்தெடுத்த காபி கொட்டைகளை அவரே ஒரு பெரிய வாணலியில் போட்டு லேசான சூட்டில் வறுக்கத் தொடங்குவார். காபி கொட்டயை வறுக்கும்போது எழும் நறுமணமே பல வீடுகளின் விடியற்காலை சுப்ரபாதம். பின்னர் அதை ஆற வைத்து அரைத்து, ஒரு நாளைக்குத் தேவையான பொடியை அளவு மாறாமல் கச்சிதமாகத் தயார் செய்துவிடுவார். ஆறு மணிக்கு வாடிக்கையாளர்கள் வரத்தொடங்கி விடுவார்கள். சாயங்காலம் வரை பரபரப்பாக ஓடிக்கொண்டேயிருப்பார் நடேசன்.

இப்படியாக சந்தோஷமாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில் விதி விளையாடியது. கொரோனா என்ற கிருமி உலகம் முழுவதும் பரவத்தொடங்கி, இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் ஊரடங்கை பிறப்பித்தது. இதன் காரணமாக நடேசன் கடையும் அடைக்கப்பட்டது. காபியின் நறுமணமில்லாமல் கடைத்தெரு மக்களுக்கு எதையோ இழந்தார் போலாயிற்று.

சிறிது நாட்கள் கழித்து ஊரடங்கு தளர்த்தப்பட்ட போது நடேசன் கடைக்கு சென்ற வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கடை பூட்டப்பட்டு, வாடகைக்கு விடப்படும் என்று போர்டு மாட்டப்பட்டு இருந்தது. பக்கத்து கடைக்காரரிடம் விசாரித்தபோது, ஊரடங்கின் காரணமாய் வருமானம் இழந்து வாடிய நடேசன் குடும்பம் வாழ்க்கையின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டு, வேறு வழியின்றி சொந்த ஊருக்கே திரும்பி சென்றுவிட்டதாய் கூறினார். மேலும், நடேசன் திரும்பி வருவாரா மாட்டாரா என்று தெரியவில்லை என்றும் கூறினார். இதைக் கேட்ட மக்கள் சோகப் பெருமூச்சோடு அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர். நடேசன் ஊரை விட்டுச் சென்ற தகவல் காட்டுத்தீயாகப் பரவி மேட்டுக்குடி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது காபியை இன்னொரு முறை குடிக்கமாட்டோமா என்று ஏங்கியவாரே நாட்களை நகர்த்தினர்.

 ஆனால் காலம் செல்லச்செல்ல நிலைமை வேறானது, மக்கள் நடேசனையும் அவரது காபியையும் மறந்துபோய், புது கடைகளைத் தேடிச் சென்றனர். நடேசன் காபி ஒரு பழைய பஞ்சாங்கம் ஆகி பின்னர் இருந்த சுவடே தெரியாமல் போனது.

நடேசனும் அவரது காபியும் இல்லாமற் போயினும், அவரது காபியின் நறுமணம் மட்டும் மேட்டுக்குடி ஊரின் காற்றில் இன்றும் கமழ்ந்துகொண்டு தான் இருக்கின்றது!

கருத்து

இவ்வுலகில் நிலையானதென்று ஏதுமில்லை. நடேசன் காப்பியைப் போல நாமும் ஒரு நாள் மறக்கப்படுவோம். ஆகவே அதிகம் கவலை கொள்ளாமல், சந்தோஷமாக வாழப் பழகிக்கொள்வோமாக!

Narmada

 

 

22.K2K -00086

 * நறுமணம் *

கவரக்கூடிய உணவுகள் பார்வையினால் ஆசை தரும் சுவையான உணவுகள் நறுமணத்தினால் கவரும்

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்ற பழமொழியை நான் அனுபவத்தில் உணர்ந்த கதை

வயது ஐந்தை தொட்டாலே உணவுக்கு ஆர்ப்பரிக்கும் குழந்தைகளில் நானும் ஒருவன் அம்மாவை பிடிக்க அனைவருக்கும் ஆயிரம் காரணங்கள் இருக்கும் எனக்கும் இருந்தது அதிலே முதன்மை என் அம்மாவின் சமையல், உணவின் மணம் மனதை ஈர்க்க தொடங்கியது.

வசதியுள்ள வீட்டின் பிள்ளை நான். கேட்ட உணவு சிறிது நேரத்தில் தயாராகி என் முன் இருக்கும். சிறு வயது முதல் நறுமணமே எனது போதையாக இருந்தது. இதற்கும் மேலாக சமையல் அறையின் அருகிலேயே என் அறை அமைந்திருக்கும். உணவின் சுவையை உணர்வதை விட மணத்தை நுகர்வதே பெரும் இன்பமாக கொண்டேன், நுகர்வதாலும் சுவைப்பதாலும் பிரதிபலனாக வயிறு நிரம்பியே இருக்கும்.

அதிகமாக உண்பேன் நினைத்தவை எல்லாம் தான். உண்பதில் பாரபட்சம் இல்லாமல் இருக்க வேண்டும் என என் அறிவுக்கு எட்டியது. உணவு பிரியனாக எல்லா இடமும் எல்லோரிடமும் வலம் வந்தேன்.

வயது ஆக ஆக உடல் எடை இரண்டு மடங்காக அதிகரித்தது. எனது பொழுது போக்கு உண்பது. இதனின் பின் விளைவுகள் என்னவென்று படித்து அறிந்தாலும் என் எண்ணமும் பழக்கமும் மாறவில்லை. நறுமணத்திற்கு அடிமையாகியவன் என என்னை வித்தியாசமாக பார்க்கும் கண்கள்.

உடலில் ஏற்பட்ட கோளாறு மட்டும் மெதுவாக தான் அதனின் வேலைகளை காட்டுமோ என்னமோ. இவையெல்லாம் போன நொடி வரை என் கடந்த காலம். இதனை நினைத்து என் அளவு கடந்த ஆசையை எண்ணி வருந்தி கொண்டிருக்கும் வேளை, மயக்க ஊசியை தயார் செய்யுங்கள் என்று என் காதில் ஒலிக்கிறது.

இன்னும் சற்று நேரத்தில் எனக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை,25 வயது மட்டுமே நிரம்பிய இளைஞருக்கு மாரடைப்பு என்றால் அதிர்ச்சி தரும் சம்பவம் தானே. அளவை மீறிய மற்றும் சரி இல்லாத உணவு பழக்கத்தால் எனக்கு மாரடைப்பு நேர்ந்தது தற்போது என் எடை 128 கிலோ.

மருத்துவர்களும் செவிலியர்களும் உள்ளே வந்து மயக்க ஊசி செலுத்த திரும்பி படுக்க சொன்னார்கள். முதுகெலும்பில் ஊசி இறங்கும் வலி உயிரைக் குடிப்பது போன்று கொடுமையாக இருந்தது. மயக்க நிலை கொஞ்சம் கொஞ்சமாக கண்கள் மூடின.

கண்களை மெல்ல திறந்தேன் அரை மயக்கம்நெஞ்சில் கட்டு அதனுடன் வலியும். மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அறையில் நான் உணர்ந்தவை வீட்டின் சமையல் அறையினால் ஏற்பட்ட விளைவுகள்.

அனைவரும் ஏதோ ஒரு வலியை அனுபவிக்கும் போது தான், அந்த விஷயத்தில் தான் செய்த தவறுகளை எண்ணி வருந்துவார்கள் ஒரு சிலர் திருந்துவார்கள். என்றும் நீங்காத என் நெஞ்சில் இந்த காயம் தவறு செய்யக்கூடாது என்று உணர்த்தும்.

எதன் மீது நான் அதிகமாக மோகம் கொண்டேனோ அதனின் அளவு சற்று உயர்ந்தாலும் எனக்கு விஷம் தான். அளவைக் கடந்தால் அனைத்தும் ஆபத்தே.

அளவோடு வாழ பழகி உடலில் அனைத்து வளமோடு வாழ்வோம், இதற்கு எடுத்துக்காட்டாக இருக்கவே நான் நினைத்தவற்றை எனக்கு நிகழ்ந்தவற்றை எழுதி இதனை படிப்பவர்கள் அதாவது உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்...நன்றி

-மு. தீபக்

 

 

23.K2K – 00090

ராசாத்தி

****

தோசையின் நெய்மணம் மூக்கை துளைத்து அவனை எழுப்பியது….

பல மாதங்கள் கழித்து மீண்டும் அதே மணம்பல நினைவுகளை கிளறியது அந்த நறுமணம்..

'என்ன ஆச்சு போன் பண்ண கூட நேரமில்லையா'

ஆமா வேலை ரொம்ப அதிகமா இருந்தது...இப்பகூட ரொம்ப அசதியா இருக்கு நான் தூங்கவா' என்று சொல்லிவிட்டு தூங்கிவிட்டான் மதன்

அதன் பிறகு அவளிடம் பேச முடியாமல் போகும் என்பது அவனுக்கு தெரியாது….

கௌசல்யாவிற்கு புரிந்தது அவனின் நிலைமைஆனாலும் பேச முடியவில்லை என்ற வருத்தம் அவளுக்கு

அவளின் ஒரே ஆறுதல் மதன் தான்! அவனின் பேச்சு இவள் கவலையை மறக்க செய்யும்எப்போதும் உற்சாகமாக பேசுவான் அவன்

அவன் நன்றாக பேசி இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது

வேலை நிமித்தமாக அவன் மும்பை சென்று மூன்று மாதங்கள் ஆகிவிட்டது

சென்னையில் இருந்தவரை தினமும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது

ஹலோ ராசாத்தியா' என்ற முதல்முதலில் அவனுடைய குரல் கேட்டது இன்னும் ஞாபகம் இருக்கிறதுஅப்பாவின் மொபைலிலிருந்து யார் கூப்பிடுகிறார் என்று ஆச்சரியத்துடன் யோசித்தாள் பதில் சொல்லாமல்

‘'ஹலோ நான் பேசறது கேக்குதாஹலோ ஹலோ'

ம் சொல்லுங்கநீங்க யார் பேசறது? எங்க அப்பாவோட போன் உங்களுக்கு எப்படி கிடைச்சது'. ‘ஒரு ஆட்டோல கிடைச்சது மேடம்.. நான் ஜீவராணி ஹாஸ்பிடலில் இருக்கேன்நீங்க வந்து வாங்கிட்டு போக முடியுமா?’.

ஆட்டோல கிடைச்சதா என்ன சொல்றீங்க? எங்க அப்பாவும் அம்மாவும் கார்ல தானே போனாங்க',

மேடம் ப்ளீஸ் எனக்கு அதெல்லாம் தெரியாது…. இது உங்க அப்பா போன் தானேநீங்க ஜீவராணி ஹாஸ்பிடல் வாங்க…',

இரண்டு தெரு தள்ளி தான் ஜீவராணி ஹாஸ்பிடல் இருக்கிறதுசரி போய் பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டு ஸ்கூட்டியில் கிளம்பினாள் கௌசல்யா

ஹாஸ்பிடல் அடைந்ததும் தன் அப்பாவின் மொபைலுக்கு கால் செய்தாள்அங்கு நடந்து வந்த ஒருவன் அவளுடைய கவனத்தை ஈர்த்தான்அவனுடைய கம்பீர நடை அவளிள் அப்பாவை ஞாபகப்படுத்தியது

அவளைக் கடந்து அவன் சென்று விட்டான்.. அவன் போவதைப் பார்த்துக் கொண்டே பேசினாள்..

ஹலோ நான் ஹாஸ்பிடல் வந்துட்டேன்நீங்க எங்க இருக்கீங்க'

வாசல்ல தான் நிக்கிறேன்…. உங்க டிரஸ் கலர் சொல்லுங்க'

கிரீன் கலர் டிரஸ்…. வண்டி பார்க் பண்ணிட்டு பார்க்கிங் ஏரியாக்கு பக்கத்துலதான் நிக்கிறேன்'. அவன் திடீரென திரும்பினான்யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான்

உங்கள நான் பார்த்துட்டேன். அங்கேயே நில்லுங்க நான் வரேன்'.

சரி என்று சொல்லிவிட்டு திரும்பி நடந்து வரும் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்அவன் அவள் அருகில் வருவதை பார்த்து தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்..

ஹலோ நீங்கதான் ராசாத்தி யா' குரல் கேட்டு திடுக்கிட்டவளாய் திரும்பினாள்.

அவன்தான்சிறிது தடுமாற்றத்துடன்ஆமாம் நான் தான்' என்றாள்….

மேடம் என்னோட பேரு மதன்என் கூட கொஞ்சம் வாங்க' என்றான் அவன்

என்ன ஆச்சு? எங்க வர சொல்றீங்க?’.

பதட்ட படாதிங்க மேடம்.. உங்க அப்பாவும் அம்மாவும் வந்த கார் ஆக்சிடென்ட் ஆயிடுச்சு'. ‘என்னாச்சு அவங்களுக்கு? அவங்க எப்படி இருக்காங்க', ‘நீங்க என்கூட வாங்க மேடம்டாக்டர் கிட்ட பேசுங்க' என்று சொல்லிவிட்டு அவன் நடந்து சென்றான்..

பதட்டத்துடன் அவன் பின்னால் சென்றாள்..

டாக்டர் இவங்கதான் அந்த பேஷண்டோட பொண்ணு', ‘டாக்டர் என்னாச்சு எங்க அப்பா அம்மாக்கு', ‘சாரிமா எங்களால அவங்களை காப்பாத்த முடியல'

தலையில் இடி விழுந்தது போல் இருந்தது கௌசல்யாவிற்கு…. பிரமை பிடித்தவள் போல் அங்கேயே நின்று விட்டாள்….

மேடம் மேடம்'அவன் கூப்பிட்டது அவள் காதில் விழவில்லை…. டாக்டரின் பின்னாடி அவள் நடக்கத் தொடங்கினாள்….

மனசை திடப்படுத்திக்கோமா' என்று சொல்லிவிட்டு டாக்டர் அவளுடைய பெற்றோரை காண்பித்தார்…..

அப்பா’ ‘அம்மாஎன்று அலறிக்கொண்டு உள்ளே சென்று அவர்களைப் பார்த்தாள்

என்னவெல்லாமோ புலம்பினாள்….. ‘மேடம் ப்ளீஸ் அழாதீங்க தைரியப்படுத்திக்கோங்க'.

எப்படி சார் எப்படி முடியும்? ஒரே சமயத்தில ரெண்டு பேரும் இறந்துட்டாங்க'

அவனுக்கும் என்ன சொல்றதுன்னு தெரியல

எப்படியோ அவளைத் தேற்றி பின்பு சடங்குகள் முடியும் வரை அவளுக்கு அவன் உதவியாக இருந்தான்

அவளுடைய தம்பியை தேற்றுவது தான் மிகக் கடினமாக இருந்தது…..

அப்படி ஆரம்பித்தது தான் அவனுடைய நட்பு மெல்ல மெல்ல காதலாக மாறியது….

கடல் அலைகளை பார்த்தபடி அவர்கள் இருவரும் அமர்ந்திருந்தனர்', ‘ரெண்டு நாள்ல நான் மும்பை கிளம்புறேன்.

ஆறு மாசம் ட்ரெய்னிங் இருக்குமுடிச்சிட்டு வந்தவுடனே நாம கல்யாணம் பண்ணிக்கலாம்', ‘நான் எப்பவோ ரெடிநீதான் தள்ளி போட்டுட்டு இருக்க'.

ம்சரி நீ இன்னைக்கு என்னோட வீட்டுக்கு வாசெக் கொண்டுவர மறந்துட்டேன்..வந்து வாங்கிக்கோ'. ‘சரி வா போலாம்' இருவரும் கிளம்பி அவனுடைய வீட்டிற்கு சென்றார்கள்

தோசை மாவு இருக்கா மதன்', ‘ம்.. பிரிட்ஜில இருக்கு…. ஏன் பசிக்குதா'

அவள் பதில் சொல்லாமல் மாவை எடுப்பதற்காக பிரிட்ஜ் அருகே சென்றாள்.

அவன் செக் எடுப்பதற்காக உள்ளே சென்றான்.. செக் வைத்த இடத்தில் இல்லை தேடிக்கொண்டிருந்தான்…. சிறிது நேரத்தில் தோசையின் நெய்மணம் மூக்கை துளைத்தது….

அவன் கிச்சனுக்கு சென்றான்..அவள் அங்கு நின்று கொண்டிருந்ததைப் பார்த்து அப்படியே அள்ளி அணைத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது

நிமிட நேரமும் தாமதிக்காமல் பின்னிருந்து அவளை இழுத்து கட்டிக்கொண்டான்…..

முதல் ஸ்பரிசமும் அவளின் வாசனையும் அவனை கிறங்க வைத்தது….

அவளுக்கும் அவனின் ஸ்பரிசமும் அவனின் வாசனையும் மிகவும் பிடித்திருந்தது..

இருவருக்கும் அந்த அணைப்பின் கதகதப்பில் இருந்து வெளியே வர பிடிக்கவில்லை…. சிறிது நேரத்தில் அவள் கையை விலக்கிவிட்டு தள்ளி நின்றாள்….

அப்பா என்ன ஒரு அழகுஇந்த அழகு தான் என்ன கட்டி போட்டு வச்சிருக்கு..

உன்னோட அழகான முகத்தை பார்த்திட்டே இருந்தா போதும்டி…'

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று, உன் பொன்முகத்தில் இருக்கிறது' என்று பாடத் தொடங்கினான்', ‘சரி சரி போதும் போதும்' என்றாள் சிரித்துக்கொண்டே சொன்னாள்….

அவனும் சிரித்துக் கொண்டேஇது என்ன ஸ்பெஷல் தோசையா இப்படி வாசனை வருது' என்றான்….

ஏன் நெய் தோசை சாப்பிடதே இல்லையா', ‘ஹோட்டல்ல சாப்பிட்டு இருக்கேன் ஆனா இப்படி வாசனை வந்ததில்லையே',

அது கௌசல்யாவோட கைப்பக்குவம் ஹோட்டல எப்படி வரும்',

சரி நான் சீக்கிரம் கிளம்புறேன் இதுக்கு மேல இருந்தா சரியா வராது' என்றாள்.

அவனுக்கும் அதுதான் சரின்னு தோணித்து

சரி வா உன்னை கொண்டு விட்டு வரேன்', வண்டியில் இருந்து கீழே இறங்கிய அவளின் கண்களில் நீர் நிறைந்து இருந்தது

ஏய் என்ன ஆச்சு', ‘தெரியலமறுபடியும் எப்ப உன்ன பாக்க போறேன் னு நினைச்சேன்'.

இன்னும் ஒரு ஆறுமாதம் தான்'

தெரியல…. என்னமோ மனசே சரியா இல்லை'

ஒண்ணும் இல்லஎல்லாம் சரியாகும் நிம்மதியா போய் தூங்கு

சரி நான் போயிட்டு வரேன்'

அன்றுதான் அவள் கடைசியாக அவனைப் பார்த்தது….

நினைவுகளில் மூழ்கிப் போனவள் மாடிப்படியை சரியாக கவனிக்காமல் படிகளில் உருண்டவளின் போன் கீழே மூடாமல் இருந்த பாதாள சாக்கடையில் விழுந்து விட்டது

கீழே உருண்ட அவளும் அங்கிருந்த பெரிய கல்லில் முட்டி மயக்கம் அடைந்தாள்

அருகில் இருந்தவர்கள் அவளை ஹாஸ்பிட்டலில் கொண்டு சேர்த்தார்கள்

கிராமத்தில் இருந்த திருமணமாகாத அவளின் அத்தைக்கு தகவல் அனுப்பப்பட்டது….

அடுத்தநாள் இரவு தான் மறுபடியும் அவளுக்கு அவன் போன் செய்தான்

ஃபோன் ஸ்விட்ச்டு ஆஃப் என்று நான்கு நாட்களாக அவனுக்கு பதில் வந்தது….

10 நாட்கள் வேலை நிமித்தமாக அவன் அமெரிக்க செல்ல வேண்டியிருந்தது

10 நாட்களாக அவளுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை….

மூன்றே நாட்களில் அவளின் காயங்கள் குணம் அடைந்தது…. இன்னும் ஒரு வாரம் ஹாஸ்பிடலில் இருக்கவேண்டும் என்று சொன்னார்கள்…. அதிகமான பில் தொகை வந்ததால் தன் கிராமத்திற்கு அவளை அவள் அத்தை கூட்டி சென்று விட்டாள்..

அமெரிக்காவில் இருந்து நேராக சென்னை வந்தான் மதன்….  கௌசல்யாவின் வீட்டிற்கு சென்றான்….

அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் மூலம் ஆக்சிடெண்ட் ஆனதை தெரிந்துகொண்டு ஜீவராணி ஹாஸ்பிடலுக்கு சென்றான்….

வந்த மூன்றாவது நாளிலேயே டிஸ்சார்ஜ் செய்து கொண்டு அவர்கள் சென்று விட்டார் என்ற செய்தியை அறிந்தான்அதற்கு மேல் அவனுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை…. மும்பைக்கு அன்றிரவே செல்லவேண்டிய கட்டாயம்….

அதன் பிறகு ஆறு மாதங்களாக கௌசல்யாவை பற்றி தெரிந்து கொள்வதற்கான அவனின் முயற்சிகள் யாவும் தோற்றுப்போனது

இன்று தோசையின் நெய் மணம் அவளின் வாசனையையும் சேர்த்தே ஞாபகப்படுத்தியது..

ஆறு மாதங்களாக அவள் வீட்டிற்கு வந்தபோது நடந்த நிகழ்வுதான் அவனை பாடாய் படுத்திக் கொண்டிருந்தது….

அவனின் அவஸ்தையை வார்த்தைகளால் சொல்ல முடியாது….

கதவைப் பூட்டிவிட்டு ஆபீஸ் கிளம்பும்போது எதிர்வீட்டில் ஒருவர் புதிதாக குடி வந்ததை அறிந்தான்..

வயதான பெண்மணி அவனை பார்த்து சிரித்தாள்

'நீங்க தமிழா'

ஆமாம்மா நான் தமிழ் தான் நீங்க புதுசா குடிவந்து இருக்கீங்களா'

பாட்டி பாட்டி'என்று அழைத்துக் கொண்டே ஒரு இளம்பெண் வெளியில் வந்தாள்

அவனைப் பார்த்ததும் அதிர்ச்சியானாள்…’பாட்டி உங்களை அம்மா கூப்புடுறாங்க' என்று சொல்லி பாட்டியை உள்ளே அனுப்பி விட்டுநீங்க மதன் தானே' என்றாள் அவள்..

ஆமாம் என்பது போல் தலையசைத்தான்

கௌசல்யாவை அப்படியே ஏன் விட்டுட்டீங்கநீங்க ரொம்ப நல்லவர் னு நம்பி இருந்தாஏன் இப்படி பண்ணீங்க'

ஆறு மாதமாக நான் அவளை தான் தேடிக் கொண்டிருக்கிறேன்என்ன ஆச்சு அவளுக்கு எங்க இருக்காஎன்ற ஆனந்த அதிர்ச்சியாக கேட்டான்

அவளுக்கு காயங்கள் தான் ஆறி இருக்கிறதுஆனால் மனம் ஏதோ பெரிய அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறதுஅது எப்போது சரியாகும் என்று தெரியாது அவள் முன்பு போல் இயல்பாக இருக்க மாட்டாள்'என்பதை அவர்களின் குடும்ப மருத்துவர் சொல்லி தான் தெரிந்து கொண்டாள் அவள் அத்தை

அவளின் தம்பியும் பிளஸ் டூ எழுதிவிட்டு

ரிசல்ட்டுக்காக காத்திருந்தால் அவர்கள் வீடு காலி செய்து கிராமத்திற்கே சென்றுவிட்டனர்என்ற விவரத்தை அவள் கூறினாள்….

உடனே புறப்பட்டான் அவளைக்காண அவள் தோழி கொடுத்த முகவரியை பெற்று கொண்டு….

அம்மா நான் மும்பையில் இருந்து வரேன்கௌசல்யா எப்படி இருக்கா?

வா ராஜா வாஉன்னை எப்படி கண்டுபிடிக்க போறேன் னு கவலை பட்டுட்டு இருந்தேன்…. இந்த ஆறு மாசத்தில் உன் பேரை மட்டும் தான் அவ சொல்லி இருக்கா வேற எதையும் பேசினது இல்ல…. உன்ன பாத்தா குணமடைய சந்தர்ப்பம் இருக்குனு டாக்டர் சொல்லியிருந்தார்போ ராஜா போய் பாரு…. அந்த ரூம்ல தான் இருக்கா'.

இன்னதென்று சொல்ல முடியாத உணர்வோடு அந்த ரூமிற்கு சென்றான்….

ஜன்னலைப் பிடித்தபடி பின்புறமாக அவள் நின்று கொண்டிருந்தாள்….

எதையும் யோசிக்காமல் ஓடிச்சென்று அவளை அணைத்து 'ராசாத்தி' என்று அழைத்தாள்….

ராசாத்தி என்று அவளின் அப்பா மட்டும் தான் அவளை அழைப்பார் என்றும் அது அவளுக்கு ரொம்ப பிடிக்கும் என்பதையும் சொல்லி இருக்கிறாள்….

அந்த வார்த்தையும் அவன் ஸ்பரிசமும் அவனின் வாசனையும் செத்து போன அவளின் உணர்வை மீண்டும் உயிர்ப்பிக்க செய்தது….

'மதன் மதன் வந்துட்டயா என்று கேட்டபடியே அவன் இதழில் தன் இதழ் பதித்தாள்….முத்த மழை பொழிந்தாள்'…

அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.. நினைவுகளை இழந்து நடைப்பிணமாய் நீயும் நினைவுகளோடு நடைப்பிணமாய் நானும் வாழ்ந்து இருக்கிறோமடி என்று நினைத்து கொண்டான்

அவர்களின் வாழ்வில் மறுபடியும் நறுமணம் வீசத் தொடங்கியது..

#நறுமணம்: உணர்வுகளும் உயிர் பெறும் ஒரு சில நறுமணத்தில்..

-சுகமதி

 

24.K2K00093

 நறுமணம்

   நிலா என்ற அன்னையின் குரல் காதில் விழாத அளவிற்கு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து இருந்தாள் வெண்ணிலா... என்னடி கூப்பிட கூப்பிட காதில் விழாத மாதிரி நிக்கிர வா வந்து சாப்பிடு என்ற தாயின் அதட்டலில் ஒருவாறு சுய நினைவிற்கு வந்தாள்... என்னடி அப்படி ஒரு யோசனை என கேட்ட அம்மாவிடம் ஏதோ சொல்ல வாயெடுத்த போது தம்பி கண்ணன் உள்ளே வரும் போதே அம்மா என் புது பர்பியூம் எப்படி இருக்கு என கேட்டு கொண்டே வந்தான்... நிலாவின் மனதில் மறுபடியும் ஏதோ எண்ணங்கள் பெறுக்கெடுக்க வத்தல் குழம்பு பால் சோறு ஆகியது... அதையும் உண்ண மனமின்றி அங்கிருந்து எழும்பி சென்று தோட்டத்தில் நுளைந்தாள்... எங்கோ பறந்த மனதை கட்டி இழுக்க முற்ப்பட்டு...  தென்றலின் ஆசை தீண்டலில் மணம் கமழ்ந்து கர்வமாய் தலை அசைத்து கொண்டிருந்த ஜாதி மல்லியிடம் பார்வையை  திருப்பி பெருமூச்சு விட்டாள்... அருகே சென்றவள் அதனை ஆசையாய் பார்த்து தன்னையும் மறந்து... அதனை நுகர முயன்ற போதே தனக்கு நுகர்தல் திறன் இல்லை (ANOSMIA) என்பதை உணர்ந்தவளாய் ஏக்கத்தில் அங்கிருந்து நகர்ந்தாள்... எப்போதும் கல்லூரி முடிந்ததும் தந்தைக்கு துணையாக தமக்கு சொந்தமான பூக்கடையில் நேரத்தை கழிப்பது அவளின் வழக்கம்... அன்றும்  நாவல் ஒன்றை புரட்டி கொண்டிருக்கையில் தனது வாழ்வில் ஒரு முறையாவது இதை உணர வேண்டும் என பட்டியலிட்டு இருந்த நோட்டு புத்தகத்தை எடுத்து வாசிக்கலானாள்

1. பால் மறவா சேய்க்கு கிடைக்கும் தாயின் வாசனை

2. படபடக்கும் பட்டாம் பூச்சிக்கு பிடித்த மலரின் மகரந்த வாசனை

3. கொட்டி தீர்க்கும் மழையின் மண் வாசனை

4. கோடை காலத்து கொப்பரை தேங்காய் வாசனை

5. அம்மா ஆசையாய் வைத்து விட்ட மருதாணி வாசனை

6. தன்னை பார்க்கும் போதெல்லாம் பூக்க மறுக்கும் தோட்டத்து ரோஜா வாசனை

7. நூலகத்தின் ஏதோ மூலையில் அகப்ட்ட எனக்கு பிரியமான இலக்கிய நூலின் வாசனை.. என நீண்ட பட்டியலில் கண்ணனின் புது பர்பியூம் வாசனையும் இடம்பிடிக்க இறுகி போய் அமர்ந்திருந்தாள்... அப்போது அவளின் கைப்பையில் செல் போன் சிணுங்கியது... மறுமுனையில் உயிருக்கு போராடும் குழந்தையின் தாய்... அவசரமாக (o -ve) இரத்தம் வேண்டுமென்ற வேண்டுகோளை சொல்லி முடிக்க முடியாத துக்கத்தில் மருக உடனே மருத்துவமனைக்கு விரைந்தாள் நிலா... இரத்தம் கொடுத்து முடிந்த பிறகு அந்த குழந்தையின் தாயின் சிரிப்பில் தன் துக்கம் அனைத்தும் மறந்து நிலவொழியாய் மிளிர்ந்தாள் வெண்ணிலா...

நீதி: எவ்வளோ குறைகள் இருப்பினும் மற்றவருக்கு எதிர்ப்பார்ப்பின்றி செய்யப்படும் உதவி அந்த நல்ல மனதின் நறுமணத்தை பரைசாற்றும்

- Tresa Johnson

 

 

25.K2k 00099

 மனதின் மணம்

"முதல் வணக்கம் முதல் வணக்கம் "

சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் இனிய கம்பிர குரல் நந்தினியை மெதுவாக எழுப்பியது.  கண் திறக்கும் முன்னரே மூக்கில் சாம்பிராணி வாசம், பூக்களின் நறுமணம் கமகமவென வீச   நந்தினி சந்தோசமாக எழுந்தாள். எதோ விசேஷம் போல அம்மா நைவேத்தியம் சக்கரை பொங்கல் மணம் வேறு மூக்கை வருடியது. நன்றாக மூச்சை இழுத்து விட்டு எல்லா வாசனையையும் நெஞ்சில் நெரப்பிக்கொண்டாள்.  அப்பாடி இன்றய பொழுது நறுமணத்துடன் ஆரம்பம்.  இன்று நல்லதே நடக்கும் என்ற எண்ணத்துடன் லாலா என்று பாடிக்கொன்டே குளிக்க சென்றாள் ஆனால் இன்று அவளை மாற்றப்போகும் நிகழ்வு நடைபெறும் என்று இப்போது அவளுக்கு தெரியாது.

நந்தினி 21 வயது நிரம்பிய இளம் பெண்   வீட்டுக்கு செல்ல பெண் படித்து முடிந்து கல்யாணம் வரை வேலைக்கு செல்லலாம் என்ற முடிவில் ஓரு தனியார் கம்பெனியில் வேலை பார்க்கும் பெண். நந்தினி ஓரு ஸ்பெஷல கேரக்டர்.  சின்ன வயதில் இருந்து நறுமணங்கள் மேல் அலாதி பிரியம். ஓரு அசாத்திய ஈடுபாடு எல்லோருக்கும் நறுமணம் வாசனை பிடிக்கும் ஆனால் நந்தினிக்கு அது மட்டும்தான் பிடிக்கும் வாசனை முகராமல் இருக்க முடியாது கொஞ்சம் வாசனை மாறினால் கூட சகிக்க இயலாத குணம் வாசனை இல்லாதோரை சற்று வாசனை மங்கி இருப்போரை பிடிக்கவும் பிடிக்காது.  அது அம்மாவாக இருந்தாலும்.

இப்போது மட்டுமல்ல சின்ன வயதில் இருந்தே இப்படித்தான்.  சாப்பாடு கூட முதலில் டேஸ்ட் பார்ப்பது என்பது வாசனை பார்த்துதான் வாசனை நல்லா இருந்தால்தான்சாப்படடை தொடுவாள்.  நீ ஓரு வாசனை பிரீக், வாசனை மேனியா என்று சுற்றம் நட்பு கேலி செய்யும் அளவுக்கு நறுமணம் பைத்தியம். காலேஜ் படிக்கும்போது கூட ப்ராஜெக்ட் பார்ட்னர் தலையில் வேப்பெண்ணை வாசனை வந்ததால் பிடிவாதமாக அவளை மாற்றி வேறு பார்ட்னர் தேடும் அளவுக்கு ஓரு பிடிவாதம்.  அம்மாவுக்கு இந்த குணம் கொஞ்சம் கவலை அளித்தாலும் அப்பா செல்லம் மற்றபடி ஓரு குறை சொல்ல முடியாத குணம் படிப்பு இப்போது நல்ல வேலை என graph உயரத்தில் போனதால் அம்மாவுக்கும் அதை திருத்த முடியவில்லை. பெரிதாக கவலை படவும் இல்லை.

ஆயிற்று ஓரு வழியாக நந்தினி அலுவலகம் கிளம்பி விட்டாள்.  இன்று வெள்ளை நிற புடவையில் சிறு பூக்கள் எம்பிராய்டரி அதனால் மல்லிகை பூ வாசனை திரவியம் புடவையில் தலையிலும் மல்லி பூ.  நந்தினி துணிகளில் போடும் பிரகன்ஸ் வரும் முன்னரே துணி கடைசி அலசலில் கொஞ்சம் வாசனை சேர்ப்பாள் மற்றும் பிளார் டஸ்ட் வேறு எனவே கமகமக்கும்.

பஸ் ஸ்டாண்ட் வரை அப்பா கொண்டு விடுவார் அப்புறம் ஓரு லேடீஸ் ஸ்பெஷல் பஸ், அதில் நந்தினி மட்டுமல்ல நிறைய ரெகுலர் பயணிகள் குறிப்பாக மூன்று பேர் ஒன்று நந்தினியின் பெட் இவளை போல நேர்த்தியாக உடை அணிந்து வாசனையாக ஓரு பெண் இவளை விட சற்று மூப்பு ஆனால் யாரிடமும் ஓரு சிரிப்பு கூட இல்லாமல் கண்ணை மூடியபடி வரும் கர்வம் பார்வையில் தெரியும்.

நந்தினி சிரித்தாலும் நோ ரெஸ்பான்ஸ்.  ஓரு முறை அவள் தவறவிட்ட புக்கை நந்தினி எடுத்து கொடுத்தபோது கூட ஓரு சிரிப்பு ஓரு நன்றி கூட இல்லை.  இருந்தாலும் அவள் வாசனையாக இருப்பதால் நந்தினிக்கு பிடிக்கும்.  ஓரு மானசீக ஹீரோயின் ஆக நந்தினிக்கு அந்த பெண்.

அடுத்தது இரண்டு கேரக்டர் அம்மா பெண் ஆக இருக்கும் சுத்தமான சுமார் டிரஸ் ஆனால் தலையில் நெறய என்னை அதன் வாசம் நந்தினிக்கு பிடிக்கவில்லை

பழைய அழுக்கு பை வேறு அம்மா டிக்கெட் காசு இடுப்பு சுருக்கு பையில் இருந்து எடுத்து கொடுக்கும் வெற்றிலை புகையிலை வேறு.  நந்தினிக்கு கடுப்பாய் வரும் மேலும் அம்மா நல்ல உழைப்பாளி அதன் உழைப்பின் வியர்வை வாடையும் அவர்கள் பையின் வாடை எதுவும் நந்தினிக்கு பிடிக்காது.  இத்தனைக்கும் அவர்கள் அந்த பஸ்ஸில் எல்லோரோடும் பேசுவதோடு எல்லோருக்கும் டிக்கெட் வாங்க உதவி செய்வதோடு கண்டக்டரிடமும் நலம் விசாரிக்கும் பண்பு நல்ல மனிதமாக இருந்தாலும் நறுமணம் காரணமாக கர்வம் பெண்ணைத்தான் நந்தினிக்கு பிடிக்கும்.

ஆயிற்று இவர்கள் நால்வரும் இறங்கும் ஸ்டாப் முதலில் அம்மா பெண் இறங்க அடுத்து வாசனை பெண் அடுத்து நந்தினி.  நந்தினி அவளின் புது வாசனையை ரசித்தபடி இறங்கியதில் காலை படியில் வைக்காமல் தடுமாறினாள்; பேருந்து உடன் எடுத்து விட்டதால், பேலன்ஸ் தவறியதில் கிழே விழுந்தாள்.  விழுந்த இடம் ஒரே சகதி கையை ஊன்றிய இடத்தில் மாட்டு சாணம், நந்தினிக்கு ஒரே அழுகை முதலில் கை சாணியை அருவருப்பாக பார்த்து உதற அது வாசனை பெண் மேலே தெறித்தது, நந்தினிக்கு நல்ல காயம் காலை விரல் நகம் பெயர்ந்து ரத்தம்.

இதை எல்லாம் பொருட்படுத்தாமல் வாசனை பெண் தன் மீது சாணம் தெறித்து விட்டதாக நந்தினியை திட்டி தீர்த்தாள், நந்தினிக்கு அவமானம் ஓரு புறம் வலி பேட் ஸ்மெல் வேறு. எழும்ப முயற்சி செய்தும் முடியவில்லை.  வாசனை பெண் தீட்டுவதில் குறியாக இருந்தால் ஒழிய ஓரு உதவி செய்ய மணம் இல்லை பஸ் சற்று தள்ளி நின்று இறக்கி விட்டு போய் விட்டது பக்கத்தில் இருந்த சில மனிதர்களும் உதவும் எண்ணம் இல்லை.

அப்போது "

அடடா கண்ணு பார்த்து இறங்க கூடாதா

வள்ளியம்மை என்ன பாக்கிற. அக்காவுக்கு ஓரு கை கொடு.  இரு இரு முதலில் சாணியை துடைப்போம் ", என்று கூறியவாறு வந்த நந்தினி வெறுக்கும் அந்த அம்மாவும் பெண்ணும் அவள் அருகே வந்து அவளை கை கொடுத்து தூக்கி கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் தன் கையில் இருந்த துணியால் சாணியை வழித்து எடுத்து விட்டு தன் குடி தண்ணீர் பாட்டில் தண்ணியால் நன்றாக கழுவினார்கள்.  நந்தினி புடவையை சரி செய்த சின்னவள் "

அம்மா அக்கா காலில் ரத்தம் வருகிறது " என்று பதற பெரியவள் சற்றும் தயங்காமல் தன் முத்தானை சிறிது கிழித்து ரத்தத்தை துடைத்து கட்டு போட்டாள்.

இதனிடையே கத்தி கொண்டிருந்த வாசனை பெண்ணை பார்த்து

" எம்மா நீயும் பெண்தானே, இந்த புள்ளை வேணுமின்னா பண்ணுச்சி பாவம் அதுவே வலியால் துடிக்குது.  கொஞ்சம் நாத்தம் பட்டால் என்ன துவைச்சால் போயிடும்.

மனுஷ வாசனை உசத்தி இல்லையா போம்மா போய் கொஞ்சம் தண்ணீர் ஊத்தி கழுவு சரியாயிடும் ", என்று அவளையும் சமாதானப்படுத்திகொன்டே நந்தினிக்கு பணிவிடை செய்தார்கள். அவள் நடக்க சின்ன பெண் கால்களை நீவி விட பெரியவள் கைத்தாங்கலாக பற்றி உதவினாள்.

நந்தினிக்கு அவள் பேச்சு செவிகளில் அறைந்தது போல இருந்தது. மனித வாசனை, மனங்களின் வாசனை புத்தருக்கு போதி மரத்தடியில் கிடைத்த அறிவு நந்தினிக்கு அவள் வெறுத்த பெண்ணால் கிடைத்தது.  கரங்களை கூப்பிய நந்தினியின் கையை தடுத்த பெரியவள்.

" உனக்கு என் பொண்ணு வயசு நீயும் என் பொண்ணு மாதிரிதான் தாயீ சும்மா சின்ன விஷயம் பெரிசாக்காத வா கிட்டத்தான் நான் வேலை செய்யற அபார்ட்மெண்ட் வந்து நல்லா கழுவிகிட்டு அப்புறம் போகலாம் ", என்றவாறு நந்தினியின் பையை சின்னவள் கையில் கொடுத்து விட்டு நந்தினியை கைத்தாங்கலாக அழைத்து சென்றாள். உலகெங்கும் தேடினாலும் கிடைக்காத ஓரு அபூர்வ நறுமணம் நந்தினிக்கு இப்போது அவர்கள் மீது வீசுவது தெரிந்தது.

மனதின் வாசனை நந்தினிக்கு புரிந்தது,

கருத்து

மனித நேயம், மனிதம், அன்பு புற வாசனைகளை காட்டிலும் மேலானது.

மனிதம் மதியுங்கள் அவர்களின் நறுமணங்களை அல்ல.

V.  Krishnakumari

Medavakkam, Chennai

 

 

 

 

 

 

 

 

 

                                                                                                


Comments

Popular posts from this blog

Father

சுய விருப்ப கதைகள்

LGBTQ & DISABILITY