நன்றி செலுத்துதல்

1.K2K - 00002

 நன்றி செலுத்துதல்

கற்பனை கதை:

தீப்தி பெரியப்பவை பார்க்க ஓடிவந்து அவரிடம் எனக்கு நாளைக்கு பேச்சு போட்டி ஆனால் எனக்கு என்ன பேசுறதுனு தெரியலைப்பா எனக்கும் என் தோழி இலக்கியாக்கும் இதனால் சண்டை வேற வந்துவிட்டது என மூச்சிரைக்க சொன்னாள். எதனால் என விவரமாக கேட்டறிந்தார் அவளுடைய பெரியப்பா கணேசன். தீப்தி அவரிடம் "நான் நன்றி தலைப்பு பேசுகிறேன்.அவளிடம் மன்னிப்பு தலைப்பு பற்றி பேசு எனக்கூறினேன் இல்லை முடியவே முடியாது சொல்லிவிட்டால் பெரியப்பா" கணேசன் அவளிடம் நன்றி மற்றும் மன்னிப்பு ஒரு அற்புதமான மந்திரம் இவ்விரண்டு வார்த்தைகளும் அழகானவை  இதில் அன்பு,இரக்கம்,பணிவு (மரியாதை) ஆகியவற்றை வெளிப்படுத்தும். "ஒருவர் உதவியின் பயனை அறிந்து நம்மளுடைய கஷ்டக் காலத்தில் கடுகளவு உதவியை செய்தாலும் அந்த நன்றியை ஒரு போதும் மறக்காமல் அதை நாம் பெரிய உதவியாக கருத வேண்டும் அது தான் மனிதத்தன்மை". இதிலிருந்து உனக்கு என்ன தெரிகின்றது கணேசன் கேட்க உடனே தீப்தி தெய்வப் புலவரின் திருவாக்கை எடுத்துரைத்தாள்

 " தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

   கொள்வர் பயன்தெரி வார்." என்று உரக்க சொல்ல அவளுடைய அப்பா எழுந்து விட்டார் நாளைக்கு பரீட்சையா என தீப்தியிடம் கேட்டார் இல்லை அப்பா பேச்சு போட்டிக்காக பெரியப்பா சொல்லிகொடுக்கிறாங்க என்று கூறினால். "சரி கண்ணு உன் பேச்சு திறமையில் என்னையும் சேர்த்து எழுப்பிவிட்டாய் " என்று கிண்டலாக சொல்லி வெளியே கிளம்பிட்டார். "சபாஷ் குட்டிமா" என கணேசன் பாராட்ட தீப்தி அதற்கு "மன்னிப்பு" தலைப்புக்கு பேசினால் "நன்றி" சொல்லும் போது எவ்ளோ சந்தோசமா இருக்கு ஆனால் "நம் மக்கள் ஏன் இதை அவ்வளவா உபயோகிப்பது இல்லை என்பது எனக்கு புரியல. நன்றி/மன்னிப்பு சொல்ல ரொம்ப தயக்கம் காட்டுவது ஏன்னு தெரியல. சம்பிராதாயம் வார்த்தைகள் மிக முக்கியம். இவையே உறவை வளர்க்க உதவும். இவற்றை உபயோகிக்காததால் நல்ல நட்பை/உறவை இழக்க நேரலாம்.

"பிறர் தவறை நாம் மன்னித்தால் நம் தவறை கடவுள் மன்னிப்பார்  என்று பல முறை பாடம் பயின்றாலும் அதை நடைமுறையில் செயல்படுதுவதில்லை " என சொல்லி முடித்ததும் குடும்பமே தீப்தியை பாராட்டுனார்கள்.அடுத்த நாள்  பள்ளிக்கூடத்திற்கு சென்றால் அங்கு அவள் தோழி அழுதுக்கிட்டு இருந்தால் "ஏன் அழுகிற இலக்கி" என விசாரித்தால் அதற்கு இலக்கி " வீட்டில் அம்மாவும் அப்பாவும் சண்டை போட்டுக்கொண்டதால் பேச்சு போட்டிக்கு தயார் செய்யவில்லை எனத் தேம்பி தேம்பி அழுதாள். அதைப் பார்த்த தீப்தி "நீ அழாதே என்று தோழியின் கண்ணீரை துடைத்துவிட்டு இன்னும்  ஒரு மணி நேரம் இருக்கிறது என்று ஆறுதல்   கூறி அவளுடைய பெரியப்பா சொல்லித்தந்ததையும் திருவள்ளுவரின் திருவாக்கையும் சேர்த்து கற்றுக்கொடுத்தாள். சிறுது நேரத்திலேயே தீப்தியின் பெயர் அழைக்கப்பட்டது மன்னிப்பு தலைப்பில் பேசி முடித்ததும் .கைதட்டல் வந்தது.பிறகு  இலக்கியா பெயர் அழைக்கப்பட்டது அவள் மேடை ஏறியதும் தீப்தியை பார்த்தால்  தைரியமா பேசு என கண்ணடித்தாள்" இலக்கி கடைசியில் நேற்று  நடந்ததையும் ,இத்தலைப்பு என் தோழி தீப்தி தான் காலை சொல்லித் தந்ததாகவும் அவளுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன் என்று சொன்னதும் அங்க இருந்த தீப்தி மைக் எடுத்து நேற்று நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பும் கேட்டுக்கொண்டாள். அதற்கு இலக்கி பரவாயில்லை என கூறி  அவர்களின் ஒற்றுமைக்கும் சேர்த்து தலைமையாசிரியர் இருவரையும் பாராட்டி பரிசை வழங்கினார்.  .                                    

கருத்து: நன்றி/மன்னிப்பு சொன்னால் உங்கள் கெளரவம் குறையாது உங்களை சுற்றியிருக்கும் உறவுகள் தான் குறையும். உங்களுடைய உறவுகள் மேம்படுத்த வேண்டுமானால் அற்புதமான வார்த்தைகளை சமூகத்திலும் பயன்படுத்துங்கள் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துங்கள்..!! நம்மில் இருந்து தொடங்குவோம்..!! விரைவில் நம் சமூகமும் மாறும்..!!

--லக்ஷ்மி பிரியா

 

 

2.K2K -00013

 நன்றி செலுத்துதல்

சேதியைக் கேட்டதும் ரங்கமணிக்கு ஒரு வினாடி மூச்சே நின்றுவிட்டது. தன்னை ஒரு முறை கிள்ளிப் பார்த்துக்கொண்டான் வலித்தது. எப்படி யோசித்தாலும் அவளால் இந்தச் செய்தியை நம்பமுடியவில்லை.

ரங்கமணி திருமணமாகி முதன்முறையாக புகுந்த வீட்டிற்குச் சென்றபோது அவளைப் பார்த்து முகம் நிறைந்த சிறப்புடன் அவளுடைய நாத்தனாரின் மகன் குமார் நின்றிருந்தான் மற்ற எல்லோரையும் விட எதோ அன்றே ரங்கமணிக்கு அவன் மீது ஓர் இனந் தெரியாத பாசம் உண்டாயிற்று வாலிப வயதில் தன் தந்தையை இழந்த ரங்கமணியை அவருடைய அக்காவும் மாமாவும் தான் தங்கள் சொந்தப்பிள்ளையைப் போல் நினைத்து பழகியிருந்தார்.

காலங்கள் உருண்டோடி ரங்கமணியின் மகளுக்கு திருமணமும் நிச்சியக்கப்பட்டன, அப்பொழுது ரங்கமணியின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்தார் அங்கு அவருடைய அலுவகத்தில் சில சிக்கலால் ரங்கமணியையே எல்லா ஏற்பாடுகளையும் செய்ய சொல்லிருந்தார். நிச்சியத்தார்தம் நடைபெற இரண்டு நாட்கள் முன்னர் தான் அவர் வந்தார் அலுவகத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சனையை மனைவியைத் தவிர வேறு யாரிடம் சொல்லவில்லை.

குறிப்பிட்ட தேதியில் ரங்கமணியின் மகளுக்கு நிச்சியதார்தம் சுபமாக நடந்து முடிந்தது. அனைவரும் மண்டபத்தில் இருந்து சென்றுவிட்டார்கள், இறுதியாக மண்டபத்தின் பிறக் கணக்குகளைச் செட்டில் செய்வதற்க்காக ரங்கமணி மட்டும் இருந்தாள். அவருடன் குமாரும் இருந்தான் அப்பொழுது ரங்கமணிக்கு கையில் இருந்த பணம் சிறிது குறைவாக இருந்தலால் அவள் பயந்துவிட்டாள். என்ன செய்வது என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, குமார் வந்து அவளை ஏதும் கேட்காமல், தானாகவே பணத்தை செலுத்தினான். அவ்வேளையில் ரங்கமணிக்கு "மனித தெய்வமாகவே தோன்றினான். தன் வாழ்நாள் முழுவதும் இந்த நிகழ்ச்சியினை ஒரு போதும் மறக்க முடியாது என்பதை உணர்ந்தாள்.

இன்று அந்த "மனித தெய்வம்" உயிரோடு இல்லை அவன் விட்டுச் சென்ற குடும்பத்திற்கு தன்னால் இயன்ற உதவிச் செய்யவேண்டும் என்று எடுத்த முடிவு பதிலுக்கு திருப்பி செய்வது என்று எண்ணத்தினால் அல்ல திருவள்ளுவர் கூறியது போல்,              

               "காலத்தி னால் செய்த நன்றி சிறிதெனினும்

               ஞாலத்தின் மாணப் பெரிது" 

என்பதைப் போல், தக்க தருணத்தில் எதையும் எதிர்பார்க்காமல் செய்த அவன் (குமார்) செய்த உதவி தான் இறுதி வரை தன் உள்ளத்தில் "பசுமையாக" வைத்திருப்பதே ரங்கமணி அவனுக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாகும்!!!

--ரமா கோவிந்தராஜன்

 

 

3.K2K00038

நன்றி செலுத்துதல்!

க்குவாகுவா…..கூக்……கூகுழந்தை பிறந்து விட்டது.

இந்தாங்கம்மா…! உங்களுக்கு பேத்தி பிறந்திருக்கிறாள்.”

ஆசையாக வாங்கி   முத்தமிடுகிறார் வள்ளியம்மாள்.

முதல் முத்தம் முதல் ஸ்பரிசம் பாட்டியுடையது தான் அந்தக் குழந்தைக்கு.

பிள்ளையை கவனமா பார்த்துக்கோ லட்சுமிஉள்ளம் நெகிழ்ந்து மகளை அவள் வீட்டிற்கு ஐந்து மாதம் கழித்து அனுப்புகிறார் வள்ளியம்மா.

லட்சுமி இருப்பது சின்ன கிராமம், மின்சார விளக்குகள் கூட அதிகம் இல்லாத டாய்லெட் வசதி இல்லாத சின்ன வீடு.

லட்சுமியின் கணவர் விவசாயி. சொல்லிக் கொள்ளும் படியான நிரந்தர வருமானம் கிடையாது, அதனால் அங்கே லட்சுமியால் பிள்ளையை வளர்க்க முடியவில்லை; இதே காரணத்திற்காகத் தான் முதலில் பிறந்த பையனையும் அம்மாவிடமே விட்டிருந்தாள், இப்போது இவளையும் அம்மாவிடமே விட்டு வந்தாள்.

வள்ளியம்மாவுக்கு கல்யாணம் ஆகாத பெண்கள் மூன்று பேர் பையன் ஒருவன் என ஏற்கனவே வீட்டில் ஆறு பேர், அவர்களோடு லட்சுமியின் பிள்ளைகளையும் வளர்த்தார், ஒரு நாள் கூட பிள்ளைகளை சுமையாக நினைத்ததில்லை.

பிள்ளைகள் இருவரும் வள்ளியை அம்மா என்றே அழைத்தார்கள், அந்த அளவிற்கு தன் பிள்ளையாகவே வளர்த்தார் அவர்களை; அதிலும் அந்தப் பெண் பிள்ளையிடம்(கலா) வள்ளியும் வள்ளியிடம் கலாவும் அதிக பாசம் வைத்திருந்தனர்.

தன் பிள்ளைகளுக்கு எடுப்பது போலவே துணிகளை தன் பேத்தி கலாவுக்கும் எடுப்பார் வள்ளி, யாரும் ஒரு வார்த்தை கலாவை திட்டவோ அடிக்கவோ விட மாட்டார், கலாவின் அண்ணன் சண்டை போட்டால் கூட அவனைக் கண்டிப்பார்.

மார்க்கெட் ரேசன் எங்க போனாலும் பாட்டிக்கு பேத்தி தான் துணை, அப்படிப் போகும் சமயத்தில் தனியாக அவளுக்கு மட்டும் தின்பண்டம் வாங்கித் தருவார்.

கதை சொல்லி தன் அருகிலேயே படுக்க வைத்துக் கொள்வார்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தாள் கலா.

பெரியவளானாள்.

ஏற்கனவே இரண்டு கல்யாணம் ஆகாத பிள்ளைகள் வீட்டிலிருந்ததால் கலாவும் இருந்தால் சரிவராது என்று அவள் அப்பா அவளை கிராமத்திற்கே கூட்டிச் செல்ல விரும்பினார்.

படிப்பை நிறுத்திடாதீங்க, கலா நல்லா படிக்கிறவள் செலவுக்கு நான் பணம் தர்றேன்னு சொல்லி அரை மனதாக அனுப்பி வைத்தார் வள்ளி.

விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்கு வந்து விடுவாள்.

பாட்டி வீடு கலாவிற்கு சொர்க்கம் போல, ஏன்னாபாட்டியின் அக்கறை பாசம் கவனிப்பு.

விடுதியில் தங்கிப் படிக்கும் போது பாட்டிக்கு அடிக்கடி கடிதம் எழுதுவாள் கலா.

கல்லூரி ஆண்டு விழாவிற்கு பாட்டியை எதிர்பார்த்து காத்திருந்தாள், பாட்டிக்கு காய்ச்சல் அதனால் வரவில்லை என்று சித்திகள் சொன்னதும் இவளுக்கு பெரும் வருத்தமாயிற்று.

எனக்கு உடம்புக்கு முடியலை கலா, ஷஷ்டி கவசம் பாடேன்னு பாட்டி சொன்னால்பாட்டிக்கு எதுவும் ஆயிடுமோன்னு அழுவாள்.

கலா கல்யாணம் ஆகி வெளி மாநிலத்திற்கு போகிறாள் என்றதும் வள்ளிப் பாட்டியால் தாங்க முடியவில்லை, அழுது கொண்டே வழியனுப்பினார்.

எத்தனையோ காலங்களைக் கஷ்டங்களைக் கடந்து வள்ளிப் பாட்டி வயோதிகத்தின் பிடியில் தவித்தார், அதனைத் தாங்க முடியாத கலா அவரை உயிருக்கு உயிராக நேசித்த கலா அவர் விரைவில் வலி இல்லாமல் வேதனை இல்லாமல் இறந்து விட வேண்டுமென்று பிரார்த்தனை செய்தாள்.

அவர் இறந்த செய்தி வந்த போது….” அம்மா…! எனக் கதறி அழுதாள் கலா, “என் மீது அன்பும் அக்கறையும் பிரியமும் வைத்திருந்த உங்களுக்கு நான் செய்த நன்றி நீங்கள் சீக்கிரம் செத்துவிட வேண்டுமென ஆண்டவனிடம் வேண்டியது தான். “

என்னை மன்னித்து விடுங்கள் பாட்டி, உங்களின் வலியும் வேதனையும் பார்த்து என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லைஎன்று அழுது துடித்தாள் கலா.

நீதி: நமக்கு உதவிய யாருக்கும் எப்போதும் அவர்களுக்கு நன்மை தருவதான நன்றியைச் செலுத்துவதே நம் கடன்.

-பூமாதேவி

 

 

4.K2K-00042

நன்றி செலுத்துதல்

அன்பு அன்று காலை 7 மணி சுமாருக்கு தன் வண்டியில் வேகமாக அலுவலகம் சென்று கொண்டிருந்தான். அந்த குறுகலான வளைவில் சென்று திரும்பும் போது எதிரே வந்த பெரிய பேருந்து ஒன்றில் தலையில் அடிபட்டு கோமா நிலைக்குச் சென்றான். பின் இரண்டு வாரங்களுக்கு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இயற்கை எய்தினான். அவன் குடும்பத்தில் எல்லோரும் வருத்தப்பட்டு அழுது தோய்ந்தனர்.

பின் அவன் உடல் மேலுலகம் சென்றது, அங்கே வானுலக சித்திர குப்தன் எமதர்மன் அமர்ந்து கொண்டு வாருங்கள் அன்பு உங்களை இந்த மேலுலகம் வரவேற்கிறது.  ஆனால் இங்கே உங்களுக்கு நரகம்தான் கிடைக்கும் என்றார்கள், அதற்கு நான் தான் எல்லோருக்கும் நல்லது தானே செய்தேன் பின் ஏன் எனக்கு நரகம் என்று சொல்கிறீர்கள், அதற்கு சித்திர குப்தன் நீ நல்லது செய்கிறேன் என்ற போர்வையில் எல்லோருக்கும் உதவி செய்தாய் மற்றும் எல்லா சாமிகளையும் கும்பிட்டாய், ஆனால் நீ உன் அப்பாவுக்கு / அம்மாவுக்கு கூட பிறந்தவர்களுக்கு என்ன செய்தாய்?

உன் மனைவி மக்களுக்கு தான் என்ன செய்தாய்?  அதற்காக நீ மக்களுக்கு நல்லது செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை நீ முதலில் உன் குடும்பத்திற்கு நல்லது செய். பின் அவர்களின் அனுமதியுடன் அவர்களுக்கு புரியவைத்து அனைவருக்கும் உதவி செய் அப்போது தான் உன் தானமும் தர்மமும் நிலைக்கும் என்று சொல்லி முடிக்கும் முன்பு திடுக்கென்று தூக்கத்தில் இருந்து எழுந்து கொண்டான் ...  அப்பாடா இது வெறும் கனவு  தானா ... ரொம்ப நல்லதா போச்சு இறைவா என்று தனக்குள்  சொல்லி கொண்டான்.

இந்த கனவை தன் குடும்பத்துடன் பகிர்ந்து கொண்டான் அந்த கனவுக்கும் அதில் வந்த அனைவருக்கும் நன்றி செலுத்திவிட்டு வாழ்நாள் முழுவதும் தன் குடும்பத்தையும் நன்றாக பார்த்துக் கொண்டு தானமும் தர்மமும் செய்துகொண்டு நீடூடி வாழ்ந்தான்.

 நெறி:  தானமும் தர்மமும் தனக்கு மிஞ்சிய பிறகு என்றாலும் தர்மம் செய்தால் அது நம் தலை காக்கும்.

- கணேசன் சண்முகவேல்

 

 

5.K2K00048

... நன்றி செலுத்துதல் ...

            மனிதர்களாகிய நாம் பிறக்கும் நொடியில் இருந்தே அனைவரிடத்திலும் நன்றிக்கடன் பட்டிருக்கின்றோம்., நன்றிக்கடன் தீர்க்கும் பொருட்டு இங்கு அனைவரும் வாழ்வினை இழந்து வாடி கொண்டு இருப்பதும் உண்டு, இதில் வாடி தவிப்போர் ஒருவரின் கதையினை காண்போம் ...

            ஒரு உயிர் உலகில் பிறப்பெடுத்தது, தனக்கு உயிர் கொடுத்த தாய் தந்தைக்கு, தன் உயிர் உள்ள வரை அவர்களின் அன்பிற்கும் நேசத்திர்க்கும் அடிப்பணிந்து வாழ்ந்து நன்றி செலுத்துவது, மனிதர்கள் ஆகிய நம் அனைவரின் கடமை.,

           பின்பு தனக்கு அன்றாடும் உணவலித்து சீராட்டி வளர்த்து ஆளாக்கிய தாய் தந்தையுடன், தனக்கு ஞானத்தை அள்ளி வழங்கும் குருவினையும் பணிந்து நன்றி செலுத்தும் வகையில், வருங்காலத்தில் நற்ச்சிந்தனைகள் கொண்டு வாழ்வினை வழிநடத்த வேண்டும்.,

          வேலைக்கு சென்று சம்பாதித்து குடும்பத்தினர் அனைவரையும் அரவணைத்து பாதுகாத்து அவர்கள் நமக்கு செய்த நன்மைகளுக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும்.,

          தனக்கு வேலை அளித்த அதிகாரிக்கும் மரியாதையுடன் நடந்து நன்றி செலுத்த வேண்டும்.,

         தனக்கென வாழ்க்கை அமைந்த பின் தன்னை நம்பி வந்தவள், தனக்கென வாழ்நாள் அனைத்தையும் அற்பணித்து அன்புடன் ஆதரவு அளிப்பவலின் நேசத்திர்க்கு அடிமையாகி, அரவணைத்து நன்றி செலுத்த வேண்டும் ...

           ஆனால் நானோ, உயிர் அளித்த தாய் தந்தையை தனித்து இருக்குமாறு ஒதுக்கி வெய்தேன், சீராட்டி வளர்த்த அன்பினை மதிக்காமல், வெருப்பினை பொழிந்து விரட்டிவிட்டேன்.,

           என் குருவை அவமதி்த்து அவதூறு வார்த்தைகளை மலையாக கூறி, அந்நாகரிகமாக நடந்து கொண்டேன்.,

          வேலை குடுத்த அதிகாரியினை எதிர்த்து பேசி, முதுகிர்க்கு பின்னால் திட்டி தீர்த்தேன்., தன் வாழ்வினை முழுவதுமாய் எனக்கென அற்பனித்தவள் நிலை அறியாமல் வேலை ஆள் போல் அடிமை படுத்தினேன் ...

             இப்போது எனக்கு 50 வயது ஆகிறது, நான் செய்த அனைத்தும் அதை விட பலமடங்கு அதிகமாக எனக்கு கிடைத்தது., எப்போதும் வாழ்வில் நாம் ஆற்றும் காரியங்களும், பிறர் நமக்கு ஆற்றும் காரியங்களும், மறந்து போக கூடாது, நாம் அனைத்திற்கும் அன்புடனும் ஆதரவுடனும் நன்றி செலுத்துதல் அவசியம் ஆனது, என்று நினைத்து மனம் வருந்தி இறந்தார் ....

கருத்து:  வாழ்வில் நன்றி செலுத்த மறந்தவன், கருணை இன்றி நற்கதி இன்றி செல்வான் முடிவில் ...

 

இப்படிக்கு;

சி. தெய்வாணி ஸ்ரீ.,

 

 

6.K2K-00053

நன்றி செலுத்துதல்

"தினம் தினம் கண்ணாடி முன்னே கண்கள்  மனசுக்கு எழுதும் கடிதங்கள் பல...

இதில் வார்த்தையாய் 'நன்றி'என எதை கூற?  என யோசித்துக் கொண்டே தனது விரல்கள் மீட்டும் வயலின் ஒலியில் கண்களை மூடி இசையில் லயித்தவாறே தனது எண்ணங்களை பின்னோக்கி எடுத்துச் சென்றாள் கீர்த்தனா..."

"எங்கே போனாலும் அம்மாவின் சேலையை பிடித்துக் கொண்டே உலாவிய நாட்கள்...பள்ளியில் சேர்ந்த பின்னே அம்மாவின் அந்த சேலை வாசனை கையோரம் மறைந்தது..."

"அப்பாவின் கை பிடித்தே நடந்த நாட்கள்...வயதுக்கு வந்த பின் கரைந்தது..."

" நீண்ட நாள் தோழியின் நட்பும்  அவளின் கல்யாண நாட்களில் கலைந்தது..."

"பல வேண்டுதல் வைத்து அடிக்கடி கும்பிட்ட கடவுள் ஏனோ இன்று பொம்மையாய் கிடந்திட..."

" எனக்குள் முளைத்த என் காதல்  என் பக்கம் இல்லாம போக..."

இப்படி யாருமே நிரந்தரமாய் இல்லாமல் கடந்து செல்ல இதில் யாருக்கு நான் நன்றி செலுத்த?

இப்படி யோசிக்க.. போன் கால் ஓசை அவளின் நீண்ட நேர வயலின் கீதத்தை அசால்டாக நிறுத்தியது..."

"ஹலோ கீர்த்தனா மேம்.... பிஸியா?ஏற்கெனவே சொன்னேனே எழுதிட்டிங்களா? யாருக்கு நன்றி சொல்ல போறிங்கனு?புத்தகத்தோட முதல் பக்கம் போடனும்... உங்க புத்தகத்தோட தலைப்பே அருமை மேம்... "மன ஒலி" அடிக்கடி சொல்லி பார்க்க தோனுது மேம்... என எடிட்டர் அகிலனின் வார்த்தை அலை மோத..."

"இதோ எழுதி மெயில் பண்றேன் சார்" என ஒற்றை வார்த்தையில் நிறுத்தினாள்..."

"மடியில் கிடந்த வயலினை ஒரு கையால் பற்றிக் கொண்டே எழுதலானாள்"

"யாருக்கு நன்றி செலுத்த இது மிகப் பெரிய கேள்வி...'

"இந்த நிரந்தரமற்ற உலகத்துல வாழ சாப்பாடு வேணும், உடுக்க உடை வேணும், தங்கிக்க வீடு,காசு பணம் வேணும்....

இதுல எதாச்சும் ஒன்னு கொரஞ்சா கூட கடனா வாங்கிக்கலாம் உதவியா பெறலாம்....

பட்... 

என்னை சுத்தி எதுவுமே நிரந்தரம் இல்லாத போது என் மனசு கொடுத்த தைரியத்த வேற யாரும் எனக்கு குடுக்கல....

என் நன்றி எல்லாம் என்ன பிரச்சனை வந்தாலும் எவ்வளவு கலங்கினாலும் அடுத்து என்ன செய்ய.... என தைரியமா யோசிக்க வைக்கிற என் மனசுக்கு தான் நான் நன்றி சொல்லனும்... இவ்வாறு வேகமாக எழுதி முடித்தாள்...

சில துளி கண்ணீர் மடியில் கிடந்த வயலினில் தெறிக்க....மன ஒலி பயணமானது"

நீதி: தைரியம் தர்ற மனச கொஞ்சம் தேடி கண்டு பிடிங்க... உங்களுக்குள்ளயும் இருக்கும்..

-பூங்கொடி

 

 

7.K2K00063

நன்றி செலுத்துதல்

      நன்றி இந்த வார்த்தையை உயிர்த்துடிப்பு தொடங்கிய நொடி முதல் உயிர்த் துடிப்பு அடங்கும் நொடிவரை கடவுள் முதல் தாய் தந்தை உற்றார் உறவினர் நண்பர்கள் சுற்றம் இயற்கை அனைத்திற்கும் கூறிக் கொண்டே இருக்க வேண்டும் அதிலும் மிகச்சிறிய நன்றியுணர்வை இதில் நான் குறிப்பிட்டுள்ளேன்.

தாரா அன்று பள்ளியில் தன் வகுப்பு குழந்தைகளுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தாள்.அப்போது காலை இடைவேளை வந்தது மாணவர்களை கழிவறைக்கு அனுப்பிவிட்டு அவர்கள் நொறுக்குத்தீனி உண்பதற்கு உட்கார வைத்தாள் .அப்போது பள்ளியின் உதவியாளர் தேனீொரை எடுத்து வந்து கொடுத்துவிட்டு ,தாரா ஏனம்மா இன்று உன் முகம் வாட்டமாக உள்ளது என்றார் .நன்றி கூறி தேனீரை வாங்கிக்கொண்டு ஏனென்று தெரியவில்லை நெஞ்சில் ஒரே பாரமாக உள்ளது என்று கூறினாள் .அதற்கு அவர் சூடாக தேனீரை குடியம்மா எல்லாம் சரியாகிவிடும் என்று கூறிச் சென்றார். சிறிது நேரத்தில் பள்ளியை பார்வையிட ஏதோ ஒரு அதிகாரி வருவதாக காவலாளி கூறிச் சென்றார். அவர் பார்வைக்கு தேவையான அனைத்து பதிவேடுகளையும் மேஜை மீது அடுக்கி விட்டு பாடத்தை துவக்கிய தாரா அப்படியே மயங்கி சரிந்தாள்.வகுப்பு பிள்ளைகள் பக்கத்து அறையில் இருந்த தோழி ஆசிரியையும் ,தலைமை ஆசிரியரையும் அழைத்து வந்தனர். தோழி ஆசிரியையும் தலைமை ஆசிரியரும் உடன் ஒரு ஆசிரியரை அழைத்துக்கொண்டு குழந்தை போல அவளை தூக்கிக்கொண்டு மருத்துவமனை சென்றனர்.அச்சிறிய மருத்துவமனையில் முதலுதவி ஊசி போட்டுவிட்டு, உடனே குடும்பத்திற்கு கூறி வேறு பெரிய மருத்துவமனையில் கொண்டு சென்று மருத்துவம் பார்க்க கூறினர். தாரா விற்கு கணவர் கிடையாது .அவள் மகனும் பதினெட்டு வயது பையன் உலகம் அறியாதவன் .மகளோ ஒன்பது வயது நிரம்பியவள். மாமியாரோ 83 வயது நிரம்பியவர் யாரிடம் இவளைப் பற்றி கூறுவது என்று யோசித்து அவளது தங்கை கணவருக்கு தகவல் கூறி வேறு பெரிய இருதய சிகிச்சை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கூறினர் .அங்கு அவளுக்கு உடனே இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் 5 லட்சம் முதல் 7 லட்சம் வரை செலவாகும் என்றனர்.தங்கையின் கணவர் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை உடனே அறுவை சிகிச்சை தொடங்குங்கள் என்று கூறி பணமும் செலுத்தினார்.மருத்துவமனையில் தந்தையே தாயுமானவராய் உடனிருந்து மகளைப் பார்த்துக் கொண்டார் .தாராவின் தாய் தாராவின் மாமியாருடன் இணைந்து குழந்தைகளை பார்த்துக் கொண்டார் .அறுவை சிகிச்சை முடிந்து நோய் தொற்று ஏற்பட்டு மேலும் அதிக நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஏறக்குறைய 60 நாட்கள் மருத்துவமனையை விட்டு வெளிவரும்போது,காப்பீட்டுத் தொகை நாலு லட்சம் தவிர்த்து 12 லட்சம் ரூபாய் பணம் செலுத்தி தன் உயிரை மீட்டு வந்து தந்தையற்ற தாராவின் குழந்தைகளுக்கு தாயை கொடுத்தார் தங்கையின் கணவர் . மயங்கி சரிந்த போது ஆசிரியத்தோழி, தலைமை ஆசிரியர் உடன் வந்த ஆசிரியர் தன் தாய் தந்தை தன் குழந்தைகளுக்கு தாயை மீட்டு தந்த தங்கையின் கணவர் , அறுவை சிகிச்சை செய்த மருத்துவர், உயிரை திருப்பி தந்த கடவுள் இவர்களுக்கு எவ்வளவு நன்றி செலுத்தினாலும் போதாது என்பதை உணர்ந்தே வாழ்கிறாள் தாரா.

                    இவள் அனுராதா.

 

 

8.K2K-00067

/////////// நன்றி செலுத்துதல் ////////////

   எட்டியப்பன் என் சித்தப்பாவின் மகன், சிறு வயதிலேயே தாயை இழந்தவன், தந்தை மறுமணம் செய்யப் பிறந்தவன் வேடியப்பன்.

            வேடியப்பணுக்கு நோட்டு வாங்கித் தந்த தந்தை தனக்கு பென்சில் வாங்கித் தர வில்லை என்று கோபித்துக் கொண்டு எங்கள் வீட்டுக்கு வந்தவன் தான் எட்டியப் பன்.அப்புறம் எல்லாமே எங்கள் வீடு தான்.

        படிப்பு, வேலை வாய்ப்பு, திருமணம் எல்லாமே எங்கப்பாவும் அவருக்குப் பின் தலைப்பட்டு நானும் செய்து வைத்தோம் எட்டிக்கு.

          என்னைப் பொறுத்தவரை எனக்கு எல்லாமே தாய் மாமன் தான், அரசு உதவி பெறும் பள்ளி எழுத்தராக இருந்தவர் அவர்.

     தமிழ் இலக்கிய தாகம் கொண்ட என்னை கல்லூரியில் கணிதப் பாடத்திற்கு தள்ளி விட்டவர் அவர் தான். கணிதப் பாடத்தில் ஆசிரியர் கிடைக்காததால் கணிதம் படிததால் தான் வேலை வாய்ப்பு என்பது  அவரது கணிப்பு.

        பட்டப் படிப்பு படிக்க வைத்து, கல்வியியல் படிப்பும் படிக்க வைத்து, தம் பள்ளியிலேயே பணியிலும் சேர வைத்தவரும் அவர் தான், குழந்தைப் பேறு இல்லாத அவர் என்னையும் என் தம்பியை யும் தன் பிள்ளைகளாகவேகருதி வந்தார் அவர்.

             ஒரே பள்ளியில் வேலை பார்த்ததால் ஏற்பட்ட உராய்வுகள் மட்டுமல்ல. குடும்ப வழக்குகளால் குடியிருந்த வீடுகளை இழந்து ஒரே வீட்டில் சில காலம் வசிக்க நேரிட்டதால் ஏற்பட்ட கசப்புகளும் என்னை என் தாய் மாமன் இடம் இருந்து தூரப் படுத்தி இருந்தன.

        திருமணமான நான் என் மாமனார் ஆதரவில் குடியிருக்க வீடு வாங்கி விட்டேன். புதிதாக உருவாகி இருந்த புற நகரில் மாமாவுக்கு இடம் வாங்கி வீடு கட்டினோம்.பொருள் அவர் தர உடல் உழைப்பை நல்கி 

உருவாக்கித் தந்தேன் நான்.

        கட்டும் போதே இரண்டு வீடுகளாகக் கட்டிய மாமா இன்னோர் வீட்டில் என்னையும் வந்து துணையாக குடியிருக்க சொன்னார்,கிட்ட உறவு முட்டப் பகை என்று நான் தயங்கினேன்..அது மட்டுமல்ல. தனக்குப் பிற்காலம் தான் வசிக்கும் வீட்டை என் தம்பிக்கு தர வேண்டும் என்றும் என்னிடம் சொன்னார்.

      இதற்கிடையில் என் உடன் பிறவாத தம்பி எட்டியப்பன் வேலை பார்த்து வந்த தனியார் நிறுவனம் மூடப் பட்டு வேலை இழந்து ஊருக்கு வர வெட்கப் பட்டு மாமனார் வீட்டில் சென்று குடியிருந்து வந்தான்.

         பக்கத்து வீட்டுக்கு குடி பெயர சொல்லும் மாமாவின் வற்புறுத்த லுக்கு விடை காண மாமாவிடம் பேசி எட்டியப்பனைக் கொண்டு வந்து மாமாவின் பக்கத்து வீட்டில் குடி போட்டேன்.

                இரண்டே மாதம் தான். எட்டி தான் வேலையை காட்டி விட்டான். என்னையும் என் தாய் மாமனையும் ஒட்ட விடாமல் செய்து விட்டான், என் மாமா குடியிருக்கும் வீடு என் தம்பிக்கு தான் என்ற செய்தி அவன் கவனத்துக்கு வந்தது தான் எல்லாவற்றுக்கும் காரணம்..

திடீரென மாமா ஒரு நாள் இறந்து போனார், என் மகன் கொள்ளி வைத்தான், எட்டியப்பன் தான் கொள்ளி வைக்க வேண்டும் என்று தலை  கீழாக நின்று பார்த்தான். ஊர்ப் பெரியவர்கள் இரத்தத் தொடர்பு உள்ள எனக்குத் தான் முதல் உரிமை என்று சொல்லி விட்டார்கள்.

       இந்த நிலையில் வீட்டை என்ன செய்வது? பிள்ளை இல்லாத சொத்து வேண்டாம் என்று என் தம்பி மனைவி நினைத்தாள்.சரி எட்டி யப்பணுக்கே கொடுத்து விடலாம் என்று நானும் என் தம்பியும் முடிவு செய்தோம்.

        திடீரென மின்னல் போல என் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது.

     எட்டி யப்பன் பெற்ற தகப்பனயே உதறிவிட்டு நம் வீட்டுக்கு வந்தவன்.வளர்த்து ஆளாக்கிய நமக்கும் மாமாவுக்கும் சண்டை ஏற்படுத்தி மாமாவின் வீட்டை அடைய நினைத்தவன்.இவ்வாறு நன்றி செலுத்தாத அவன் மாமாவின் மனைவியைக் கடைசி வரை சொத்து கிடைத்த நன்றிக்காக காப்பாற்றுவான் என்பது என்ன  நிச்சயம் என்று தோன்றியது. ஆதரவற்ற நிலையில் அல்லாடும் மாமியின் பிம்பம் என் கற்பனையில் நிழல் ஆடியது.

         ஊர்ப்பெரியவர்கள் துணையுடன் எட்டி யப்பண அந்த வீட்டிலிருந்து வெளியேற்றப் பட்டு தம்பி பெயருக்கு உரிமை மாற்றப் பட்டு மாமிக்குத் துணையாக அந்த வீட்டில் குடியேற நேர்ந்தது எனக்கு.

        மனைவியோடு சேர்ந்து மாமி வீட்டில் வசிப்பது  இரட்டைச் சவாரி போன்றது தான் எனக்கு.என்ன செய்வது மாமாவுக்கு செலுத்த வேண்டிய நன்றிக்கடன் உள்ளதே .

-அன்பழகன்

 

 

9.K2K 00068

விருதுநகரில் ஜெயராஜ் என்ற இளைஞர் ஒருவர் ஆசிரிய பணி முடித்து விட்டு ஆசிரியராக அடுத்த பள்ளி அல்லது கல்லூரி வேலைகளில் சேர்வதாக இருந்தார். அப்போது திடீரென கொரோனா வைரஸ் என்ற தொற்று கிருமி உலகெங்கும் பரவி வந்தது.

விடுமுறை நாட்களில் வீதியில் நிற்கும் அவலநிலை. வீட்டில் உள்ள சிறுசிறு வேலைகள் செய்யும் போது மனதுக்கு ஆறுதல் கூறுவதற்கு ஒரு குழு அமைப்பு சார்பில் கொரோனா கதைகள் வந்தது.

அக்குழுவானது ஒவ்வொரு சிறுகதைக்கும் 2 நாட்கள் கொடுத்து ஒரு மாதத்திற்கு 15 தலைப்புகள் என குழுவில் உள்ள அனைவரையும் சிந்திக்க வைத்தது.

குழுவில் 100 கதா ஆசிரியராக இருந்தால் அவர்கள் 100 கதையையும் சரி செய்து பிறருக்கு அனுப்ப வேண்டும்.  கதை அனுப்பும் ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டு இருந்தால் புலன வழியாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் சரி செய்து அனுப்பிட உதவுவார்கள்.

இடையில் நிறுத்தும் கதாசிரியர் என்றாலும் 2  நாட்களை விட 4 நாட்கள் கழித்து கதாசிரியர் அனுப்பினாலும் பொறுமையுடன் சரி செய்து அனுப்பும் பிரசன்னா, கமலேஷ், அஜீஸ் மற்றும் சுதா போன்று வழிநடத்தும் கொரோனா கதைகள் வழிகாட்டி ஆசிரியர்களுக்கும் ஜெயராஜ் நன்றி சொல்ல விரும்பினார்.

அருமையான தலைப்பாக நன்றி சொல்லல் என்ற தலைப்பு வந்ததால் ஜெயராஜ் சார்பாகவும் கொரோனா கதைகள் குழுவின் சார்பாகவும் கொரோனா கதைகள் வழிகாட்டினர் ஒவ்வொருவருக்கும் இக்கதை மூலம் நன்றி தெரிவிக்கிறார்.

மேலும் வழிகாட்டி ஆசிரியர்கள் இது போன்று பல அரிய செயல்களை அவர்கள் சாதித்துக் காட்ட வேண்டும் என தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவிக்கிறார் அவர் வழியில் நட்பு வட்டாரங்களும் நன்றி தெரிவிப்பார்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து கதையை முடிக்காமல் பெருங்கதையாக தொடர்வார். ஏனெனில் இத்தருணமே அவருக்கு நன்றி சொல்லும் வண்ணமாக அமைந்து.

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம், நன்றி மறப்பது நன்றன்று

நன்றிகள் தொடரட்டும் நட்புகள் வளரட்டும்

என்றும் நட்புடன்

ஜோ. ஜெயராஜ்

 

 

10.K2K-00078

 நன்றி சொல்லுதல்

#######################

சீலனும் சிவாவும் நெருங்கிய நண்பர்கள். இருவருமே நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். சீலனுக்கு படிப்பில் அதிக ஆர்வம். எப்பொழுதும் வகுப்பில் முதலாமிடம். ஆனால் சிவாவிற்க்கு படிப்பென்றாலே பயம்.

காலம் கடந்தது. சீலன் படித்த படிப்புக்கு ஏற்ற வேலையை ஏற்படுத்திக் கெண்டான். சிவா வீட்டிலுள்ள மரக்கறி தோட்டத்தில் வேலை செய்ய பழகிக் கொண்டான்.

சீலன் நந்தினி என்ற பெண்னை காதலித்து, திருமணம் செய்துக்கொண்டான். திருமணம் முடித்த இரண்டு மாதங்களிலேயே வெளியூருக்கு வேலையிடமாற்றம் கிடைத்து. தன் மனைவியுடன் சென்று விட்டான். திருமணத்திற்கு பின்பு சீலனுக்கும் சிவாவுக்குமிடையிலான சந்திப்பும் பேச்சுவார்த்தையும் இல்லாது போனது.

சீலன் குடும்ப பொறுப்புக்களை தலைவன் என்பதால் சுமக்க ஆரம்பித்தான். நந்தினியோ ஒரே பிரசவத்தில் இரண்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தாள். இருவரின் மண வாழ்க்கை அடுத்தவர் பார்த்து பொறாமைப்படுமளவு இருந்தது.

சீலன் பத்து வருடங்களுக்கு பின்பு, இன்று காலை அம்மன் கோயிலில் சிவாவைக் கண்டான். நரைத்த முடியுடன், முகத்தில் சோர்வுடன் கடவுளை மனமுருகிப் பிராத்தித்துக் கொண்டிருந்தான் சிவா. ஆனால் சிவாவுக்கு சீலனை அடையாளம் தெரியவில்லை.

"மச்சா......

எப்டியிருக்க. உன்ன பாத்து எவளோ? நாளாச்சி."

"நீங்க யாரு?"

"ஏய் நா சீலேன்டா......

உனக்கென்ன கண்ணு தெரியாம போச்சா.

என்று சிரிப்போடு நீண்ட காலத்துக்கு பின்பு பார்த்த ஆர்வத்தில் புன்னகையுடன் கேட்டான்.

ம்ம்ம்ம் .... என்றான் சிவா. இருவரும் நீண்ட நேரம் பேச ஆரம்பித்தார்கள். பள்ளியில் இருந்து பிள்ளைகளை அழைத்து வர வேண்டும் நேரமாகிவிட்டது. வாருங்கள் போவோம் என நந்தினி சினத்துடன் கூறினாள். மனமின்றி தன்னுடைய அலுவலக விலாசத்தினை கொடுத்துவிட்டு அவ்விடம் நீங்கினான்.

வழமைப் போல இரவு நேரத்தில் சீலன் உண்டது போக மீதமிருக்கும் அதே தட்டில் சாதம் போட்டு உண்ணுவாள். அன்றிரவு சீலன் பக்கத்திலிருந்து பரிமாறினாள். காலையில் சிவாவை கண்டதையும் அவனுடன் பேசியதையும் நினைத்துக் கொண்டவன். மிச்சமின்றி வைக்காமல் உண்டுவிட்டு தட்டிலும் தண்ணீர் ஊற்றி கைகளை கழுவி விட்டான். நந்தினி அதனை பொருட்படுத்தவில்லை. மலர்ந்த முகத்தோடு, பாத்திரங்களை கழுவி விட்டு வரும் நந்தினியிடம், நீ சாப்பிடலயா? என்று கேட்டான். எனக்கு பசியாக இருந்தது அதனால் நீங்கள் வரும் முன்பே சாப்பிட்டு விட்டேன் என்றாள்.

சட்டையை மீண்டும் போட்டுக் கொண்டு இரவென்றும் பாராமல், வெளியே கிளம்பினான்.

"இப்ப தானே வந்தீங்க. திரும்பவு போறீங்க"

"கொஞ்சமிருடி வாறே"

சற்று தூரம் அலைந்து நல்ல ஹோட்டலில் ருசியான சோறு பொதியொன்றினை வாங்கி வந்து இதை சாப்பிடு என்றான்.

ஆறு மாத கர்ப்பிணியான நந்தினியின் கண்கள் கலங்கின. ஹோட்டல் உணவு என்றால், சாப்பிட விரும்பும் கார்த்திக், சார்த்திக் இருவரையும் அழைத்து கொடுத்துவிட்டு தானும் உண்டுவிட்டு அறைக்கு சென்றாள்.

கட்டிலில் படுத்திருந்த சீலன் நந்தினியின் மடியில் தலை வைத்து படுத்தான். அவனது கண்களில் இருந்து வந்த கண்ணீரின் சூடு நந்தினியின் உடலை நனைத்தது.

"என்னாச்சிங்க"

"மன்னிச்சிடுமா... நா சாப்ட தட்டுல நீ தெனமு சாப்டுவனு தெரியு ஆனா இன்னைக்கு கோவில்ல சிவாவ சந்திச்சதுல இருந்து. என்னல னொர்மலா இருக்க முடில"

"ம்ம்ம்ம்ம.... யாருங்க அது" என்றாள்.

கோயிலில் நடந்ததை சொல்ல ஆரம்பித்தான். என்னுடைய நெருங்கிய நண்பனவான். ஒன்றாக ஒரே பள்ளியில் படித்தோம். நம்முடைய திருமணத்திற்கு பின் அவனை நான் சந்திக்கவே இல்லை. நாம் திருமணம் முடித்த ஐந்து வருடங்களுக்கு பின், அவனும் திருமணம் முடித்துள்ளான். அவளுடைய மனைவி இயல்பாகவே சினம் கொண்ட குணமுடையவளாம். எப்போதும் முகத்தை 'ம்' என்று வைத்திருப்பாள் என்று புலம்பினான்.

அதுமட்டுமல்ல .... இருவருக்கும் திருமணம் முடித்து ஐந்து வருடங்கள் கடந்தும் குழந்தை பாக்கியமும் கிடைக்கவில்லையாம். குழந்தை பெற்றுக் கொள்வதற்கான தகுதி சிவாவுக்கு இல்லையென்று அடிக்கடி அவனுடன் சண்டையிட்டு, அவள் அம்மா வீட்டுக்கு போய் விட்டாலாம். யாரோ ஒரு வயது போன பாட்டி அம்மன் கோயிலில் தொட்டில் கட்டினால், குழந்தை பாக்கியம் கிட்டும் என கூற, அதனை நம்பியவன் இன்று காலை அம்மன் கோயிலுக்கு செல்ல, அவளை அவன் தாய் வீட்டுக்கு சென்று அழைத்திருக்கிறான். ஆனால் அவள் அது ஒன்றுதான் உனக்கு குறை என்று கூறி அவமானப்படுத்தி அனுப்பியிருக்கிறாள்.

"சீ இப்டியு ஒரு பொண்ணா!"

"ம்ம்ம்ம்..... "

நம்முடைய அலுவலகத்தில் பியோன் வேலைக்கு புதிதாக, ஆள் தேவை அதற்கு அவனை இணைத்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.

அடுத்தநாள் சீலனின் அலுவலகம் வந்த சிவாவுக்கு எவ்வித நேர்முக பரீட்சையும்இன்றி வேலைக் கொடுக்கப்பட்டது. நாட்கள் நகர்தோடின. மாத வருமானமாக 30ஆயிரம் பெற ஆரம்பித்தான். நந்தினியின் வேண்டுகோளுக்கு இணங்க சிவாவும் அவன் மனைவியும் மீண்டும் வாழ ஆரம்பித்தார்கள்.

ஒரு வெள்ளிக்கிழமை மாலை நந்தினிக்கு பிரசவவலி வந்தது. அருகிலிருந்த சிவாவின் மனைவி துடித்துப் போனாள். வைத்தியசாலை கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை பிறந்தது. நந்தினியின் உயிரும் அவ்விடமே! அவ்வுலகைவிட்டு நீங்கியது..

அப்பச்சிளம் பெண் சிசுவை கையில் ஏந்தியவாறு சீலன் நந்தினியின் இறுதிக் கிரியைகளை செய்து முடித்தான். அன்றிரவு சிவாவின் மனைவியிடம் குழந்தையை ஒப்படைத்தான். என் மனைவியின் கடைசி ஆசையும் இதுதான். ஓர் நல்ல நாளில் குழந்தையில்லாத உங்களுக்கு குழந்தையை கொடுத்து, அருகிலிருந்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்றாள். ஆனால் விதியோ அவளை விட்டு வைக்கவில்லை.

அவள் ஆசைப்படியே! இக்குழந்தையை இன்று முதல் உன் குழந்தையாக ஏற்றுக் கொள். நீயும் சிவாவும் இதே வீட்டில் இருந்துக் கொள்ளுங்கள் என்றான். குழந்தையை கையில் வாங்கியவளது கண்கள் கலங்கின.

சீலனை பார்த்து எத்தனை ஜென்மம் எடுத்தாலும், நீங்கள் செய்த உதவியை மறக்கமாட்டேன். என்று நன்றி சொன்னாள். அன்றிலிருந்து மூன்று குழந்தைக்கும் தாயாகினாள்.

ஐந்தறிவு படைத்த விலங்கினங்களே தம்மைப் பராமரிப்பவருக்கோ அல்லது ஒரு வேளை உணவு தருபவருக்கோ நன்றி விசுவாசத்துடன் இருக்கும் பொழுது, இந்தப்பண்பு நம்மிடம் இல்லையென்றால், நாம் ஆறறிவு படைத்தவர்கள் என்று சொல்லத் தகுதியற்றவர்கள்.

 

            நன்றி!

பரமசிவம் இந்துஜா

இலங்கை.

 

 

11.K2K 00079

. நன்றிக்கடன்

"பரிமளத்தம்மா இறந்துட்டாங்க..நீங்க உடனடியா வந்தா நல்லது.. " அலைபேசியில் தகவல் வந்ததும் அருணின் கண்கள் கலங்கின. மைதிலியை அழைத்தான்.

"மைதிலி..நீயும் என்கூட வரணும்..ரொம்ப முக்கியமான ஒருத்தர் இறந்துட்டாங்க.. நான்தான் முன்ன நின்னு கொள்ளி போடப்போறேன்.. என்கூட வா மைதிலி..."

"நீங்க கொள்ளி போடற அளவுக்கு ..அவங்களுக்கும் நமக்கும் என்னங்க உறவு..." பட்டென்று கேட்டாள் மைதிலி.

"சொல்றேன்..இப்ப இல்ல.. போன காரியத்தை முடிச்சுட்டு வந்ததும்.."

பதில் பேசாமல் உடன் சென்றாள் மைதிலி.

"நல்லாத்தான் இருந்தாங்க.. நேத்து இரவு கடைசியா கடவுள்கிட்ட பிரார்த்தனை பண்ணிட்டு படுக்க போனவங்க காலையில எழுந்திருக்கவேயில்லை... டாக்டர் வந்து பார்த்துட்டு தூக்கத்துலயே உயிர் போயிட்டதா சொல்லிட்டாங்க தம்பி.. " முதியோர் இல்ல நிர்வாகி சொல்ல, இறந்துகிடந்த பரிமளத்தம்மாவை உற்று நோக்கினான் அருண்..சாந்தமான முகம் அவனை என்னவோ செய்தது..

நல்லபடியாக வாழ வேண்டியவர்.. அநாதையைப் போல பத்து வருடங்களாக இந்த இல்லத்தில் வாழ்ந்ததுக்கு தானுமொரு காரணம் என்பதில் நெஞ்சம் கனத்தது..கண்களில் கண்ணீர் துளிர்த்தது.. மேற்கொண்டு ஆகவேண்டிய காரியங்களை முடித்துவிட்டு வீடுவந்து சேர்ந்தபோது மிகவும் களைப்பாக இருந்தது...

மைதிலி இரவு உணவுக்குப்பின் அருணிடம் வந்து நின்றாள். அவள் கேட்பதற்குள்ளாகவே  அருண் சொல்ல ஆரம்பித்தான்.

"இப்ப உன்கிட்ட சொல்றதுல எந்த தப்பும் இல்லைன்னு தோணுது.. தான் இருக்கற வரைக்கும் தன்னைப்பத்தி யார்கிட்டயும் சொல்லக்கூடாதுன்னு பரிமளத்தம்மா கேட்டுகிட்டாங்க.. பிறந்தபோதே தாயை இழந்தவன் நான்..அப்பா கண்ணுக்கு கண்ணா.. கருத்தாதான் என்னை வளர்த்தார்...நான் மூணாம் வகுப்பு படிக்கும்போது படிப்புல ரொம்ப பின்தங்கி இருந்தேன்...அப்ப தெரிஞ்சவங்க மூலமா வீட்டுக்கு டியூசன் சொல்லிக்கொடுக்க வந்தவங்கதான் பரிமளத்தம்மா.. கல்யாணமாகி ஒரே வருசத்துல புருசனை விபத்துல இழந்தவங்க..அவங்களால படிப்புல முதல்நிலைக்கு உயர்ந்தேன்...அப்பாவுக்கு அவங்க மேலே நல்ல அபிப்ராயம் ஏற்பட்டுச்சு.. பரிமளத்தம்மாவை திருமணம் பண்ணிகிட்டா நல்லதுன்னு நினைச்சாரு..ரெண்டு வீடும் கூடிப்பேசி திருமணத்தேதியும் முடிவாயிடுச்சு..அப்பதான் சொந்தக்காரங்க பண்ண சில்மிஷத்தால என்மனசுல மாறுதல் ஏற்பட்டுச்சு..இன்னொரு கல்யாணம் பண்ணினா அப்பாவோட அன்பு கிடைக்காதுன்னு நினைச்சு..அழுது கலாட்டா பண்ணினேன்.. அப்பாவுக்குத் தெரியாம பாட்டி வீட்டுக்கு  போயிட்டேன்..அப்பா துடிச்சு போயிட்டாரு..கல்யாணம் பண்ண மாட்டேன்னு சத்தியம் பண்ணி சமாதானப்படுத்தி என்னைக் கூட்டிகிட்டு வந்தாரு..நான்தான் முக்கியம்னு பரிமளத்தம்மாகிட்ட நிலைமைய சொல்லி மன்னிப்பு கேட்டாரு..அவங்களும் விலகிப் போயிட்டாங்க..அப்பா மூணு வருசத்துக்கு முன்னால சாகற தருவாயில என்னைக் கூப்பிட்டாரு..யாருமே ஆதரவில்லாத நிலையில தள்ளாத சூழ்நிலையில மறுபடியும் பரிமளத்தம்மாவை பார்த்ததாகவும்..மனிதாபிமான அடிப்படையில நல்ல முதியோர் இல்லத்துல சேர்த்ததாகவும்..தனக்குப்பிறகு அவங்களோட பராமரிப்புச் செலவை நான் ஏத்துக்கணும்னு சொன்னாரு..

தெரியாத வயசுல நல்ல உள்ளங்களைச் சேரவிடாம தடுத்துட்டேன் மைதிலி..விவரம் தெரிஞ்சப்போதான் எனக்கே என்மேல கோபம் வந்தது..காலம் கடந்துபோச்சு..அப்பா இறந்தப்புறம் கடந்த மூணு வருசமா அவங்களை வாரந்தோறும்போயி பார்த்துட்டு வருவேன்..மனம்விட்டு என்கிட்ட மகனைப்போல பேசுவாங்க..அன்னைக்கு என் வாழ்க்கைக்காக தன் எதிர்காலத்தை தியாகம் செஞ்ச அவங்களுக்கு நன்றிக்கடனா.. மகனா நின்னு இன்னிக்கு என்னோட கடமையை நிறைவேத்தியிருக்கேன் மைதிலி.."

மைதிலி கவனமாகக் கேட்டபின் சொன்னாள்.

"இறந்த அவங்க மனசு குளிரும்படியா இன்னொன்னும் நீங்க செய்யணுங்க.. அவங்களோட. போட்டோவை மாமாவோட போட்டோவோட சேர்த்து ஹால்ல மாட்டணும்..காலம் அவங்களை சேர்த்து வைக்கலை.. இறப்பாவது ரெண்டு பேரையும் இணைக்கட்டும்" என்று சொன்ன மைதிலியை நன்றி ததும்ப பார்த்தான் அருண்.

கருத்து: சிறுவயது தீர்மானங்களை காலம் மறுபரிசீலனை செய்ய வைக்கிறது; ஆனால் சில தவறுகளைத் திருத்திக்கொள்ள வாய்ப்பு மீண்டும் கிடைப்பதில்லை...!

பெயர் கி. இலட்சுமி

 

 

12.K2K 00080

 நன்றி உணர்வு

அன்று பள்ளியின் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி நாள். அவர்களுக்குப் பள்ளியில் பிரிவுபசார விழா நடந்து கொண்டிருந்தது.

அன்று தான் பள்ளியின் சிறந்த மாணவியும் அறிவிக்கப் போவதால் மாணவ மாணவிகளிடையே பயங்கர எதிர்பார்ப்பு நிலவியது. அந்த அறிவிப்பு நிகழப் போகும் அந்தத் தருணத்திற்காக ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்தார்கள்.

 மாணவர்கள் மத்தியில் அவ்வளவு மதிப்பு வாய்ந்த விருது. அதனால் தான் அவ்வளவு ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

தேர்ந்தெடுக்கப் படும் மாணவிக்கு ஒரு சான்றிதழும் கேடயமும் கிடைப்பதோடு மேற்படிப்பிற்கான ஒரு வருடக் கல்விச் செலவு முழுவதையும் பள்ளி நிர்வாகத்தினர் ஏற்றுக் கொள்வார்கள்.

மதிப்பெண்கள் மட்டும் வைத்துப் பார்க்காமல், நடவடிக்கை, படிப்பைத் தவிர மற்ற துறைகளில் காட்டும் ஆர்வம், ஆசிரியர்களிடமும் மற்ற மாணவ மாணவியருடனும் பழகும் முறை. நடத்தை என்று பல்வேறு விஷயங்களிலும் மதிப்பீடு செய்து ஒரு தனிப்பட்ட குழு அந்தச் சிறந்த மாணவன் அல்லது மாணவியின் பெயரைப் பள்ளி நிர்வாகத்திற்குப் பரிந்துரைக்கும்.

எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்தத் தருணம் வந்துவிட்டது, அறிவிப்பைத் தர மேடையில் பள்ளி முதல்வர் மைக் அருகில் வந்து விட்டார்.

" இந்த வருடத்தின் சிறந்த மாணவி விருது பெறுபவர் மிஸ். இந்துமதி",

என்று சொல்ல மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று நீண்ட நேரம் நிறுத்தாமல் கரவொலிகளை எழுப்ப அந்த அரங்கமே அதிர்ந்தது.

விருதினை வாங்கிக் கொள்வதற்காக இந்துமதி தனது ஊன்றுகோல்களின் உதவியோடு மேடைக்குச் சென்றாள்.

ஆமாம்; இந்துமதி ஒரு மாற்றுத் திறனாளி. சிறு வயதில் ஏற்பட்ட விபத்தில் வலது காலை முழங்கால் முட்டிக்குக் கீழே இழந்திருந்தாள். செயற்கைக் கால் பொருத்தப் பட்டிருந்தது.

விளையாட்டுத் துறை ஒன்றைத் தவிர மீதி எல்லாவற்றிலும் பங்கு கொண்டு பல்வேறு பரிசுகளையும் வெற்றி பெற்றவள். வெற்றி, தோல்வி பற்றிக் கவலைப்படாமல் எல்லாப் போட்டிகளிலும் இந்துமதி ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் பழக்கம் உடையவள்.

சக மாணவர்களுக்கு உதவி செய்யவோ இல்லை ஆசிரியர்களிடம் பணிவுடன் நடந்து கொள்வதற்கோ என்றுமே இந்துமதி தவறியதில்லை.

விருதினை விழாவிற்கு வருகை தந்திருந்த பிரபலத்தின் கையால் வாங்கிக் கொண்டு நன்றியுரை வழங்குவதற்காக மைக்கின் அருகே வந்து நின்றாள்.

" என்னுடைய வெற்றிக்கு முழுவதும் காரணமாக இருப்பது என்னுடைய வகுப்புத் தோழி சிந்துஜா தான், அவளுக்குத் தான் முதலில் நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறேன்", என்று இந்துமதி தனது தன்றியுரையைத் தொடங்கினாள், எல்லோருக்கும் பயங்கர அதிர்ச்சி மற்றும் ஆச்சர்யம், வியப்புடன் இந்துமதி பேசுவதை கவனித்தார்கள்.

சிந்துஜாவும் நல்ல படிப்பாளி மற்றும் திறமைசாலி தான். ஆனாலும் சிந்துஜா எதற்கெடுத்தாலும் இந்துமதியோடு போட்டி போடுவாள். சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூடச் சண்டை போடுவாள். சில சமயம் அவர்கள் கலந்து கொண்ட போட்டிகளில் எதிலாவது சிந்துஜாவிற்குப் பரிசு கிடைக்காமல் இந்துமதிக்குப் பரிசு கிடைத்தால் நடுவர்களிடம் சென்று விவாதம் செய்வாள். அவர்களுடைய முடிவை ஏற்றுக் கொள்ள மறுத்து எதிர்த்துப் போராடுவாள்.

இந்தக் காரணங்களால் தான் அனைவருக்கும் ஆச்சர்யம். இந்துமதி தனது உரையைத் தொடர்ந்தாள்.

" நீங்கள் அனைவருமே என்னைக் கருணையுடனும் அனுதாபத்துடனும் தான் பார்த்தீர்கள், ஆனால் எனது அருமைத் தோழி சிந்துஜா மட்டும் தான் என்னை அவளுக்கு சமமாகக் கருதி என்னுடன் போட்டி போட்டாள். அவளுடைய அந்த அணுகுமுறை தான் எனக்கு சுயபச்சாதாபம் ஏற்படாமல் தடுத்து என்னை இயல்பாக நடமாட வைத்தது. அதனால் சிந்துஜாவிற்குத் தான் எனது முதல் நன்றி", என்று சொல்லி விட்டு அனைத்து ஆசிரியர்களுக்கும் சக மாணவர்களுக்கும் நன்றி கூறி விட்டுப் பரிசுடன் கீழே இறங்கிய இந்துமதியை சிந்துஜா ஓடி வந்து கட்டிக் கொண்டு கண்ணீர் வடித்தாள். தன்னை வெறுத்த அவள் மனதையும் தனது அன்பால் இந்துமதி வென்று விட்டாள். இனி அந்தத் தோழிகளின் நட்பு என்றும் தொடரும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு அனுதாபத்தை விட சம அந்தஸ்தும் மதிப்பும் அதிகமாகத் தேவை. நன்றி கூறுவது ஒரு சம்பிரதாயமாக இல்லாமல் உள்ளத்தில் இருந்து உணர்வு பூர்வமாக வர வேண்டும்.

-புவனா

 

 

13.K2K 00081

நன்றி செலுத்துதல்

"யப்பா..."

"சொல்லுடா வேலு..."

"எனக்கு ஷூ வாங்கணும்பா... எங்க பள்ளிக்கூடத்துல நடக்கிற மாவட்ட அளவு விளையாட்டுப் போட்டியில ஓட்டப்பந்தயத்துக்கு என்ன தேர்வு செஞ்சுருக்காங்க. அதுல ஷூ இருந்தாத்தான் ஓட முடியும்னு சொல்லிட்டாங்க...."

"அடிக் கழுதைய... அரை வயித்துக் கஞ்சிக்கே வக்கிலயாம்...இதுல துரைக்கு ஷூ கேக்குதோ.... காசு கீசு கேட்டுட்டு வந்துராத..." மிரட்டிவிட்டுப் போனார் அப்பா.

வேலு, பன்னிரெண்டு வயதுப் பையன். ஏழைக் குடும்பம். அப்பா வேறு ஒருவரின் நிலத்தில் விவசாயம் செய்கிறார். அம்மா பத்து பாத்திரம் தேய்க்கிறாள். அக்கா செண்பகம் எப்போதாவது அம்மாவுக்கு உதவியாய் செல்வதுண்டு.

சத்துணவு கொடுப்பார்கள் என்ற ஒரே காரணத்திற்காக பள்ளிக்குச் செல்வான். சுமாராகப் படிப்பான் ஆனால் விளையாட்டுகளில் கில்லாடி. அதுவும் ஓட்டப்பந்தயம் என்றால் உயிர். அதில் அவனை ஜெயிக்க இதுவரை  பள்ளியில் எவருமில்லை. எந்த ஒரு விளையாட்டுப் போட்டி நடந்தாலும் முதல் ஆளாகப் பேர் கொடுத்துவிடுவான். வகுப்புகள் பிடிக்கவில்லை என்றால் நேரே மைதானத்திற்குச் சென்று ஓடத்தொடங்கிவிடுவான்.

தெருவோர தேநீர்க் கடை டிவியில் ஒலிம்பிக் போட்டிகள் ஒளிபரப்பாகின. யாரோ ஹுசைன் போல்டாம்....அவர்தான் உலகிலேயே வேகமான மனிதராம்... பார்த்தவுடனே அவர்போல ஓட வேண்டுமென்ற ஆவல் கொண்டு தினமும் பயிற்சி செய்தான். அதன் பலனாக மாவட்ட அளவில் நடக்கும் ஓட்டப்பந்தயத்துக்கு அவன் பெயர் தேர்வானது.

மிகுந்த மகிழ்ச்சி அடைந்தபோதும் ஒரு சங்கடம் உருவாகியது. அவனுக்கு வெறும் காலில் ஓடியே பழக்கம். ஆனால் போட்டியில் கலந்துகொள்ளக் கண்டிப்பாக ஷூ அணியவேண்டுமென்று குறிப்பிட்டிருந்தனர். ஷூ வாங்கக் குறைந்தது ஐந்நூறு ரூபாயாகும். அப்பாவிடம் கேட்டு நன்கு வாங்கிக் கட்டிக்கொண்டான்.

செய்வதறியாமல் நின்றபோது வீட்டினுள்ளிருந்த அக்காவின் குரல் கேட்டது.

"எலெய் வேலு...இங்கிட்டு வாடா..."

"சொல்லுக்கா..."

"இந்தா புடி...இதுல ஐந்நூறு ரூபா இருக்கு. ஸூ வாங்கிக்க..."

"ஐயோ வேணாங்க்கா... நீ சுடிதார் வாங்கணும்னு ஆசையா சேத்து வெச்ச பணமாச்சே..."

"சுடிதார்லாம் அப்புறம் வாங்கலாம்... ஆனா நல்ல வாய்ப்பு உனக்கு இன்னொரு முறை கிடைக்காது...போய் நல்லதா வாங்கிக்க..."

செண்பகம் எப்போதும் பாவாடை தாவணி தான் கட்டுவாள். வருடத்திற்கு இரண்டு முறை புதுத்துணி எடுத்துத் தருவார்கள். அவளுக்குச் சுடிதார் அணியவேண்டுமென்று நீண்ட நாள் ஆசை. சிறுகச்சிறுக ஐந்நூறு ரூபாய் சேமித்திருந்தாள். இவனுக்காக யோசிக்காமல் சட்டென்று கொடுத்துவிட்டாள். வேலு மனமுறுகிப் போனான். பணத்தை வைத்து ஷூ வங்கிக்கொண்டான்.

ஒரு வாரம் கழித்து...

"யக்கா....."

"என்னாச்சி வேலு...."

"இந்தா புடி..." என்று அக்காவின் கையில் ஒரு பையைத் திணித்தான்.

அதைப் பிரித்துப் பார்த்த அக்காவின் கண்ணில் ஆனந்தக் கண்ணீர். அதனுள் இரண்டு சுடிதார்கள் அதுவும் அவளுக்குப் பிடித்தமான ஊதா மற்றும் மஞ்சள் நிறங்களில்.

"உனக்குக் காசு ஏதுடா...?"

"ஒட்டப்பந்தயத்துல நான் ரெண்டாவதா  வந்ததனால ஆயிரம் ரூபாய் பரிசு கொடுத்தாங்க. அதுல தான் வாங்குனேன்...." என்றான்.

தான் செய்த உதவிக்கு நன்றி செலுத்தும் விதமாக நடந்து கொண்ட தம்பியை நினைத்துப் பெருமிதம் அடைந்தாள். லேசாய் அவன் தலைக் கோதி நெற்றியில் முத்தமிட்டாள். பின்னர் சுடிதாரைப் போட்டுப் பார்க்க எடுத்துச்சென்றாள்.

வேலு இரட்டிப்பு மகிழ்ச்சியோடு மைதானத்தை நோக்கிப் படையெடுத்தான்.

நீதி: பலனை எதிர்பாராமல் உதவுங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு உதவிக்கும் இறைவன் இருமடங்கு அதிகப் பலன் தருவார்.

 

 Narmada

 

 

14.K2K-00098

நன்றி செலுத்துதல்     

   கீழ்வானம் கருமை மாறி செம்மை பூசத் தொடங்கிக் கொண்டிருந்தது. தன் குடிசையில் உறக்கம் களைந்துபாயில் புரண்டு படுத்த அன்னம் தன் அருகில் தாயை அண்டி சுருண்டிருந்த தன் இரு மகள்களை கனிவுடன் பார்த்தாள். சுவரில் அவளது குடிகார கணவனின் புகைப்படம் மாலையுடன் தொங்கிக் கொண்டிருந்தது. முதல் நாள் நடந்த நிகழ்வுகள் அவள் மனதில் படம் போல் ஓடத் தொடங்கின.

 

       அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் தமிழ்ச் செல்வி அதே பள்ளியில் 6-ஆம் வகுப்பு படிக்கும் தன் தங்கை கலைச் செல்வியுடன் தன் வீட்டுக்குள் வந்ததும் வராததுமாக தன் தாயைத் தேடினாள். வழக்கம் போல் வியாபாரத்துக்கு போய்விட்டு திரும்பியிருந்த அன்னம் கொல்லையில் தங்களின் வாழ்வாதாரமான 4 கொய்யா, 2 நெல்லி, 2 முருங்கை, 2 வாழை மரங்கள் பூச்செடிகளைச் சுற்றி பெருக்கிக் கொண்டிருந்தாள். அவளது குடிசை வீட்டைச் சுற்றி இருந்த சிறிது இடத்தில் வேலி கட்டி கத்தரி, அவரை, வெண்டை, கீரை என செடி கொடிகளை வளர்த்திருந்தாள். அவற்றிலிருந்து கிடைக்கும் காய், கனி, கீரை, பூ இவற்றை தலையில் கூடையில் சுமந்து சென்று தெருத் தெருவாக வியாபாரம் செய்வதே அன்னத்தின் பிழைப்பு. இதில் வயிறு வாடாமல் அவர்களது வாழ்க்கைச் சக்கரம் சுழன்று கொண்டிருந்தது.

         கொல்லையில் தன் தாயைக் கண்ட தமிழ்ச் செல்வி ஓடி வந்து கட்டிக் கொண்டாள். தன் மகளை புன்னகையுடன் நோக்கிய அன்னம், என்னடி இவ்வளவு சந்தோஷம் என்றாள். அதற்கு மகள், அம்மா நம்ம பகுதியில் உள்ள பள்ளிகளுக்குள் நடந்த பேச்சுப் போட்டியில நான் முதலிடத்தில் ஜெயிச்சுருக்கேன். நம்ம மாவட்ட அளவில் நடக்குற போட்டியில கலந்துக்க என்னை தேர்ந்தெடுத்து இருக்காங்கம்மா. அங்கேயும் பேசி  ஜெயிச்சுட்டேனா நம்ம மாவட்ட ஆட்சியர் கையால பரிசும் பாராட்டும் கிடைக்கும். தலைப்பு என்ன தெரியுமாம்மா, 'நன்றி செலுத்துதல்'. எங்க டீச்சர் என்னை நல்லா தயார் செஞ்சுட்டு வர சொன்னாங்க. நான் யாருக்குமா நன்றி சொல்ல?  எப்படி சொல்ல? உனக்குதான் நன்றி சொல்லனும்னு எனக்கு தோணுதும்மா, எள்றாள்.

         கிணற்று பக்கத்தில் இருந்த துவைக்கும் கல்லில் அமர்ந்த அன்னம், சிறிது யோசனைக்குப் பின் தன் மகளிடம் அன்புடன் கூறினாள், இங்க பாருடி தமிழு நாம இந்த உலகத்துல நன்றி சொல்லனும்னா இந்த இயற்கைக்கும், பூமிக்கும் தாண்டி நன்றி சொல்லனும். நாம பிறந்ததுல இருந்து சாகுற வரை நம்மள தாங்குறது இது ரெண்டும்தான். நம்ம கைய நம்பி நம்பிக்கையா உழைச்சோம்னா என்னைக்கும் இயற்கை நம்மள கை விடாதுடி. நமக்கு அன்னம் தண்ணீர் தர இயற்கைக்கு நன்றி செலுத்துறது எப்படி தெரியுமாடி, அந்த இயற்கைய பாழாக்காம இருந்தாலே போதும். கண்ட கண்ட செயற்கை உரம், பூச்சிக்கொல்லி மருந்த போட்டு மண்ண மலடாக்காம இருந்தாலே போதும். வேற எதுவும் வேண்டாம். இப்போ இயற்கைக்கு எதிரான இன்னொரு பிரச்சனை பிளாஸ்டிக். இத எவ்வளவுக்கு எவ்வளவு மண்ணு மேல தூக்கி எறியுறமோ, அது இயற்கைய சமாதி கட்டுறதுக்கு சமம், என்றாள் அன்னம்.

         பிரம்மிப்புடன் தன் தாயைப் பார்த்த தமிழ்ச் செல்வி, அம்மா சூப்பர்மா. நீங்க சொல்றதுதான் சரி. இயற்கைக்கு நன்றி சொல்லல் தலைப்புலயே நான் பேச்சுப் போட்டியில பேசப் போறேன்மா. அதுமட்டும் இல்லமா பெரியவங்களா வளர்ந்து என்ன படிக்கப் போறிங்கனு டீச்சர் இன்னைக்கு வகுப்புல கேட்டாங்க. அப்போ எனக்கு தெரியல. இப்போ அதுக்கும் விடை கிடைச்சுடுச்சுமா. நான் கல்லூரியில் விவசாயம் சார்ந்த படிப்பில்தான் சேரப் போறேன். இயற்கையோடு இணைந்த வாழ்வுதான் இனிய வாழ்வுனு புரிஞ்சிக்கிட்டேன்மா என மகிழ்வுடன் கூறினாள்.

       சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்; அதனால் உழந்தும் உழவே தலை.

 

-கவிதா

 

 

15.K2K 00099

 " நாதஸ்வர ஓசையிலே

தேவன் வந்து பாடுகிறான் "

அடுத்த தெருவில் இருந்த கல்யாண சத்திரத்தில் இருந்து மிதந்து வந்த பாடல் ரகுவின் கவலையை அதிகம் ஆக்கியது.  தங்கைக்கு கல்யாணம் முடிவாகி, எல்லா வேலைகளும் கிட்டத்தட்ட முடிந்து விட்டது.  இன்னும் பத்து நாளில் கல்யாணம்.

அப்பா இல்லாத குடும்பம் ஒரே தங்கை. ரகு ஓரு சின்ன வியாபாரி.  படிக்கும் தம்பி வேறு.  அப்பாவி அம்மா அப்பா ஊருக்கு உபகாரி.  கேட்பவருக்கு அள்ளி கொடுத்த வள்ளல்.  தனக்கு என்று ஓரு சேமிப்பும் இல்லை.

தான் நல்லா இருந்து குடும்பத்தை காப்பாற்றுவோம் என்று தெம்பில் இருந்ததால் சேமிக்காமல் இருந்து விட்டார்.

திடிர்னு ஓரு விபத்தில் ஓரு குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்யம்போது அவர் உயிர் போயிற்று.

லாரி டிரைவர் மேல் தப்பு இல்லை, வெளி ஊரில் நடந்ததால் என்ன ஏது என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை.  சொந்த சின்ன வியாபாரம் அப்பா போனபிறகுதான் தெரிந்தது அவர் கடன் சுமை.

ரகுவுக்கு அப்போது இருபது வயது டிகிரி முடித்துவிட்டு மேல் படிப்பு கனவில் இருந்தவன் தலையில் வீட்டு சுமை இறங்கியது ரகு பொறுப்பான பையன் சிறு வயதில் கவனமாக பிரச்சினைகளை கையாண்டு சற்று முன்னுக்கும் வந்து விட்டான்.

ஆயிற்று பத்து ஆண்டுகள் தங்கைக்கு கல்யாணம் பண்ணிவிட்டுதான் அப்புறம் தன்னை பற்றி யோசிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தில் இன்றளவும் கட்டை பிரமச்சாரி. தங்கை படிப்பு ஏறவில்லை. வீட்டு வேளைகளில் திறமை. மிகவும் நல்ல பெண். அப்பா ஊருக்கு உபகாரி ஆகி தங்களை தவிக்க விட்டதை கூட தப்பாக நினைக்காமல் அவரை அவரின் தன்னலமற்ற சேவையை போற்றும் குணம். அவரை தெய்வமாக வழிபடும் குணம் எல்லோருக்கும் இருந்தது அதனால்தான் தங்கை கல்யாண பத்திரிக்கையில் கூட கடவுள் படம் போல் அப்பா படத்தை அச்சு அடித்து இருந்தான்.

கடவுள் நல்லவர்களை எப்போதும் சோதிப்பர், கல்யாண செலவுகளுக்கு பணம் சொல்லி வைத்த இடத்தில் இருந்து கிடைக்கவில்லை அதனால் அவனுக்கு மிகுந்த மன உளைச்சல்.  இப்போது கூட ஓரு பைனான்சியர் பார்த்து அதிக வட்டிக்கு கடன் கிடைக்குமா என்று கேட்கத்தான் கிளம்பி கொண்டு இருக்கிறான். தன் கணவர் படத்துக்கு பூ வைத்து கொண்டிருந்த அம்மா

"கவலை படாதே ரகு,

உங்க அப்பா உன்னை காப்பாற்றுவார் " என ஆறுதல் வார்த்தை கூற

" நீ கவலை படாதே அம்மா நிச்சயம் வழி கிடைக்கும்.  அப்பா செய்த நல்ல காரியங்கள் நமக்கு வழி காட்டும் "என ஆறுதல் கூறினான்.

அப்போது தொலைபேசி சத்தம் போட எடுத்து பேசிய ரகு பாப்பரப்புடன் அம்மாவிடம்

" அம்மா சம்மந்தி மாமா வந்து கொண்டு இருக்கிறாராம் காபி டிபன் ஏற்பாடு செய்.  ரம்யாவை முகம் கழுவி பளிச் என்று இருக்க சொல் " என்று பேசி முடிப்பதற்குள் வாசலில் ஓரு படகு கார் வந்து நின்றது.

மாமாவுக்கு கார் இல்லையே யார் என்ற யோசனையுடன் தெருவுக்கு விரைந்தான், காரில் இருந்து சம்பந்தியுடன் ஓரு வடநாட்டு குடும்பம் இறங்கியது

உள்ளெ வந்தவர்கள் நேராக அப்பா படத்திற்கு முன் போய் நிற்க கார் டிரைவர் தட்டு தட்டாக பழம் இனிப்புகள் மாலை என படத்தின் முன் வைத்தார்.  ரகு குடும்பத்திற்கு ஒன்றும் புரியவில்லை.

படத்திற்கு ஓரு நமஸ்காரம் செய்துவிட்டு குடும்பம் அவர் முன் அமர்ந்து ஐந்து நிமிடம் பிரார்த்தனை செயதது விஷயம் புரியாவிட்டாலும் ரகுவும் அதில் கலந்து கொண்டான், பிறகு அம்மாவிடவும் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய பின் சோபாவில் அமர்ந்தனர்; சம்பந்தி, 

" இவர் உலகம் முழுவதும் கிளைகள் கொண்ட ஓரு நிறுவன தலைவர் இது அவர் மனைவி இது அவர் பிள்ளை"   என அறிமுகம் செய்தார். ரகுவுக்கு அந்த கம்பெனி தெரியும் மிக பெரிய கம்பெனி. பெரிய மனிதர் ரகுவிடம்", தம்பி ஒன்னும் கவலை பட வேண்டாம். குழம்ப வேண்டாம்.  இதோ என் பையன் ஒரே பையன் என் அத்தனை சொத்துக்கும் ஒரே வாரிசு இவன் பிறந்தவுடன் என் மனைவி கர்ப்பப்பை எடுத்து விட்டதால் வேறு வாரிசும் இல்லை இவனைத்தான் உங்கள் அப்பா பத்து வருடம் முன்பு காப்பாற்றினார்.  அப்போது இவன் சின்ன பையன் விடுமுறைக்கு இங்கு வந்தபோது நடந்த சம்பவம் வேலைக்காரர்களோடு அவன் போனதால் சரியான விவரம் யாருக்கும் தெரியவில்லை.  இங்கு அப்பா அம்மா வயது ஆனவர்கள் அதனால் யாருக்கும் என்ன நடந்தது என்று சொல்லவில்லை

வெகு நாட்கள் கழித்து பையன் பம்பாய் வந்தப்புறம் அவன் சொல்லத்தான் நாங்கள் விசாரித்து உங்கள் அப்பாவின் தியாகம் தெரிந்தது உங்கள் அப்பா அப்போது வியாபார நிமித்தம் ஆக இங்கு வந்திருக்கார் போல கேஸ் எதுவும் சரியாக ரெஜிஸ்டர் செய்யவில்லை அதனால் மன உளைச்சலுடன் நன்றி கடன் எப்படி அடைப்பது என கஷ்டப்பட்டு கொண்டு இருந்தோம்.  என நீளமாக சொல்லி நிறுத்த சம்பந்தி தொடர்ந்தார்.

இவர் என் பாஸ் உறவு.  அவர் வீட்டில் கல்யாண பத்திரிக்கையில் அப்பா படத்தை பார்த்த பையன் தன்னை இவர்தான் காப்பாற்றினார் என்று சொல்ல உடனே என்னை பார்வை வர நான் இங்கு அழைத்து வந்து விட்டேன்

பெரிய மனிதர் கலகப்பாக

"தங்கச்சி கல்யாணமாமே.  இது என் குடும்பம் கல்யாணம் என் பொறுப்பு இது நன்றி கடன் இல்லை என் அப்பாவுக்கு நான் செய்யும் கடமை.  அப்பா என் குலத்தை வாழ வைத்தார்.  நான் அவர் குடும்பத்தை தத்து எடுக்கிறேன் நீங்கள் எல்லோரும் எங்கள் சென்னை வீட்டுக்கு வந்து விட வேண்டும் சென்னை யூனிட் தம்பி ரகு உன் பொறுப்பு என்று சொல்லி கொன்டே போக ரகு கண்ணில் நீர் மல்க அப்பா படத்தை பார்த்தான் சரியாக அப்பா படத்தில் இருந்து ஓரு பூரகு கையில் விழுந்தது.

"ஒருவருக்கு செய்த நன்றி என்று பலன் தரும் என்று என்ன வேண்டாம்.  வேரில் தண்ணீர் ஊற்றிய தென்னை மரம் தலையில் காய் தருவது போல அந்த நன்றிக்கும் பலன் கிடைக்கும் "

 

KK MADAM

 

 


Comments

Popular posts from this blog

Father

சுய விருப்ப கதைகள்

LGBTQ & DISABILITY